Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஜூன் 24 , பி.ப. 06:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
மகேஸ்வரி விஜயனந்தன்
“தமிழ் பேசும் சமூகத்தை, தலைநிமிர்ந்த சமூகமாக, ஒரு தலைவனுக்கூடாக உருவாக்க வேண்டியதே என்னுடைய தேவை. அதற்காகவே அரசியலில் பிரவேசித்துள்ளேன். தலைநகரில் இனிமேல், தொழில்சார், வீடமைப்பு உள்ளிட்ட பிரச்சினைகளில், என்னுடைய தலையீடு இருக்கும். அவற்றில், முழுநேர அரசியல்வாதியாக இறங்கிச் செயற்படுவேன். தலைநகரில் தமிழ் மக்களுக்கு எங்கெங்கு அநியாயங்கள் நடக்கின்றனவோ அங்கெல்லாம், அழைத்தாலும் அழைக்காவிட்டாலும் சென்று, என்னால் முடிந்த சேவைகளைச் செய்வேன்” என்று, தேசிய மக்கள் சக்தியின் திசைகாட்டி சின்னத்தில், கொழும்பு மாவட்டத்தில் இலக்கம் 4இல் போட்டியிடும் வேட்பாளர் தினேஷ்குமார் கார்மேகம் தெரிவித்தார்.
தமிழ்மிரருக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கே: அரசியலுக்குப் புதிய முகமான நீங்கள், வாக்காளர்களுக்கு உங்களை எவ்வாறு அறிமுகப்படுத்துவீர்கள்?
யாழ்ப்பாணம் - குருநகரைப் பிறப்பிடமாகக் கொண்டாலும், 37 வருடங்களாகக் கொழும்பிலேயே வசித்து வருகிறேன். கொழும்பு இந்துக் கல்லூரியில் கல்வி கற்றேன். பின்னர், இங்கிலாந்துக்குச் சென்று, (Lean Management - Black Belt) குறைந்த வளத்தைக் கொண்டு அதிக உற்பத்திகளை மேற்கொள்ளும் முகாமைத்துவத்தையும் மூலோபாய மேலாண்மையின் முதுநிலைப் பட்டப்படிப்பையும் நிறைவு செய்தேன். பின்னர், இலண்டனிலுள்ள பிரிட்டிஷ் எயார்வேய்ஸ்ஸில், செயற்பாட்டு முகாமையாளராகப் பணியாற்றினேன். 2018ஆம் ஆண்டே இலங்கைக்கு வருகை தந்தேன். அதன் பின்னர், ‘Voice of Srilanka’ என்ற நிறுவனத்தின் பணிப்பாளராகவும் Tamil Arts and media Schoolஐயும் நடத்திக் கொண்டிருக்கின்றேன்.
இதற்கு முதல், நான் சமூகக் கடமைகளில் ஈடுபட்டிருந்தாலும், அதிகாரம், பலம் இல்லாமல், மேலும் மேலும் இக்கடமைகளைச் செய்ய முடியாதுள்ளது. இதன் காரணமாகவே, அரசியலில் கால்பதிக்கும் சூழ்நிலை எனக்கு உருவானது.
கே: சாதாரண மக்களுக்கு, தினேஷ் கார்மேகம் என்றால் யாரென்று தெரியாத நிலையில், எவ்வாறு உங்களை அடையாளப்படுத்திக்கொள்கிறீர்கள்?
தனிப்பட்ட விளம்பரங்கள், ஊடகங்கள் வாயிலாக அடையாளப்படுத்திச் செல்வதுடன், சமுதாயப் பணிகள் பலவற்றை முன்னெடுத்து வருகிறேன். குறிப்பாக, எந்தவோர் அரசியல் கட்சியின் பின்புலமுமின்றி, கொரோனா தொற்றின் போதும் பல சமூகக் கடமைகளை முன்னெடுத்துள்ளேன். இதனால், கொழும்பு மக்கள், என்னை ஓரளவு அடையாளம் கண்டுள்ளனர்.
கே: அரசியலுக்கு வருவதற்காகவா கொரோனா தொற்றின்போது மக்களுக்கு உதவி செய்தீர்கள், அல்லது சாதாரணமாக நீங்கள் மக்களுக்கு உதவும் மனப்பான்மை உடையவரா?
இல்லை. கொரோனா வருவதற்கு முன்னரே, வேட்புமனுத் தாக்கல் செய்தோம். அது மாத்திரமின்றி, சுனாமி ஏற்பட்டு மூன்று நாள்களில், காலி, மாத்தறை பகுதிகளுக்குச் சென்று, 2 மாதங்கள் அங்கு தொடர்ச்சியாக உதவிகளை முன்னெடுத்து வந்தேன். எனது கரங்களாலேயே சுமார் 100 சடலங்களை அப்புறப்படுத்தினேன். பிறகு 2015, 2016ஆம் ஆண்டுகளில், இலங்கையில் ஏற்பட்ட வௌ்ளப்பெருக்கு, மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களின் போது, கொழும்பில் சுமார் 800 குடும்பங்களுக்குத் தேவையான உலர் உணவுப் பொருள்களை வழங்கினேன்.
அவிசாவளையில் உள்ள தமிழ்ப் பாடசாலையின் 2 வகுப்பறைகளைப் புனரமைத்து, 350 மாணவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்துகொடுத்துள்ளேன். இப்போது, கொரோனா நெருக்கடிக் காலத்தில் பாதிக்கப்பட்ட பலருக்கு உதவியுள்ளேன்.
கே: உங்களது சொந்த நிதியைப் பயன்படுத்தியா இந்த உதவிகளைச் செய்தீர்கள்?
ஆம். முழுமையாக எனது சொந்த நிதியைப் பயன்படுத்தியே அனைத்து உதவிகளையும் செய்தேன். அது மாத்திரமின்றி, மற்றுமோர் இயற்கை இடர் ஏற்பட்டால், அதற்கு முகங் கொடுப்பதற்காகவும் அதில் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவுவதற்காகவும், இளைஞர் அணியொன்றை உருவாக்கி வருகிறேன். இதில் இப்போது, 37 இளைஞர் உறுப்பினர்கள் இருப்பதுடன், 1 மாதத்துக்குள் ஆயிரக்கணக்கான இளைஞர்களை இணைத்துப் பணியை முன்னெடுக்கவுள்ளேன்.
கே: தேசிய மக்கள் சக்தியைத் தெரிவு செய்தமைக்கான காரணம் என்ன?
இணைந்துகொள்வதற்கு கறைபடியாத கட்சி ஒன்று இல்லை என்பதாலேயே, தேசிய மக்கள் சக்தியைத் தெரிவுசெய்தேன். இலஞ்சம், ஊழலற்ற, மதுபானசாலை அனுமதிப்பத்திரங்கள் பெறாத, தேவையற்ற வர்த்தகங்களை முன்னெடுக்காத கட்சிகள் என்னைப் பொறுத்தவரை இலங்கையில் இல்லை என்ற நிலையில், சமூகத்துக்கு நல்லதொரு தலைவன் வேண்டும் என்ற எண்ணம் உள்ளது.
அதன்படி, தேசிய மக்கள் சக்தியைத் தெரிவு செய்வதைத் தவிர, வேறெந்தக் கட்சியையும் தெரிவுசெய்ய முடியாது என்பதே முதலாவது காரணம். இரண்டாவது, தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்கள் அனைவரும், சிறந்த கல்வியறிவு உடையவர்கள் எனும் வரிசையில், தேசிய புத்திஜீவிகள் அமைப்பின் தமிழ் உறுப்பினராகவே நான் தேசிய மக்கள் சக்திக்குள் உள்வாங்கப்பட்டேன்.
கே: உங்களுக்கு அரசியல் ஆசை எப்போது வந்தது?
பாடசாலையில் கல்வி பயிலும் காலத்திலிருந்தே அரசியல் ஆசை உள்ளது. 17 வயதிலிருந்து, நாடாளுமன்ற உறுப்பினராக வேண்டும் என்பது எனது கனவு. எனக்குக் கிடைத்த முதலாவது பிரவேசமான மாணவர் ஒன்றியத்தில் உறுப்பினராகி, அதன்மூலம் சரியான அரசியல் பாதைக்கு வந்தேன்.
கே: கொழும்பு வாழ் தமிழ்மொழி பேசும் சிறுபான்மை மக்கள், எவ்வாறான பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர் எனக் கருதுகிறீர்கள்?
கல்வி, தொழில், சுகாதாரம், போதைபொருள் பாவனை, வீட்டுப் பிரச்சினை என்பவற்றை, கொழும்பு வாழ் சிறுபான்மை மக்கள் பெரும்பாலும் எதிர்கொண்டிருக்கிறார்கள். பொருளாதாரத்துக்குப் பங்களிப்புச் செய்யும் இலங்கையின் தலைநகரில் வாழும் தமிழ்பேசும் சிறுபான்மை மக்கள், உரிய முறையில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சிரமங்கள் காணப்படுகின்றன.
கொழும்பில் தமிழ் வித்தியாலயங்கள் அதிகம் காணப்பட்டாலும், பரீட்சை பெறுபேறுகளில் தமிழ் மாணவர்களின் வீழ்ச்சி அதிகரித்தே காணப்படுகின்றது. எனவே, இதனால் தொழில் முனைவோர் அதிகமாகத் தமிழ்மொழியிலிருந்து உருவாக்கப்படுகின்றனர். குறிப்பாக, சாதாரண தரம், உயர்தரத்தில் உரிய முறையில் சித்தியடையாவிட்டால், தொழில் செய்யும் முயற்சி அதிகமாக இருக்கும். அந்தவகையில், லொத்தர் சீட்டுகள் விற்பனை, பழ விற்பனை, ஹோட்டல்களில் வேலை செய்தல் உள்ளிட்ட தொழில் முயற்சிகளே, கொழும்பில் காணப்படுகின்றன. உண்மையில் பார்க்கப் போனால், இது தொழில் முனைவோர் அல்ல. ஆனால், எமது சிறுபான்மை மக்கள் மேற்கூறப்பட்ட விடயங்களிலேயே உள்வாங்கப்படுகின்றனர்.
எனவே, கொழும்பில் அதிகமான தொழிலாளர்களாகச் சிறுபான்மை மக்கள் காணப்படுவதற்கு, முறையற்ற தொழில் சமூகம் உருவாக, இவர்களுக்கு சரியான கல்வி வழங்கப்படாமையே காரணம் ஆகும். இது, சிறுபான்மைச் சமூகத்தை அதிகம் பாதிக்கின்றது.
சுகாதார விடயத்திலும் சிறுபான்மை மக்களே அதிகம் தலைநகரில் பாதிக்கப்படுகின்றனர். மேலும், போதைப்பொருள் பாவனையிலும் தலைநகர சிறுபான்மை மக்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், தொழில்வாய்ப்பிலும் சிறுபான்மை மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
கே: இதற்குத் தலைநகரிலுள்ள தமிழ்பேசும் மக்கள் பிரதிநிதிகளின் பங்கு எவ்வாறு உள்ளது?
72 வருட பாரம்பரிய அரசியல் கட்சிகளால், தமிழ் மக்களுக்கு எதுவும் நடக்கவில்லை. அதேபோல், பாரம்பரிய அரசியல் கட்சிகளுக்குப் பின்னால் செல்லும் அரசியல் பிரதிநிதிகளாலும், தமிழ் மக்களுக்கு எதுவும் நடக்கவில்லை.
தமிழ் மக்களுக்குத் தமிழ்த் தலைமைகள் ஏதாவது செய்திருந்தால், இளைய சமுதாயத்தை வழிநடத்தக்கூடிய பல தலைமைகள் தலைநகரில் உருவாகியிருக்க வேண்டுமே? எனவே, பாரம்பரியக் கட்சிகளோ பாரம்பரியக் கட்சிகளின் வழிநடத்தல் மூலம் உருவாகியிருக்கும் தமிழ்க் கட்சிகளோ, தலைநகர சிறுபான்மையினரைச் சரியான முறையில் வழிநடத்தவில்லை என்பதே எனது கருத்து.
25 வருட அரசியல் வரலாற்றைக் கொண்ட அரசியல் தலைமைத்துவத்தைவிட, சரியான பதையில் இந்தச் சமூகத்தை என்னால் கொண்டு செல்ல முடியும். அவர்களை விட 5 படி மேலே என்னால் பணியாற்ற முடியும்.
கே: வாக்குகளைப் பெறுவதற்காக யாரை இலக்கு வைத்துள்ளீர்கள்?
பெண்களும் இளைய சமூகமுமே எனது இலக்காக இருந்தாலும், முதியவர்களுக்கான தனியான வேலைத்திட்டத்தையும் உருவாக்கி வருகிறோம். தேசிய மக்கள் சக்தியின் கொள்கை அடிப்படையில், முதியவர்களுக்கான கொள்கைத் திட்டத்தை உருவாக்கியுள்ளோம்.
எனினும், இளைய சமூகமே எனது குறிக்கோள். இளைஞர்கள் மீது எனது பார்வை உள்ளது. அவர்களை வழிநடத்தும் தலைவனாக நான் வருவேன். ஆனால், இதன்மூலம் பெண்களையும் முதியவர்களையும் கைவிடுவேன் என்ற அர்த்தமும் இல்லை. இளைய சமுதாயம் நடுநிலையான சமுதாயம். அவ்வாறான சமூகத்தை, 10 வருடங்களில் உருவாக்க வேண்டும். அதற்காக, இன்றுள்ள சிறுவர்களைச் சிறந்த முறையில் பராமரிக்க வேண்டும். பெண்களைக் கவனித்தல், சிறுவர்களைப் போஷாக்குள்ளவர்களாக மாற்றினால், தெம்புடன் அவர்கள் எதிர்கால உலகை நோக்கிப் பயணிப்பர். இனவாத, அரசியல், இயற்கை தொடர்பான பிரச்சினைகளை அவர்களே பார்த்துக்கொள்வார்கள். நாங்கள் தலைமைதாங்க வேண்டும் என எதிர்பார்க்க மாட்டார்கள்.
கே: நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில், கண்டிப்பாக வெற்றியீட்டுவீர்களா?
நிச்சயமாக வெற்றி பெறுவேன் என நம்புகிறேன். இப்போதே பலருக்கு என்னை அடையாளம் தெரிந்துள்ளது. வாக்குப்பலம் இருப்பதாகவே உணர்கின்றேன்.
கே: வாக்குகளைப் பெறுவதற்கு என்னென்ன நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளீர்கள்?
இப்போது மக்களை நாடிச் செல்லும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளேன். இளையோர் அணியொன்றை உருவாக்கியுள்ளேன். அத்துடன், தேர்தல் பிரசாரங்களைச் சமூக வலைத்தளங்களிலேயே பிரதானமாக முன்னெடுக்கின்றேன். அத்துடன், சில ஊடகங்களின் அனுசரணையுடன் என்னை வெளிக்காட்டிக்கொள்ள முயல்கின்றேன். நான் செய்த பணிகள் மூலம், கொழும்பில் இதுவரை சுமார் 2,500 குடும்பங்களுக்கு என்னைத் தெரியும். இந்த எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
கே: தேசிய மக்கள் சக்தி எத்தனை ஆசனங்களைக் கைப்பற்றும்?
ஒவ்வொரு மாவட்டங்களிலும், குறைந்தது தலா 2 ஆசனங்களைக் கைப்பற்றினால், மொத்தமாக 22 ஆசனங்களைப் பெறலாம் என எதிர்பார்க்கின்றோம்.
கே: நீங்கள் தேர்தலில் தோல்வியடைந்தால், உங்கள் அடுத்தகட்ட நகர்வு எப்படியிருக்கும்?
ஓகஸ்ட் 6ஆம் திகதி, எனது வசிப்பிடமான கிருலப்பனையில் அரசியல் அலுவலகம் ஒன்றைத் திறக்கவுள்ளேன். எனவே, தோல்வியைச் சந்தித்தாலும் இந்த அலுவலகத்திலிருந்து எனது அரசியல் பணியை முன்னெடுப்பேன். தொடர்ந்து முழுநேர அரசியல்வாதியாகச் செயற்படுவேன்.
தமிழ் பேசும் சமூகத்தை, தலைநிமிர்ந்த சமூகமாக, ஒரு தலைவனுக்கூடாக உருவாக்க வேண்டியதே என்னுடைய தேவை. அதற்காகவே அரசியலில் பிரவேசித்துள்ளேன். தலைநகரில் இனிமேல், தொழில்சார், வீடமைப்பு உள்ளிட்ட பிரச்சினைகளில், என்னுடைய தலையீடு இருக்கும். அவற்றில், முழுநேர அரசியல்வாதியாக இறங்கிச் செயற்படுவேன். தலைநகரில் தமிழ் மக்களுக்கு எங்கெங்கு அநியாயங்கள் நடக்கின்றனவோ அங்கெல்லாம், அழைத்தாலும் அழைக்காவிட்டாலும் சென்று, என்னால் முடிந்த சேவைகளைச் செய்வேன். பிரச்சினைகளை அறியத்தர வேண்டிய பொறுப்பு, மக்கள் கைகளில் உள்ளது. மக்கள் அறியத்தந்தால், நான் அவர்களுக்கு உதவுவதற்கு முதல் ஆளாக நிற்பேன்.
தமிழ் பேசும் சிறுபான்மை மக்களின் வாக்குதான் என்னுடைய இலக்கு என்று சொல்வதைவிட, தமிழ் பேசும் சிறுபான்மை மக்களின் வாழ்க்கையே என்னுடைய இலக்கு. அவர்களின் வாழ்க்கையுடன் ஒன்றித்த வாழ்வாதாரத்தைச் சீர்செய்ய வேண்டும் எனில், என்னை ஒரு தலைவனாக இந்தச் சிறுபான்மை மக்கள் ஏற்றுக்கொண்டு, என்னை நாடாளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும். அப்போது, என்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி, மக்களுக்குச் சேவை செய்வதற்கு இலகுவாக இருக்கும். அனுப்பாவிட்டாலும் சிறுபான்மை மக்களுக்காகச் சேவை செய்வேன்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago