Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை
கே. சஞ்சயன் / 2020 மே 23 , மு.ப. 10:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றுச் சூழலையும் அதைத் தடுப்பதற்காகக் கையாளப்படும் தனிமைப்படுத்தல் சட்டத்தையும், இராணுவ, பொலிஸ் அதிகாரங்களைவலுப்படுத்திக் கொள்வதற்காக, அரசாங்கம் பயன்படுத்துவதாகப் பரவலான குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடுப்பதில், படைத்தரப்பும் பொலிஸாரும் காட்டிய ஆர்வம், வடக்கில் கொந்தளிப்பை ஏற்பத்தியது.
கூடவே, அவர்கள் சட்டரீதியாகச் செயற்படுகிறார்களா என்ற விவாதத்தையும் கிளப்பி விட்டிருக்கிறது.
தனிமைப்படுத்தல் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரம், யாருடைய கையில் இருக்கிறது; அதை மீறுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் அதிகாரம், யாருக்கு இருக்கிறது, போன்ற கேள்விகள் நீதிமன்றம் வரைக்கும் சென்று விட்டன.
வடக்கின் பல்வேறு இடங்களிலும், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, நினைவுச் சுடர்களை ஏற்றிஅஞ்சலி செலுத்தியது.
கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட அவரது கட்சியின் பிரமுகர்கள், இந்நிகழ்வுகளில் பங்கேற்றனர். ஒவ்வோர் இடத்திலும் இவர்கள்,பொலிஸார், இராணுவத்தினரின் கெடுபிடிகளை எதிர்கொள்ள நேரிட்டது.
இந்தநிலையில், கஜேந்திரகுமார் உள்ளிட்ட 11 பேர், தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி, நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்தியதால், அவர்களைத் தனிமைப்படுத்தவேண்டும் என்று, மே 17ஆம் திகதி, யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில், பொலிஸ் தரப்பால் அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது.
அதை ஆராய்ந்த நீதிவான் பீற்றல் போல், கஜேந்திரகுமார் உள்ளிட்ட 11 பேரையும் 14 நாள்கள், அவர்களின் வீடுகளிலேயே தனிமைப்படுத்தி வைக்குமாறு, சுகாதார வைத்திய அதிகாரிக்கு உத்தரவிட்டார்.
பொலிஸாரின் இந்த நடவடிக்கை, மறுநாள், மே 18ஆம் திகதி, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளில், கஜேந்திரகுமார் உள்ளிட்டவர்கள் பங்கேற்பதைத்தடுப்பதற்கான ஒரு நடவடிக்கையே என்பது, வெளிப்படையாகத் தெரிந்தது.
இந்தநிலையில், மே 18ஆம் திகதி, யாழ். நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்டத்தரணிகள், அந்தஉத்தரவுக்கு எதிராக வாதிட்டனர்.
தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ், சுகாதார அதிகாரிகளே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதை மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, பொலிஸாருக்குஅதிகாரம் அளிக்கப்படவில்லை என்றும் மூத்த சட்டத்தரணிகளில் ஒருவரான அன்ரன் புனிதநாயகம் சுட்டிக்காட்டியிருந்தார்.
அதன் அடிப்படையில், முதல் நாள் (17) பிறப்பித்த தனிமைப்படுத்தல் உத்தரவை, யாழ். நீதிவான் நீதிமன்ற நீதிவான் விலக்கிக் கொண்டார்.
ஏற்கெனவே, ஊரடங்குச் சட்டத்தை, ஜனாதிபதி செயலகத்தின் ஊடகப் பிரிவு, அறிக்கையின் மூலம் நடைமுறைப்படுத்துவது சட்டரீதியானது அல்ல என்றபிரச்சினையை, ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் எழுப்பியிருந்தார்.இப்போது, தனிமைப்படுத்தல் சட்டம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியில், பொலிஸாருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதாகக்கூறப்படவேயில்லை என்று, சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியிருக்கிறார்.அவர், இந்த வாதத்தை முன்வைத்த அன்று பிற்பகல், பாதுகாப்பு அமைச்சில் இருந்து ஓர் அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. அந்த அறிக்கையில், 'மாகாணசுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளைப் புறக்கணித்து, முள்ளிவாய்க்கால் நினைவு நாளை நினைவு கூரும் வகையில், பல குழுக்கள் ஆள்களை ஒன்றுதிரட்டத் திட்டமிட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சுக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதனால், விசேட வர்த்தமானி இலக்கம், 2167/18 இன் மூலம் திருத்தப்பட்ட, 1897ஆம் ஆண்டின் 3ஆம் இலக்க, தனிமைப்படுத்தல் மற்றும், நோய்களைத் தடுக்கும் கட்டளைச் சட்டத்தை, கண்டிப்பாகப் பின்பற்றுமாறு, வடக்கில் உள்ளபாதுகாப்புப் படைத் தளபதிகளுக்கு, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது' என, அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
தனிமைப்படுத்தல் மற்றும், நோய்களைத் தடுக்கும் கட்டளைச் சட்டத்தைப் பயன்படுத்தி, வடக்கில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளைத்தடுக்குமாறு, படையினர், பொலிஸாருக்கு, பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டிருந்தாலும், அந்தச் சட்டத்தின் கீழ் நடவடிக்கைளை எடுப்பதற்குப்படையினருக்கோ, பொலிஸாருக்கோ அதிகாரம் அளிக்கப்பட்டிருக்கவில்லை. யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில், இந்த வாதம் முன்வைக்கப்பட்டிருக்கிறது.
தனிமைப்படுத்தல் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரம், அரச படையினருக்கு அளிக்கப்படாவிட்டாலும், பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ்தான்,அவர்கள், தற்போது வீதிகளில் இறக்கி விடப்பட்டிருக்கிறார்கள். சோதனைகள், ஏனைய தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள் என்பதேஉண்மை.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வைத் தடுப்பதற்காக, பல இடங்களில் வழக்கத்துக்கு மாறாக, படையினரும் பொலிஸாரும் பொல்லுகள், போன்றஆயுதங்களுடன் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
நினைவேந்தலுக்குச் செல்பவர்களைத் தடுப்பதற்காக, மக்களைப் பயமுறுத்தும் வகையில், இராணுவத்தினர் அவ்வாறு நடந்து கொண்டிருந்தனர்.
ஆனாலும், அவர்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்துக்கு அமைவாகவே, தாங்கள் செயற்படுவதாகக் காட்டிக் கொள்ளவில்லை.
வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன், சிவாஜிலிங்கம் உள்ளிட்டவர்கள், யாழ்ப்பாணத்தில் இருந்துமுள்ளிவாய்க்காலுக்குச் செல்ல முயன்ற போது, கேரதீவில் உள்ள இராணுவ சோதனைச் சாவடியில் தடுக்கப்பட்டனர்; அதற்கு, ''அப்பால் செல்வதற்குஅனுமதிக்க முடியாது'' என்று கூறினர்.
இதனால், ஒரு மணித்தியாலத்துக்கு மேல் காத்திருந்து விட்டு, முன்னாள் முதலமைச்சர், யாழ்ப்பாணத்துக்கே திரும்ப வேண்டியிருந்தது.
''சங்குபிட்டிப் பாலத்தைக் கடந்து செல்வதற்கு, அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், விக்னேஸ்வரன் உள்ளிட்டவர்களிடம்அதற்கான அனுமதி இருக்கவில்லை; அவர்கள், அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட வேண்டிய தேவை, இல்லை'' என்று, யாழ். படைகளின் கட்டளைத் தளபதிமேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய, பின்னர் ஒரு விளக்கத்தைக் கூறியிருந்தார். கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக,நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்து விளக்களித்து, அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர் என்றும், அவர் கூறியிருக்கிறார்.
அப்போது, வடக்கு மாகாணத்துக்குள் பயணம் செய்வதற்கு, எந்த அனுமதியும் தேவைப்பட்டிருக்கவில்லை; அதற்கான அனுமதி வழங்கும் முறையும், அமலில்இருக்கவில்லை என்பது, முக்கியமாகக் குறிப்பிட வேண்டிய விடயம் ஆகும்.
முள்ளிவாய்க்காலுக்குச் செல்வதைத் தடுப்பதே, படையினரின் தேவையாக, இலக்காக இருந்தது. அதற்குத் தனிமைப்படுத்தல் சட்டத்தை, அவர்கள் கையில்எடுத்திருந்தார்கள்.
ஊரடங்கு அமலில் இல்லாத, இயல்பு வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புவதற்காக அளிக்கப்பட்ட காலஇடைவெளியில் தான், இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது.
இதன் மூலம், கொரோனா வைரஸ் தொற்றையும் அதைக் கட்டுப்படுத்துவதற்கான தனிமைப்படுத்தல் சட்டத்தையும், படைத்தரப்பு எந்தளவுக்குத் தவறாகப்பயன்படுத்த முனைகிறது என்பது வெளிச்சமாகியுள்ளது.
அதனால்த்தான்,''எமது கட்சியினருக்கு எதிராகப் பொலிஸாரும் இராணுவத்தினரும் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு எதிராக, நீதிமன்றத்தைநாடப்போகிறேன்'' என, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறியிருக்கிறார்.
இவ்வாறான மனுக்கள், நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டால்தான், பொலிஸ், இராணுவம் என்பன, தன்னிச்சையாகக் கையாளும் அதிகாரங்கள்மட்டுப்படுத்தப்படும்; கட்டுக்குள் கொண்டு வரப்படும்.
கொவிட்-19க்குப் பின்னர், இராணுவ அதிகாரம், வடக்கில் மேலோங்கி விட்டது என்ற குற்றச்சாட்டு, தீவிரமடைந்து வருகிறது.
வடக்கில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த கடற்படையினரின் குடும்பத்தினரை ஏற்றிச் செல்வதற்கு, பருத்தித்துறை டிப்போவில் இருந்து, பஸ்களை அனுப்புமாறுகடந்தவாரம் இராணுவத்தினரால் கேட்கப்பட்டது. ஆனால், சாரதிகள் எவரும் பஸ்களை ஓட்டுவதற்கு முன்வராததால், பருத்தித்துறை டிப்போவில் உள்ளபஸ்களை இயக்கத் தடைவிதிக்கப்பட்டது. இதனால், கடந்த 16ஆம் திகதி, பருத்தித்துறையில் இருந்து எந்த பஸ்களும் இயக்கப்படவில்லை என்ற தகவலும்உள்ளது.
இதுபோன்ற நிகழ்வுகள்,2015இற்கு முற்பட்ட காலங்களில் இடம்பெறுவது சாதாரணம்.
அதுபோன்ற நிலைக்கே, கொரோனா வைரஸ் பரவலும் அதைத் தடுப்பதற்காகப் பயன்படுத்தப்படும் தனிமைப்படுத்தல் சட்டமும், மீண்டும் வடக்கை கொண்டுவந்து நிறுத்தி இருக்கின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
2 hours ago