Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Princiya Dixci / 2021 ஜூலை 03 , பி.ப. 01:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
“பிதாவே, இவர்களை மன்னியும்; தாங்கள் செய்வது இன்னதென்று அறியா திருக்கிறார்களே” (லூக்கா 23:34)
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, இயேசு சிலுவையில் தொங்கியபோது சொன்ன ஏழு வாசகங்களில் இதுவும் ஒன்று.
ஒரு சிறு குழந்தை தவறு செய்யும்போது அறியாமல் செய்து விட்டது என்று கூறி, சுலபமாக நாம் மன்னிப்பதுபோல, இயேசு தம்மை சிலுவையில் அறைந்தவர்களை மன்னித்தார். அவர்கள் செய்கிறது இன்னதென்று அறியாமல் செய்துவிட்டார்கள் என்றார்.
இவ்வாறான சிலுவையில் அறையும் கொடூரச் செயல்களைச் செய்பவர்கள் இன்றும் எம் மத்தியில் இருக்கவே செய்கின்றனர். ஆனால், இவர்களை அறியாமல் செய்தனர் என இயேசுவைப் போன்று மன்னிப்பது கடினமே.
ஏனெனில், இவர்கள் பழி தீர்க்கும் நோக்கத்துடன், நன்றாகத் திட்டமிட்டு, இதுபோன்ற சிலுவைக் கொடூரத்தை, கடந்த 25ஆம் திகதியன்று அம்பிட்டி பகுதியில் நடத்தி முடித்துள்ளனர்.
அன்றையதினம், கண்டி, பலகொல்ல பிரதேசத்தை சேர்ந்த இரு நண்பர்கள் கடத்திச் செல்லப்பட்டு, பத்துக்கும் மேற்பட்ட குழுவினரால் கொடூரமாகத் துன்புறுத்தப்பட்டுள்ளனர். அதன் உச்சக்கட்டமாகவே, பலகையொன்றின் மீது அவ்விருவரின் கைகளை வைத்து ஆணிகளை ஏற்றியுள்ளனர்.
இந்தச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான பூசாரியே (கப்புவா) சுமார் ஒரு வாரமாக தலைமறைவாகியிருந்த நிலையில், கண்டி, பலகொல்ல பொலிஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் (01) சரணடைந்ததையடுத்து, கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பலகொல்ல பிரதேசத்திலுள்ள தேவாலயமொன்றின் இந்தப் பூசாரிக்கு பேஸ்புக்கில் சேறு பூசியதாகக் கூறப்படும் 44 மற்றும் 38 வயதுகளையுடைய இரு நண்பர்களையும், தன்னுடைய வீட்டுக்கு பூசாரி அழைத்துள்ளார். அதன்பின்னர், அம்பிட்டிய பிரதேசத்துக்கு அவர்களைக் கடத்திச் சென்று, அங்கிருந்த குழுவினருடன் சேர்ந்தே அவ்விருவரையும் கடுமையாக தாக்கிவிட்டு, இவ்வாறு மிகக் கொடூரமான முறையில், ஆணிகளை ஏற்றித் துன்புறுத்தியுள்ளனர்.
இதில் பாதிக்கப்பட்ட இருவரும் கண்டி வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இந்தச் சம்பவத்தை அடுத்து அந்தப் பூசாரியும் ஏனையோரும் அங்கிருந்து தப்பியோடியிருந்தனர். பிரதேசத்திலிருந்தும் தலைமறைவாகியிருந்த அவர்கள் அனைவரையும் தேடி பொலிஸார் விசாரணைகளை முடுக்கிவிட்டிருந்தனர்.
இதன் தொடராக, துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட இருவரையும் கடத்திய வானின் சாரதி மற்றும் மேலும் இருவரும் கடந்த திங்கட்கிழமை (28) கைதுசெய்யப்பட்டிருந்தனர். கைது செய்யப்பட்ட இவ்விருவரும் அம்பிட்டிய கால்தென்ன பிரதேசத்தில் பற்றைக்காட்டுக்குள் மறைந்திருந்த போதே கைது செய்யப்பட்டனர்.
ஹெரோய்ன் போதைப்பொருளுக்கு அடிமையான இவ்விருவரும் கைது செய்யப்படும் போது, ஹெரோய்ன் பயன்படுத்தியிருந்தனர் என விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.
இந்தக் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வானும் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன் பின்னணியிலேயே, நண்பர்கள் இருவரையும் கடத்திச்சென்று, அவ்விருவரின் உள்ளங்கைகளில் ஆணிகளை அறைந்ததாகக் கூறப்படும் பூசாரியும் சரணடைந்த வேளை, கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அதேவேளை, இந்தச் சிலுவையில் அறைந்த சம்பவத்துடன் தொடர்புபட்ட 11 பேர், நேற்று முன்தினம் வியாழன் (01) வரை கைதுசெய்யப்பட்டிருந்தனர். இவர்களைக் கைதுசெய்வதற்காக 4 பொலிஸ் குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டன என பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
பணம் கொடுக்கல் வாங்கலை அடிப்படையாக வைத்து, பேஸ்புக் சமூகத்தளத்தில் அவமானப்படுத்தியுள்ளனர் என ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இதற்கமைய இச்சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான 30 வயதுடைய பூசாரி, அம்பிட்டிய மற்றும் சில பிரதேசங்களில் புதையல் தோண்டுதல் உள்ளிட்ட பல நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதுடன், தேவாலயங்களை நடத்திச் செல்பவர் என்றும் தெரியவந்துள்ளது
கடத்தப்பட்டு கொடூரமான முறையில் துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ள இருவரும் பிரதான சந்தேகநபரான பூசாரியின் நண்பர்கள் என்றும் திடுக்கிடும் தகவலும் தெரியவந்துள்ளது.
யுத்த காலத்தில் நாட்டில் மலிதாக்கப்பட்டிருந்த கடத்தல்கள் மற்றும் துன்புறுத்தல்கள் இன்றும் தொடர்கின்றமை உண்மையில் வேதனைக்குரிய விடயமே.
அதிகாரத்தை நிலைநாட்ட அல்லது அரசியல் காரணங்கள் என இருந்த கடத்தல்கள் மற்றும் துன்புறுத்தல்கள் தற்போது தனிப்பட்ட குரோதங்களை தீர்க்க என வடிவங்களே கொஞ்சம் மாறியிருக்கின்றன.
அவ்வாறே, கடத்தப்பட்டு சங்கிலியால் கைகள் கட்டப்பட்ட நிலையில், களனி கங்கையில் வீசப்பட்ட ஹங்வெல்ல பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய மந்திரவாதி ஒருவரும், கடந்த வாரம் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
சிலுவையில் அறைந்த சம்பம் இடம்பெற்ற மறுதினமாக 26ஆம் திகதியன்றே, இவ்வாறு சங்கிலியால் கைகள் கட்டப்பட்ட நிலையில், நவகமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரணாலை பகுதியில் களனி கங்கையில் இந்த மந்திரவாதியின் சடலம் மிதந்த போது மீட்கப்பட்டது.
இந்நபருடன் தகாத தொடர்பு வைத்திருந்த பெண், மற்றுமொரு நபருடன் கொண்டிருந்த முறையற்ற உறவு காரணமாகவே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, மந்திரவாதியுடன் முறையற்ற உறவு வைத்திருந்த பெண் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்ட மந்திரவாதியும் கைது செய்யப்பட்ட பெண்ணும் ஹங்வெல்ல பொலிஸ் பிரிவில் எம்புல்கம பகுதியில் தற்காலிகமாக வசித்து வந்துள்ள நிலையில், கடந்த 23ஆம் திகதி, இருவர் வீட்டுக்குள் புகுந்து மந்திரவாதியை வலுக்கட்டயமாக கடத்திச் சென்றுள்ளதாகக் கைதுசெய்யப்பட்டுள்ள பெண், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
எனினும், பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், அப்பெண்ணுக்கும் கல்குவாரியில் வேலை பார்க்கும் எல்புல்கம பகுதியைச் சேர்ந்த சாரதிக்கும் இடையில் பிரிதொரு தகாத தொடர்பு ஏற்பட்டுள்ளமை காரணமாகவே, இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, பனுவஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய சாரதியும், ஹோமாகம- பிட்டிபன பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய அவரது உறவினரான நபரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என பொலிஸா ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சந்தேகநபர்கள், கொலைக்குப் பயன்படுத்திய சுத்தியல் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பனவும் ஹங்வெல்ல பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவ்வாறே தனிப்பட்ட பழி தீர்க்கும் படலங்கள் பல அண்மைக்காலமாக அரங்கேறிவருகின்றன. இதன்மூலம், அவர்கள் எதனை நிலைநாட்ட முயல்கின்றனர்?
தமக்கு வேண்டப்பட்ட அல்லது வேண்டப்பாடாத நபர்களில் வாழ்க்கையையும் சீரழித்து தமது வாழ்கையையும் அவர்கள் சீரழிக்கின்றனர். திடீரென ஏற்பட்ட மிகையான கோபத்தில் அவசரப்பட்டு செய்யும் செயல்களாகவும் இவை இருப்பதில்லை. நீண்ட நாள்கள் திட்டமிடப்பட்டோ இவ்வாறான கொடூரச் செயல்கள் நடத்தப்படுகின்றன. எனவே, சட்டம் இவர்களுக்கான தண்டனையை வழங்கும் என்பது நிச்சயம்.
மத்தேயுவின் கூற்றுப்படி, இயேசுவின் சிலுவைச் சாவு மறைவாக்கு நிறைவேறும்படி நிகழ்ந்தது. அதாவது, புதியதொரு மக்கள் இனத்தை உருவாக்குவதற்காகக் கடவுள் வகுத்த திட்டத்துக்கு ஏற்ப இயேசுவின் சிலுவைச் சாவு நிகழ்ந்தது.
எனினும், இந்த அர்த்தத்தை வீணாக்கும் இது போன்ற அடாவடியான கருணையற்ற செயல்களைப் புரிகின்றவர்களை இயேசுவும் மன்னிக்கமாட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
51 minute ago
52 minute ago
1 hours ago