Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 29, வெள்ளிக்கிழமை
Johnsan Bastiampillai / 2021 செப்டெம்பர் 21 , பி.ப. 01:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
லக்ஸ்மன்
கொரோனா வைரஸின் பேகமான பரவல் அச்சம் இருந்து கொண்டிருக்கையில், ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணையகத்தின் அமர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்த நேரத்தில், இலங்கையின் கட்டுநாயக்கா விமான நிலையத்துக்குத் தாக்குதல் அச்சுறுத்தல், நாரேகஹம்பிட்டி வைத்தியசாலைக் கழிப்பறைக்குள் கைக்குண்டு மீட்பு, யாழ்ப்பாணம், கொடிகாமத்தில் இரண்டு வெடிகுண்டுகள் மீட்பு, திருகோணமலை, மூதூரில் இரண்டு கிளைமோர்கள் மீட்பு என்றெல்லாம் செய்திகள் கடந்த வாரத்திலிருந்து தொடர்ச்சியாக வெளிவந்தவண்ணமிருக்கின்றன.
நேரடியாகச் சொன்னால், கடந்த 13அம் திகதி முதல் சர்வதேச ரிதியில் எழுந்திருக்கும் அழுத்தங்கள் இலங்கையில் பாதுகாப்பு அச்சுறுத்தல் வடிவத்திலும் எதிரொலிக்கின்றன என்றே இவற்றைக் கொள்ள முடிகிறது. ஏன் இவ்வாறான வெடிபொருள்கள், குண்டுகள் இன்னமும் வெளிவருகின்றன என்பது திரைமறைவானவையாகவே இருக்கின்றன.
1978களுக்குப் பின்னர் இருந்து, பல்வேறு ஆயுதப் போராட்ட இயக்கங்கள் உருவாகி, இப்போது அவை அரசியல் கட்சிகளாக மாறிவிட்டன. விடுதலைப்புலிகள் அமைப்பினர் தற்போது இல்லாமல் ஆக்கப்பட்டுவிட்டார்கள். 2009ஆம் ஆண்டு போர் முள்ளிவாய்க்காலில் மௌனிக்கப்பட்டது. ஆனால், இந்த 12 வருடங்களின் பின்னரும் வெடிக்காத குண்டுகள் மக்கள் கண்களில் படும் வண்ணம் இருக்கின்ற அளவுக்கு நிலைமை காணப்படுகிறது.
ஒன்றை மறைப்பதற்கு இன்னொன்று என்பது போல், தாக்குதல் அச்சம் என்கிற ஒன்றை இப்போதிருக்கின்ற நிலைமைகளை மறைப்பதற்காக இலங்கையில் பயன்படுத்தப்படுகிறது என்றே கொள்ள முடியும். மனித உரிமைக் கெதிரான அச்சுறுத்தல்கள் அதிகரித்திருக்கின்றன. கருத்துச் சுதந்திரம் அடக்கப்படுகிறது. மக்களின் நினைவுகூரும் உரிமை பறிக்கப்படுகிறது என பல அடக்குமுறைகள் இலங்கையில் நடைபெற்றவருகின்றன என்பது மனித உரிமை சார் தரப்பினரது குற்றச்சாட்டாக இருக்கிறது.
2009ஆம் ஆண்டு யுத்தம் மௌனிக்கச் செய்யப்பட்டு சரியாக 10 வருடங்களின் பின்னர் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஈஸ்டடர் குண்டுத் தாக்குதல் நடைபெற்றது. இது முழு இலங்கையையும் பெரும் அச்சத்துக்குள் தள்ளிவிட்டது. அதிலிருந்து இன்னமும் மீளமுடியாதிருப்பதற்கு காரணங்கள் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதன் விசாரணைகளுக்கென நியமிக்கப்பட்ட ஆணைக்குழு விசாரணை நிறைவடைந்தாலும் அதன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் இருப்பதாகவே அறிய முடிகிறது.
அச்சமூட்டுவதும் அச்சமுடைய மனோநிலையில் சிங்கள மக்களை வைத்திருப்பதும் ஒருவிதமான தந்திரோபாயம் என்றே சொல்லிக் கொள்ள வேண்டும். நாட்டில் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் பல்வேறு வகைகளிலும் தூபமிடப்பட்ட பயங்கரவாதம் என்கின்ற தீவிரவாதச் சிந்தனை வெடித்தது 2019ல் தான். அதன் பயனாக நவம்பரில் ஜனாதிபதி மாற்றப்பட்டார். 2020இல் அரசாங்கம் மாற்றப்பட்டது. ஆனால் இன்னமும் ஈஸடர் தாக்குதல் விசாரணைக்கான நீதி கிடைக்கவில்லை. அதன் நீதிக்காக கருதினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்ட கிறிஸ்தவ மக்கள், போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நாட்டில் 35 வருடங்களுக்கும் மேலாக நடைபெற்ற ஆயுத யுத்தம் வடக்கு கிழக்கில் வாழும் மக்களை மட்டுமல்ல நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் வாழும் அனைத்து மக்களையும் இன்னல்களுக்குள் தள்ளியது. சிங்கள மக்களிடம் இருக்கின்ற தமிழர்களது போராட்டம் சார்ந்த பார்வை வெறும் அச்சம் மாத்திரமல்ல. அது நாட்டைப் பறித்துவிடுவார்கள் என்ற பேரச்சம். இந்த அச்சத்துக்கு 1980களிலேயே எமக்குத் தேவை எமது தாயகப்பிரதேசம் என்று பதில் சொல்லப்பட்டாயிற்று. ஆயினும் அவர்கள் அதனை ஏற்றுக் கொள்வதாக இல்லை. இருந்தாலும், இப்போதும் நாட்டில் வடக்கு கிழக்கின் இனப்பரம்பலை மாற்றியமைக்கின்ற வேலைத்திட்டம் நடந்த வண்ணமே இருக்கிறது. 2019 ஏப்ரல் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுக்குப் பின்னர் முஸ்லிம் மக்கள் மீதும் அது ஏற்பட்டுவிட்டது.
அஹிம்சை ரீதியிலான, அரசியல் போராடடங்களின் பயன் ஏதுமின்றிப் போய், நாட்டில் நடைபெற்ற ஆயுத யுத்தத்தில் விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டு, தமிழ் மக்களின் இனப்பிரச்சினை வன்முறையால் அடக்கப்பட்டது வரை நடைபெற்றவைகள் அநிதிகளே. இருந்தாலும் இறுதிக்கட்ட யுத்தம் மாத்திரமே யுத்தக் குற்றத்துக்குள்ளும், மனிதாபிமானச் சட்ட மீறலுக்குள்ளும் வைத்துப்பார்க்கப்படும் நிலை சர்வதேச அளவில் காணப்படுகிறது.
இங்கு இன அழிப்பு என்பது கண்டுகொள்ளப்படுவதில்லை. இலங்கையில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்யக் கூடியவகையில் வரையறுக்கப்பட்ட அளவிலான நடவடிக்கைகள் மாத்திரமே தற்போதும் எதிர்பார்க்கப்படுகின்றன. இந்த விடயத்தில்தான் தமிழர் தரப்பில் பல்வேறு குழப்பங்களும் காணப்படுகின்றன. தமிழர் தேசிய தரப்பு, தமிழரசுக்கட்சி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என பல கடிதங்கள், மனித உரிமைகள் ஆணையாளருக்குப் பறந்தது இதனை உறுதியும் செய்தது.
ஊடகவியலாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மீதான தொடர்ச்சியான கண்காணிப்புகள், அடக்குமுறைகள் உள்ளடங்கலாக இலங்கையின் மனித உரிமை நிலைவரங்கள் கவலையளிப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் பிரஸ்தாபிக்கப்பட்டு இருக்கின்றன. இந்நிலையில்தான் இலங்கையில் அர்த்தபுஷ்டியுள்ள நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றின் அவசியம் பற்றிப் பேசப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை (13)ஆரம்பமானது முதல், இலங்கையின் அரசியலில் பலவேறு மாறுதல்கள் உருவாகத் தொடங்கியிருக்கின்றன.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 47 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் 46/1 என்ற தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் நிராகரித்தது. இம்முறை மனித உரிமை ஆணையாளரின் வாய்மொழி மூல அறிக்கையையும் நிரகரித்திருக்கிறது. ஆனால், இந்த 2021 48ஆவது ஐ.நா அமர்வில் கொண்டுவரப்படும் தீர்மானம் என்ன பிரதிபலிப்பைத் தரும் என்பது தெரியாத விடயமே.
இந்த இடத்தில்தான் இணை அனுசரணை நாடுகள் எதிர்பார்க்கின்ற அர்த்தபுஷ்டியுள்ள நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவை சாத்தியமாகுமா என்ற கேள்வி தோன்றுகிறது. நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதற்கான இலங்கையின் முயற்சிகள், காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம் ஆகியவற்றின் தொடர்ச்சியான செயற்பாடின்மை பேசப்பட்டாலும் அது இலங்கை அரசால் கணக்கிலெடுக்கப்படுவதாக இல்லை.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் வாய்மூல அறிக்கையை அடுத்து இலங்கையின் வெளிநாட்டமைச்சர் உள்ளிட்டோர் அவருடைய அறிக்கையை மறுதலித்து வெளியிடுகின்ற விமர்சனங்கள், அறிக்கைகள், உள்ளகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக வெளிப்புறத் தேவைகள் தேவையில்லை போன்றதான கருத்துகள் ஐக்கிய நாடுகளை சபையை அவமதிப்பதாகவே பேசப்படுகின்றன.
இந்த இடத்தில்தான் முன்னாள் சிறைச்சாலைகள் முகாமைத்துவ மற்றும் கைதிகள் புனர்வாழ்வு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த அநுராதபுரம் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளில் நடந்து கொண்ட விதம் பார்க்கப்படவேண்டியதாக இருக்கிறது. இவருடைய நடவடிக்கையானது இராஜதந்திரிகளதும், மனித உரிமை அமைப்புகளினதும், பல்வேறு அரசியல்வாதிகளினதும் விமர்சனங்களுக்கும் கண்டனங்களுக்கும் உள்ளானது. அவர் இராஜினாமா செய்தாலும் அது பயனற்றதே என்றும் கருத்துகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.
இலங்கை தம்முடைய நாட்டின் பாதுகாப்பு அதிகாரத்தினைத் தக்கவைத்துக்கொள்வதற்காக மேற்கொள்ளும் முயற்சிகள் சபாதாரணமானாவைகளாக இருந்த போதிலும் சிறைச்சாலைகள் முகாமைத்துவ மற்றும் கைதிகள் புனர்வாழ்வு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தயின் செயற்பாடு இலங்கைக்கு பெரியதொரு களங்கத்தினை ஏற்படுத்தி விட்டிருக்கிறது.
ஐ.நா அமர்வில் பயங்கரவாதத்தடைச் சட்டத்தின் மீளாய்வு குறித்து இலங்கை அரசாங்கத்தால் சர்வதேச சமூகத்திற்கு வழங்கப்பட்டிருக்கும் தெளிவுபடுத்தல்கள் வரவேற்கப்பட்டிருக்கின்ற அதேவேளை, பயங்கரவாத்தடைச்சட்டத்தின் சரத்துக்களை சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்டக்கடப்பாடுகளுக்கு அமைவாக மாற்றியமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருக்கிறது.
இதில், முகப்புத்தக விவகாரத்தில் கைதானவர்களது பெற்றோர் உறவினர்கள் ஜனாதிபதிக்கு விடுத்த வேண்டுகோள் மிக முக்கியமானதாக அமைந்திருக்கிறது. முகப்புத்தகத்தில் இட்ட பதிகவுகளுக்காக 20 பேர்வரையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டடு தடுப்புக் காவலில் உள்ளனர். இதில் பயங்கரவாதச் சட்டமும் கருத்துச் சுதந்திரமும் இறுகியிருக்கின்றன.
இராணுவமயமாக்கல் இலங்கையில் நடைபெறுவதாக விமர்சிக்கப்படுகிறது. அமைதியான எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் நினைவேந்தல்களை அனுசரிக்கும் நபர்களை, அரசாங்கம் தமது அதிகாரங்களை பயன்படுத்தி கைது செய்வதுடன், தனிமைப்படுத்தல் நிலையங்களில் பலவந்தமாக தடுத்துவைக்கிறது. சிவில் சமூக குழுக்கள் மீது புதிய கட்டுப்பாடுகள் உருவாக்கப்பட்டு வருகின்றன என்றும் குற்றங்கள் முன்வைக்கப்படுகின்றன.
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, மிக நீண்ட காலம் சிறை வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலை, 2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினர் மற்றும் மத தலைவர்களின் நியாயத்தை நிலைநாட்டுதல், சட்டத்தரணி ஹிஜாஷ் ஹிஸ்புல்லா நீதிமன்ற நடவடிக்கைகளின் ஊடாக 16 மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை என்பன இவற்றுள் சம்பந்தப்படுகின்ற நிலையில், கடந்த சில தினங்களில் கண்டுபிடிக்கப்பட்ட குண்டுகளுக்காகவும் சிலர் பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் கைதாகியிருக்கின்றனர். இது இச்சட்டத்தை தளர்த்தலுக்கான சமிக்ஞையா என்று கேட்கத் தோன்றுகிறது. அல்லது நாட்டிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தலா என்று கேட்கத் தோன்றுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
6 hours ago
28 Nov 2024