Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை
Johnsan Bastiampillai / 2023 பெப்ரவரி 10 , பி.ப. 03:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹமட் பாதுஷா
இனப்பிரச்சினைக்குத் தீர்வைப் பெறுவதற்கான இருதரப்புப் பேச்சுகள் கிட்டத்தட்ட நின்றுபோயுள்ள நிலையில், 13ஆவது திருத்தம் மற்றும் அதிகாரப் பகிர்வு பற்றிய கருத்தாடல்கள் அரசாங்கத்தின் தரப்பில் இருந்து முன்வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
சுதந்திர தினத்துக்குள் தமிழர்களுக்குத் தீர்வு வழங்குவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் போயிருக்கின்றது. 70 வருட பிரச்சினையை 70 நாள்களில் தீர்ப்பது நடைமுறைச் சாத்தியமானதுமல்ல!
இதற்கிடையில், இந்திய வெளிவிவகார அமைச்சர் கொழும்புக்கு வந்து திரும்பிய மறுநாள், ஜனாதிபதி தமிழ்த் தேசிய கூட்டமைப்பை நோக்கி ஓர் அறிவித்தலை விடுத்தார். மாகாணங்களுக்கு பொலிஸ், காணி அதிகாரங்கள் வழங்கப்படும் என்றும், அதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டு விட்டதாகவும் கூறினார்.
இதன் எதிர்வினை, பெரும்பான்மை சமூகத்திலிருந்து வெளிக்கிளம்பியது. கடும்போக்கு அரசியல்வாதிகள் மட்டுமன்றி, பௌத்த பீடங்களும் ஜனாதிபதியின் இந்த அறிவிப்புக்கு பகிரங்க எதிர்ப்பைத் தெரிவித்தன. கடிதம் அனுப்பியிருந்த மகாநாயக்கர்களை சந்திக்கச் சென்ற ஜனாதிபதி ரணிலிடம், நேரடியாகவும் தமது நிலைப்பாட்டை அவர்கள் வலியுறுத்தினர்.
அதற்குப் பிறகு, சுதந்திர தினத்தன்று இரவு, நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், ஒற்றையாட்சிக்குள் உயர்ந்தபட்ச அதிகாரப் பகிர்வை வழங்கத் தயார் என்று ஜனாதிபதி கூறினார். ஆனால், நாடு பிளவுபட இடமளிக்கப் போவதில்லை என்பதை நேரிடையாக சொல்லியுள்ளார். காணி, பொலிஸ் அதிகார கதைகளுக்கு முன்னர் கூட, இதுபோன்ற கருத்தையே ஜனாதிபதி முன்வைத்திருந்தார்.
13ஆவது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்று இந்தியாவும் தமிழ்த் தரப்பும் அழுத்தம் கொடுத்து வருவது இரகசியமான சங்கதியல்ல. ஆயினும், 30 வருடங்களாக அமல்படுத்தாது இருக்கின்ற காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதாக அறிவித்தால் என்ன நடக்கும்? எதிர்வினை எவ்விதம் வெளிப்படும் என அறியாதவராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இருக்கமாட்டார்.
அதையும் தாண்டி, இந்த அறிவிப்பைச் செய்த அவரின் அசட்டுத் துணிச்சலை பாராட்டலாம். ஆனால், அவர் மட்டுமன்றி அரசியல் தெரிந்த ஒரு பொதுமகன் கூட எதிர்பார்த்தது போல, சிங்கள பெருந்தேசியம் அதற்கான எதிர்ப்பை வெளியிட்டாயிற்று.
இந்த நிகழ்வுகளை எல்லாம் ஒரு தொடர் சங்கிலியாக நோக்கினால், எல்லாம் சொல்லி வைத்தாற்போல் நடந்திருக்கின்றது என்று கருதுவதற்கும் இடமுண்டு. எனவே, சிலவேளை காணி, பொலிஸ் அதிகாரங்கள் பற்றிய கதைகள் கொஞ்ச நாள்களுக்கு அடக்கி வாசிக்கப்படலாம்.
ஆனாலொன்று, மாகாண சபைகளின் ஆயுட்காலம் முடிவடைந்து வருடங்கள் கடந்துள்ளன; இன்னும் தேர்தல் நடைபெறவில்லை. எல்லை நிர்ணயம், தேர்தல் முறைமை பற்றிய வாதங்கள் உள்ளன. 13ஆவது திருத்தத்தை தொடர்ந்தும் அரசியலமைப்பில் வைத்திருப்பதா என்றுகூட பெருந்தேசியம் சிந்திக்கின்றது.
இந்தப் பின்னணியில், இல்லாத சபைகளுக்கு அதிகாரங்களைப் பகிர்வது எங்ஙனம் என்றுதான் விளங்கவில்லை. ஆனால், இலங்கையில் வெளிநாடுகளின் தலையீட்டுடனான இப்போதிருக்கின்ற அரசியல் அணுகுமுறையில் எதுவும் நடக்கலாம். எதுவும் நடக்கவே மாட்டாது என்று சொல்ல முடியாது.
இந்த அடிப்படையில், அதிகாரப்பகிர்வு மற்றும் எல்லா இனமக்களுக்குமான தீர்வு தொடர்பில் குறிப்பாக, முஸ்லிம் சமூகம் இன்னும் அதிக முனைப்புக் காட்ட வேண்டியுள்ளது.
பொதுவாக, தேசிய முக்கியத்துவம்மிக்க விவகாரங்கள் பேசப்படும் போது, முஸ்லிம் அரசியல்வாதிகளும் சமூகமும் ஒருவித மெத்தனப் போக்கை கடைப்பிடிப்பார்கள். ‘இப்படித்தான் கதைப்பார்கள். கடைசியில் தீர்வை, அதிகாரத்தை கொடுக்க சிங்கள தேசியம் விடாது. எனவே நாம் இதைப்பற்றி அலட்டிக் கொள்ளத் தேவையில்லை’ என்ற கோதாவில், முஸ்லிம் தலைவர்களின் செயற்பாடுகள் இருக்கும்.
ஆனால், இதையெல்லாம் கடந்து ஒரு கட்டத்தில், இதோ சிறிய தீர்வு ஒன்று அல்லது ஒற்றையாட்சிக்குள் அதிகாரப்பகிர்வு வழங்கப்படப் போகின்றது என்று வைத்துக் கொள்வோம். அதில் முஸ்லிம் சமூகத்தின் பங்கு என்னவாக இருக்க வேண்டும் என்பதை முன்வைப்பதற்கும், அதனை வென்றெடுப்பதற்கும் முஸ்லிம் அரசியல்வாதிகள் தயார்நிலையில் இருக்கின்றார்களா என்பதுதான் இங்குள்ள கேள்வி.
தமிழர்களுக்கான இனப்பிரச்சினை பற்றியே ஆட்சியாளர்கள் பெரும்பாலும் பேசி வந்தனர். ஆனால், இதற்கு சற்று விதிவிலக்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, “முஸ்லிம்களுக்கும் பிரச்சினைகள் உள்ளன. அது பற்றியும் அவர்களிடம் பேச எதிர்பார்க்கின்றேன்” என்று அண்மையில் ஒரு நிகழ்வில் உரையாற்றும்போது குறிப்பிட்டிருக்கின்றார்.
ஒற்றையாட்சிக்குள் அதிகாரப்பகிர்வு பற்றியும் அதுவும் காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்குதல் என்ற எல்லை வரை சிந்திக்கின்ற ஒரு ஜனாதிபதி, முஸ்லிம்களது பிரச்சினைகளையும் தீர்க்க வேண்டும் என்று தானாகக் கூறுவது, ஒரு நல்ல சமிக்கை என்பதை முஸ்லிம் அரசியல்வாதிகளும் பொறுப்பு வாய்ந்தவர்களும் விளங்கிக் கொள்ள வேண்டும்.
ஒருவேளை நமது கணிப்புகள், சாத்தியங்களை எல்லாம் மீறி பொலிஸ், காணி அதிகாரங்கள் வழங்கப்படுமாக இருந்தால், அதில் முஸ்லிம்கள் என்ன நிலைப்பாட்டை முன்வைக்கலாம்? அது பற்றிய முஸ்லிம் அரசியல்வாதிகளின் ஒருமித்த எண்ணப்பாடு என்ன என்ற தெளிவுக்கு வர வேண்டும். இது முதலாவது விடயமாகும்.
அதேபோல், முஸ்லிம்கள் உட்பட அனைத்து மக்களினதும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு, ஜனாதிபதி ரணிலுக்கு காலம் கைகூடுமா எனத் தெரியாது. ஆனாலும், அவரது ஆட்சிக்குள் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான பாதையில் முன்னோக்கிச் செல்லும் வாய்ப்புள்ளது. அதனை முஸ்லிம் சமூகம் சரிவர பயன்படுத்த வேண்டும்.
தமிழர்களின் அளவுக்கு முஸ்லிம்கள் தமது உரிமைக்காக. இருப்புக்காக, அபிலாஷைக்காகத் தொடர்ச்சியாகப் போராடவில்லை. முஸ்லிம் அரசியல்வாதிகள் தமது சொந்த இருப்புக்கான, உழைப்புக்கான அரசியலாகவே அதைப் பயன்படுத்தினார்களே தவிர, சமூக விடிவுக்கானதாக கட்டமைக்கவில்லை.
இதன் விளைவாக, முஸ்லிம்களின் பிரச்சினைகள் தேசிய, சர்வதேச அரங்குகளில் தமிழ் மக்களின் விவகாரங்களைப் போல அறியப்பட்டதாக இல்லை. முறையாக கட்டமைக்கப்பட்ட அடிப்படையில் ஆவணங்கள் முன்வைக்கப்படவில்லை. இதனால், முஸ்லிம்களுக்குள்ள பிரச்சினைகள் அதன் ஆழஅகலங்கள் பிரசித்தம் பெற, அவதானிப்பை பெற முடியாது போனது.
இன்று கிடைத்துள்ள சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, இந்தக் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு, முஸ்லிம் சமூகம் குறிப்பாக அரசியல்வாதிகள் விரைந்து செயற்பட வேண்டியுள்ளது. முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை தெளிவுறச் சொல்லாமல், அதற்கான தீர்வைத் தேட இயலாது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
அந்த வரிசையில், முஸ்லிம்களுக்கு பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காணிகளுடன் தொடர்புபட்ட காணிப் பிரச்சினைகள் இருக்கின்றன. இன விகிதாசாரப்படி ஒதுக்கீடு செய்வதில் மேற்கொள்ளப்பட்ட பாரபட்சங்கள், புறக்கணிப்புகள் உள்ளன. இனவாத மற்றும் மதவாத நெருக்குதல்களால் முஸ்லிம் சமூகம் கடுமையான இழப்புகளை சந்தித்துள்ளது.
முஸ்லிம்கள் மீது இனவாதிகளால் நிகழ்த்தப்பட்ட உரிமை மீறல்களைப் போலவே வடக்கு, கிழக்கில் விடுதலைப் புலிகள் உள்ளிட்ட ஆயுதக் குழுக்களால், ஒட்டுக்குழுக்களால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள், விரட்டியடிப்புகள், கப்பம் பறிப்புகள் பற்றி பொதுவெளியில் தரவுகளை முன்வைப்பதுடன், அதற்கு நீதியை நிலைநாட்ட வேண்டியுள்ளது.
யுத்தகாலத்திலும் அதற்குப் பின்னரும் காணாமல்போன முஸ்லிம்கள் பற்றி யாரும் பெரிதாக கணக்கில் எடுத்ததாக தெரியவில்லை. போர் நிலத்தில் ‘இரு தலைக்கொள்ளி எறும்பு’களாக அகப்பட்ட முஸ்லிம்களில் பலர் கடத்தப்பட்டனர்; காணாமல்போயினர். இன்னும் அவர்களுக்கு என்ன நடந்தது என்ற சட்ட ரீதியான உண்மை கண்டறியப்படவும் இல்லை; நீதி வழங்கப்படவும் இல்லை.
அளுத்கமை, கண்டி, அம்பாறை போன்ற இடங்களில் இடம்பெற்ற கலவரங்களின் ஊடாக முஸ்லிம்கள் இன, மத ரீதியாக இலக்குவைத்து தாக்கப்பட்டனர். உயிர், உடமை இழப்புகள் ஏற்படுத்தப்பட்டன. அதுமட்டுமன்றி, ‘சஹ்ரான் கும்பல்’ என்ற பயங்கரவாத குழு செய்த காட்டுமிராண்டித்தனத்தை காரணமாகக் காட்டி, முஸ்லிம்களை நோக்கிப் பாய்ந்த சட்டத்தின் கெடுபிடிகளும், இன - மத நெருக்குதல்களும் ஏற்படுத்திய வலிக்கு பரிகாரம் தேட வேண்டியுள்ளது.
அதிகாரப்பகிர்வு, தீர்வு பற்றிய கதைகளை இதற்கு முன்னர் நாம் பல தடவை கேட்டிருக்கின்றோம். எல்லாம் கடைசியில் வெறும் கதைகளாகவே காற்றில் போயின. சிறுபான்மை சமூகங்களுக்கு எந்தப் பெரிய வரப்பிரசாதங்களையும் கொடுக்காமல், ஆனால் அவர்களையும் சமாளித்துக் கொண்டு காலத்தைக் கடத்தவே ஆட்சியாளர்கள் விரும்புகின்றார்கள் என்பதே கடந்தகால படிப்பினையாகும்.
ஆயினும், அப்படி எண்ணிக் கொண்டிருப்பதன் மூலம், வாய்ப்பைத் தவறவிட்டு விடக்கூடாது என்பதே இங்கு முக்கியமானது.
இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் ஏதாவது ஒரு விடயத்திலும்கூட ‘நடக்காது; அதற்கான சாத்தியமில்லை’ என்று தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளுக்கு நன்கு தெரிந்திருந்தும் கூட, கிடைக்கின்ற வாய்ப்பை பயன்படுத்துவதில் காட்டும் முனைப்பு இங்கு கவனிக்கத்தக்கது. இதனை முஸ்லிம் சமூகம் ஒரு முன்மாதிரியாக எடுத்துக் கொள்ளலாம்.
முஸ்லிம் சமூகத்துக்காகவே அரசியல் செய்கின்றோம் என்று கூறுபவர்களும் பொறுப்பான பதவிகளில் இருப்பவர்களும் தேர்தல் வரும்போது மட்டும் சமூகத்தின் பிரச்சினைகளை பட்டியலிட்டுப் பேசினால் மட்டும் போதாது.
ஆட்சிக்காலத்தில் கிடைக்கின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் மூலோபாய ரீதியாகப் பயன்படுத்தி, அதில் ஒன்றிரண்டையாவது தீர்த்து வைக்கப் பாடுபட வேண்டும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
3 hours ago
4 hours ago
6 hours ago