Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 19, சனிக்கிழமை
R.Tharaniya / 2025 ஏப்ரல் 07 , மு.ப. 10:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவிடம் இருந்து தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய, கற்கத் தவறிய விடயங்கள் பற்றி பலரும் சிந்திக்கிறார்கள். இருந்தாலும், இப்போதும் இந்தியாவையே தங்களுடைய அரசியல் தீர்வுக்காக நம்பியும் இருக்கின்றனர். அதே நேரத்தில், சிங்களவர்களும் இந்தியாவிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விடயங்கள் பல இருக்கின்றன என்பதை மறந்தும் விடுகின்றனர். ஏனென்றால், தமிழர்களுடைய விடயத்தில் அவர்கள் இந்தியா தமக்குச் சார்பான நிலைப்பாட்டிலேயே இருக்கிறது .
என்பதால் அது மறுக்கப்படுவதாக இருக்கிறது என்பதே யதார்த்தம்.
உலக நடைமுறைகள், மாற்றங்களுக்கு ஏற்ப தமிழ்த் தேசிய அரசியல் கட்டமைக்கப்படாமையும், மாற்றங்களை ஏற்றுக் கொள்ளாமையும், அனுசரிக்காமையும்தான் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகள் இதுவரையில் நிறைவேறா ஒன்றாக இருந்து வருவதற்கு காரணமாகும். கடந்த வார இறுதியில் நடைபெற்ற இந்திய பிரதமரின் இலங்கை வருகை விட்டுச் சென்றிருப்பதும்
இதனையே ஆகும்.
2024 செப்டெம்பர் மாதம் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட முதலாவது வெளிநாட்டுத் தலைவர் என்ற பெருமையைப் பிரதமர் நரேந்திர மோடி பெற்றுக்கொண்டார். அவருக்கு இலங்கை மித்ர விபூஷண் விருதை இலங்கை வழங்கியிருக்கிறது. அபிவிருத்தி ஒத்துழைப்பு, பொருளாதார உறவுகள், பாதுகாப்பு உறவுகள், நல்லிணக்கம்,
இந்திய இலங்கை மீனவர் பிரச்சினைகள் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பு
குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் மீளாய்வு செய்து கொண்டனர். அதே நேரத்தில், இலங்கையின் பொருளாதார மீட்சிக்கும் ஸ்திரத்தன்மைக்கும் இந்தியா தொடர்ந்து உதவுவதற்குப் பிரதமர் உறுதியளித்திருந்தார். அந்த வகையில் ஜனாதிபதி அனுரகுமார பொருளாதார ஸ்திரம் குறித்துப் பேசிய கருத்து இந்த இடத்தில் அடிபட்டுப் போனது.
எரிசக்தி மின்சார துறைகளுக்கான உதவிகள், சம்பூர் சூரிய மின்சக்தி திட்ட நிர்மாணப் பணிகளின் ஆரம்பிப்பு மற்றும் பல்வேறு அபிவிருத்தி ஒப்பந்தங்களும் கைச்சாத்தாகியுள்ளன.
இதற்கிடையில் இலங்கை ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் போது விடுபட்டுப் போன இலங்கைத் தமிழர்கள் விவகாரம் குறித்து இந்தியப் பிரதமர் பேசியிருப்பது வரவேற்கத்தக்கதாக இருக்கிறது. இந்தியப் பிரதமரின் ஊடக அறிக்கையில், இலங்கை அரசு, தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் என்றும் இலங்கை அரசியலமைப்பை முழுமையாக அமுல்படுத்துவதற்கு மாகாணசபைத் தேர்தல்களை நடத்துவதற்கான வாக்குறுதியை நிறைவேற்றும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இந்தியப் பிரதமரின் அபிவிருத்தி, இந்திய மீனவர் பிரச்சினை போன்ற பல்வேறு கருத்துக்களுக்கு
பதிலளித்திருக்கிற ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தமிழர்களுடைய அரசியல் அபிலாசை, மாகாண சபை; தேர்தல் போன்ற விடயங்கள் குறித்து ஒரு வார்த்தையேனும் பகரவில்லை என்பது கவனிக்கப்பட வேண்டும்.
இந்தியப் பிரதமர் வட கிழக்கு தமிழ் அரசியல் தலைவர்களைச் சந்தித்திருக்கிறார். மலையக அரசியல் தலைவர்களைச் சந்தித்திருக்கிறார். பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டிருக்கிறது. இருந்தாலும், தமிழரது அரசியல், தமிழ் அரசியல் தரப்பினருடைய நிலைப்பாடுகள் காரணமாக இறுக்கமான முடிவுகளுக்கு உரியதாக இல்லை என்ற குறைபாடே காணப்படுகிறது என்று கொள்ளலாம்.
ஜே.வி.பியைத் தலைமையாகக் கொண்ட தேசிய மக்கள் சக்தியின் மாற்றம் என்கிற அலையில் வடக்குக் கிழக்கு தமிழ் மக்களின் தமிழ்த் தேசிய அரசியல் அடிபட்டுப் போனது எல்லோருக்கும் வெளிப்படையானது. இந்த நிலையில், உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறவிருக்கிறது. கடந்த வருடத்தில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கு முன்பே அனுரகுமார திசாநாயக்கவை இந்தியா, புதுடெல்லிக்கு அழைத்துப் பேசியது.
அது அவர்களுக்கு மேலும் ஒரு சக்தியைக் கொடுத்திருந்தது. இதனையடுத்து, அனுரகுமார ஜனாதிபதியானதும் முதல் விஜயத்தை இந்தியாவுக்கு மேற்கொண்டார். இப்போது உள்ளூராட்சித் தேர்தல் நடக்கவுள்ள சூழலில் இந்தியப் பிரதமர் இலங்கைக்கு வந்திருக்கிறார். அது கூடவும் அவர்களுக்குச் சாதகமாகவே அமையும். அதில் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை.
வடக்குக் கிழக்கில் உருவாகியிருக்கின்ற தமிழ்த் தேசிய அரசியல் வெறுப்பு என்கிற பாதகத்தை விளங்கிக் கொள்ளாத தமிழ்த் தேசிய அரசியல் கட்சியினர் இப்போதும் தமது வெறுப்புணர்வுகளையும், வெப்பு சாரங்களையும் கோப தாபங்களையும், இறுமாப்புகளையும், வெட்டுக்குத்துக்களையுமே வெளிப்படுத்தியே வருகின்றனர். உள்ளூராட்சி தேர்தல் காலத்தில் கூட இவ்வாறான சிந்தனைகளும் செயற்பாடுகளும் தமிழ்த் தேசிய அரசியல் தரப்பினரிடம் காணப்படுவது நல்லவிதமான முன்னேற்றத்தைக் கொடுக்கப்போவதில்லை.
அது தமிழர்களின் அபிலாசை நிறைவேற்றத்துக்கு எதிரான நிலையைத் தொடர்ந்து வலுப்படுத்தும். இது தமிழ்த் தேசிய அரசியலுக்குப் பாதகமானது.வடக்கு கிழக்கு தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் போராட்ட இயக்கங்களிடையே இருந்த ஒற்றுமை சீர்குலைவை தமக்குச் சாதகமாக்கிக் கொண்ட இந்தியா விடுதலைப் புலிகளுக்கு எதிரான சக்திகளை உருவாக்கிக் கொண்டது. அதே நேரத்தில், அண்டை நாடான இலங்கையின் இனப்பிரச்சினை தமக்குச் சாதகமான மாற்றிக் கொண்டது. பயன்படுத்தவும் ஆரம்பித்தது. அது இந்தியாவுக்கு அதிக பயனையே
கொடுத்தது எனலாம்.
எப்போதும் இந்தியா கைக்கொள்ளும் தமக்குச் சாதகமான ஆட்சிகளையே வைத்துக்கொள்ளல் நிலைப்பாடு ஒவ்வொரு நாட்டிலும் வாய்ப்பதில்லை. ஆனால், நாடி பிடிப்புக்காக அனுரகுமாரவை இந்தியாவுக்கு அழைத்ததன் காரணமாக இப்போது ஒரு சிறப்பான நட்பு அரசாங்கமாக அதனைப் பயன்படுத்துகிறது என்று கூறலாம்.
அது இலங்கை மித்ர விபூஷண் இந்தியப் பிரதமருக்கு வழங்கும் அளவுக்கு நிலைமை ஏற்படுத்தியிருக்கிறது. தாங்கள் தவறு செய்துவிட்டோமோ என்று தலையில் கை வைக்காமல் அதனையே தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளலே இப்போது நடைபெறுகிறது. இது இலங்கைக்கும் பொருந்தும்.
இந்த இடத்தில்தான், தமிழ்த் தேசிய அரசியலின் ஒற்றுமை முக்கியம் உடையதாக இருக்கிறது. இலங்கையில் புரையோடிப்போன இனப்பிரச்சினைக்கு வெறுமனே புதிய அரசியலமைப்போ, அரசியலமைப்புத் திருத்தம் தீர்வாக அமைந்து விடப் போவதிதில்லை. இதய சுத்தியுடனான அதிகாரப் பகிர்தல் ஒன்று நடைபெற வேண்டும்.
அதற்குச் சிங்கள அடிப்படைவாதம் இடம் கொடுக்க வேண்டும். அது ஒற்றையாட்சியை உடைய இலங்கையில் ஒருபோதும் சாத்தியமில்லை.இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடா கொள்கையை கடைபிடித்து வரும் இந்தியா தம்முடைய முழுமையான பங்களிப்புடன் ஏற்படுத்தப்பட்ட 13ஆவது திருத்தத்தைக் கூட முழுமையாக அமல்படுத்துங்கள் என்று அழுத்தம் கொடுப்பதில்லை.
ஆனால், இலங்கை அரசு, தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றம், இலங்கை அரசியலமைப்பை முழுமையாக அமுல்படுத்துதல், மாகாணசபைத் தேர்தல்களை நடத்துதல் என்பவை 13ஆவது திருத்தத்தையே சுட்டி நிற்கிறது என்ற வகையில் இந்தியா ஒரு முடிவுக்கு வந்துவிட்டது என்பது தெரிகிறது.
இலங்கை அரசாங்கம் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில் இந்தியப் பிரதமரின் இக்கருத்து தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியானதாக இருக்க வேண்டும். இருந்தாலும் தமிழ் அரசியல் தலைவர்களிடம் இல்லாத ஒற்றுமை காரணமாக அதன் பயன் முழுமையாகத் தமிழர்களுக்குக் கிடைக்காது என்றே
சொல்ல வேண்டும்.
ஈழத்தமிழர்களின் நியாயமான உரிமைகளை இந்தியா புரிந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிற தமிழர்கள் தமிழரின் பாரம்பரிய பூமியான வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் உள்ளக சுயநிர்ணய அடிப்படையிலேனும் குறைந்தது ஒரு சமஷ்டி முறையிலான
ஆட்சி முறையை அமைப்பது தொடர்பில் இந்தியா முயற்சிகளை மேற்கொள்ளுமாக இருந்தால் சிறப்பு.
அவ்வாறானால், ஒருமித்த தமிழர் நிலைப்பாடு ஒன்றுக்குத் தமிழ்த் தரப்பு வருதல் முக்கியமாகும். அதே நேரத்தில் தமிழ் மக்களின் நிலைப்பாடுகளைப் புரிந்து கொண்டு தமிழ்த் தேசிய அரசியலின் வீழ்ச்சிக்கான காரணங்களைக் கண்டறிந்து சரி செய்தல் உடனடியாக நடைபெற வேண்டும்.
அதற்குக் காலம் தாழ்த்துதல் கூடாது. பூனைக்கு மணி கட்டுவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும் போது அதனைக் கட்டாது தவறவிட்டால் இறுதியில் பூனையைத் தேட வேண்டி ஏற்படலாம்.
இங்கு நடைபெற்ற யுத்தத்தை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டிருந்த இந்தியா தமிழீழ விடுதலைப் போரை நசுக்குவதிலும், இறுதிப்போரில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கும் காரணமாக அமைந்திருந்தது,
அதனால் தான், போர்க்குற்றத்தில் ஈடுபட்டவர்களை ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானம் மூலம் சட்டத்தின் முன் நிறுத்தக் கோரி ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் புலம்பெயர் மக்களின் நீதிக்கான போராட்டங்கள் ஊடாக தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது, இந்தியா
தான் அதை நீர்த்துப் போகச் செய்தது. இன்னொரு விதத்தில். இந்தியா வல்லாதிக்கம் அரசியல் நாடகத்தை அரங்கேற்றுவதாக அமைந்துவிடாமல் பார்த்துக் கொள்ளல் முக்கியம்.
லக்ஸ்மன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago