2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை

இசை மற்றும் செய்திகளால் ஒன்றிணைந்த வானொலி

Freelancer   / 2025 பெப்ரவரி 13 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

தலைமுறைகளைக் கடந்து மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்து பொக்கிஷமாக வானொலி திகழ்கிறது. அலைவரிசை தொடங்கப்பட்ட நாளான இன்று (பெப்ரவரி 13)   உலக வானொலி நாளாக கொண்டாடப்படுகிறது.

இந்த 21ஆம் நூற்றாண்டில் உலகமே நம் கைக்குள் வந்து விட்டது. நாம் விரும்பிய செய்தி அல்லது மனநிலைக்கு ஏற்றப் பாடல்களை சில வினாடிகளில் கேட்டு விடுகிறோம். ஆனால், காத்திருந்து ஒன்றைப் பெறுவதில் சந்தோஷம் 80 மற்றும் 90ஐ சேர்ந்தவர்களுக்கு மட்டும்தான் புரியும். அதில் ஒன்றுதான் வானொலி.

செய்தி தாள்களுக்குப் பிறகு மக்களை இசை மற்றும் செய்திகளால் ஒன்றிணைத்தது வானொலிதான். இன்னும் பலரது மனதை கொள்ளைகொள்வது வானொலி என்றால் அதை மறுக்க முடியாது. மின்சாரம் கூட இல்லாத இடங்களில் தற்போது வரை நேயர்களை அரவணைத்துச் செல்லும் வானொலிக்கான சிறப்பை உணர்த்தும் உலக வானொலி தினம் இன்று. இந்தியாவின் அதிகப்படியான கிராமங்களில் இன்றளவும் வானொலியை பயன்படுத்திதான் அன்றாட தகவல்களை அறிந்து கொள்கின்றனர்.

தொழில்நுட்பங்கள் பெரிதாக வளர்ச்சி அடைந்திடாத காலகட்டத்தில் ஒலி மூலம் தகவல்களையும் செய்திகளையும் பகிர்ந்து கொள்வதற்கான ஊடகமாகக் கண்டுபிடிக்கப்பட்ட வானொலி இன்றும் அதன் மவுசை இழக்கவில்லை. இப்போதும் உலக மக்கள் அதிகம் பேரைச் சென்றடையும் ஊடகமாக வானொலியே திகழ்கிறது.

அந்தவகையில், வானொலியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில், ஐ.நா. துணை அமைப்பான யுனெஸ்கோ பெப்ரவரி 13ஐ உலக வானொலி தினமாக 2011இல் அறிவித்தது. 1946இல் ஐ.நா. வானொலி அலைவரிசை தொடங்கப்பட்ட நாளான
பெப்ரவரி 13 உலக வானொலி நாளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

வானொலியின் வரலாறு:

முதல் வானொலி ஒலிபரப்பு 1895ஆம் ஆண்டில் மார்க்கோனி எனப்படும் குக்லீல்மோ மார்கோனியால் செய்யப்பட்டது என்றும், பரந்த பார்வையாளர்களை இலக்காகக் கொண்ட இசை மற்றும் பேச்சின் வானொலி ஒலிபரப்பு 1905-1906ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது என்றும் பொதுவாக நம்பப்படுகிறது.

வானொலி 1920களின் முற்பகுதியில் வணிக ரீதியாக நடைமுறைக்கு வந்தது. கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு வானொலி நிலையங்கள் நடைமுறைக்கு வந்தன, மேலும் 1950களில் வானொலி மற்றும் ஒலிபரப்பு அமைப்பு உலகம் முழுவதும் ஒரு பொதுவான பொருளாக மாறியது.

ஏறக்குறைய 60 ஆண்டுகளுக்குப் பிறகு, 2011இல், யுனெஸ்கோவின் உறுப்பு நாடுகள் பிப்ரவரி 13ஐ உலக வானொலி தினமாக அறிவித்தன. இது 2013ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் ஒரு சர்வதேச நிகழ்வாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

உலக அளவில் மிகவும் பரவலாக நுகரப்படும் ஊடகங்களில் ஒன்றான ஐ.நா., வானொலிக்கு "பன்முகத்தன்மை குறித்த சமூகத்தின் அனுபவத்தை வடிவமைக்கும் திறன், அனைத்து குரல்களும் பேசுவதற்கும், பிரதிநிதித்துவப்படுத்தப்படுவதற்கும், கேட்கப்படுவதற்கும் ஒரு அரங்காக நிற்கும் திறன் உள்ளது’’ என்று கூறுகிறது.

ஸ்பெயினின் முன்மொழிவைத் தொடர்ந்து, யுனெஸ்கோவின் நிர்வாகக் குழு 2011இல் யுனெஸ்கோவால் மேற்கொள்ளப்பட்ட ஆலோசனை செயல்முறையின் அடிப்படையில் உலக வானொலி தினத்தை பிரகடனப்படுத்த பொது மாநாட்டிற்கு பரிந்துரைத்தது. அதைத் தொடர்ந்து, யுனெஸ்கோவின் அப்போதைய இயக்குநர் ஜெனரல்
பெப்ரவரி 13, 1946 அன்று ஐக்கிய நாடுகளின் வானொலி தினத்தை உருவாக்க முன்மொழிந்தார், பின்னர் அதன் 36ஆவது அமர்வில், யுனெஸ்கோ பிப்ரவரி 13ஐ உலக வானொலி தினமாக அறிவித்தது.

ஜனவரி 14, 2013 அன்று யுனெஸ்கோவின் உலக வானொலி தினத்தை ஐநா பொதுச் சபை முறையாக அங்கீகரித்தது. ஐ.நா. தனது 67ஆவது அமர்வில், பெப்ரவரி 13ஐ உலக வானொலி தினமாக
அறிவிக்கும் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது.

வானொலியின் முக்கியத்துவம்:

ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, உலக வானொலி தினத்தின் நோக்கம் வானொலியின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்கள் மற்றும் ஊடகங்களிடையே அதிக விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும்.

வானொலி நிலையங்கள் தங்கள் ஊடகத்தின் மூலம் தகவல்களை அணுகுவதை ஊக்குவிப்பதோடு, ஒளிபரப்பாளர்களிடையே நெட்வொர்க்கிங் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துவதையும் இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இலங்கையில் வானொலி:

இலங்கை வானொலியின் வரலாறானது கொழுப்பு வானொலி நிறுவப்பட்ட 1925ஆம் ஆண்டிலிருந்து அடையாளம் காணப்பட முடியும். இச்சேவை பிரித்தானிய இராணுவத்தால் இரண்டாம் உலகப்போரின்போது கைப்பற்றப்பட்டதை தொடர்ந்து சிலோன் அரசாங்கத்திடம் (தற்போதைய இலங்கை) திருப்பிக்கொடுக்கப்பட்டது. வானொலித்துறையானது 1980ஆம் ஆண்டு வரை  1966ஆம் ஆண்டு சட்ட இலக்கம் 37இன் கீழ்
அரசாங்க ஏகாதிபத்தியமாக இருந்தது.

சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் தற்போது 50க்கும் மேற்பட்ட நிலையங்கள் இயங்குகின்றன. வானொலி சந்தையில் நேயர்களின் செறிவு அதிகமாக இருந்தாலும், பவர் ஹவுஸ் லிமிடெட் போன்ற சில புதிய உரிமையாளர்களுக்கு மேடையில் நுழைய போட்டித்தன்மை அனுமதிக்கப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், பவர் ஹவுஸ் மற்றும் அஸ்ஸெட் ரேடியோ ஒலிபரப்பு ஆகியவை தலா ஒவ்வொரு வானொலி நிலையத்திலிருந்து நேயர்கள்  பங்குகளை தம்வசப்படுத்தியுள்ளன. இது ஏபிசி மற்றும் த கேப்பிடல்  மஹாராஜா அமைப்பு ஆகியவை தங்கள்  நேயர்களை மூன்று நிலையங்களுக்கு மேல் அடையக்கூடியதாகவுள்ளதை விட வேறுபட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .