ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பாமல் வைத்திருப்பது பாரதூரமான குற்ற செயலாகும் -என இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (10) 2025 ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் மீதான விவாதத்தில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்க் கல்வி அமைச்சு தொடர்பான விவாத உரையின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர் இந்த நாட்டின் கல்வித் துறையை மேம்படுத்த வேண்டுமாயின் பாடத்திட்டம், கற்பித்தல் முறைமை, ஆசிரியர் பணிக்கு ஆட்சேர்ப்பு முதலியவற்றில் பாரிய மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். அத்தோடு நிதி ஒதுக்கீடு, ஆளணி மற்றும் பௌதீக வளப்பற்றாக் குறைக்கும் தீர்வு காண வேண்டும்.
நமது நாட்டிலுள்ள பாடசாலைகளில் பெரும்பாலும் ஆசிரியர் மையக் கல்வியை ஒட்டியே கற்பிக்கப்படுகிறது . மேற்கு நாடுகளில் Howard Gardner’s Multiple Intelligences Theory and Differentiated Learning Theory, John Dewey’s Inquiry Based Learning Vygotsky‘s Collaborative Learning and Scaffolding Theory முதலிய கோட்பாடுகளைப் பின்பற்றி கற்பிக்கின்றனர்.
இதன் மூலம் மாணவர் Engage, Explore, Explain, Elaborate, Evaluate என்ற அடிப்படையில் ஆர்வத்தோடு கற்கின்றனர் .மேற்படி மாணவர் மையக் கற்பித்தல் முறைகளை நாமும் பின்பற்றுவதன் மூலம் நமது நாட்டின் கற்றல் திறனையும் கல்வித் தரத்தையும் அறிவையும் மேம்படுத்தலாம்.
நமது நாட்டில் உள்ள மாணவர் பல்கலைக்கழகம் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு கல்வியை கற்கின்றனர். இதன் பொருட்டு ஆண்டு தோறும் அண்ணளவாக 265,000 மாணவர் க.பொ.த உயர்தர தேர்வுக்குத் தோற்றுகின்றனர். இவர்களில் 165,000 மாணவர் பல்கலைக் கழக அனுமதி பெற தகுதி பெறுகின்றனர். தகுதி பெற்றோரில் 40,000 மாணவருக்கு மட்டும் பல்கலைக் கழக அனுமதி கிடைக்கிறது. மேலும் 10,000 மாணவருக்கு கல்வியற் கல்லூரி அனுமதி கிடைக்கிறது. தேர்வில் வெற்றி பெறாத 100,000 மாணவரும் பல்கலைக்கழகத்திற்கு தகுதி பெற்று அனுமதி கிடைக்காத 115,000 மாணவரும் என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறி நிற்கின்றனர். இவர்களுக்கு வழிகாட்ட வேண்டிய பொறுப்பு அரசுக்கும் சமூகத்திற்கும் உண்டு.
எமக்கு அண்மையில் உள்ள இந்தியா உட்பட உலகில் உள்ள பல்வேறு நாடுகள் தத்தம் நாட்டிலுள்ள இத்தகைய மாணவருக்காகPoly Technic எனும் தொழிநுட்பகல்லூரிகளை நடத்துகின்றன. இக்கல்லூரிகளில் நூற்றுக் கணக்கான மூன்றாண்டு பட்டயப் பயிற்சி நெறிகள் கற்பிக்கப் படுகின்றன. பல்கலைக் கழக அனுமதி கிடைக்காத மாணவர் இவற்றில் சேர்ந்து கல்வி கற்று எளிதாக வேலைவாய்ப்பை பெற்றுக் கொள்ளக் கூடியதாக உள்ளது. அத்தகைய பயிற்சி நெறிகளை இந்த நாட்டிலும் தொடங்க வேண்டும்.
நமது நாட்டின் கல்வி முறையானது தொழில்சந்தையோடு இணைந்ததாக இல்லை.அதாவது தொழில் சந்தையில்வேலையொன்றைப் பெற்றுக்கொள்வதற்குரிய Qualification Skills and experience அவர்களிடம் இல்லை. இதனால்பட்டதாரிகள் தொழிற் சந்தையில் வேலையை பெற்றுக் கொள்ள முடியாமல் உள்ளனர்.
எனவே நம் நாட்டு பாடத் திட்டங்களைத்தொழிற் சந்தைத் தேவைகளோடுஇணைந்ததாக மாற்றி அமைக்க வேண்டும்.மேற்கு நாடுகளில் உள்ளபல்கலைக்கழகங்கள் தமது மாணவர் உலகத்தொழில் சந்தையில் போட்டிபோட்டுவேலையைப் பெற்றுக் கொள்ளும் விதத்தில்ஆயிரக் கணக்கான பட்டப் படிப்புகளை நடத்துகின்றன. எடுத்துக் காட்டாக Toronto பல்கலைக்கழகம் 948 பட்டப் படிப்புக்களைநடத்துகின்றது. இதுபோல நமதுநாட்டிலுள்ள பல்கலைக் கழகங்களும் வேலை வாய்ப்புக்களைப் பெறக் கூடியபட்டப்படிப்புக்களை நடத்த ஆவன செய்யவேண்டும். இதன் பொருட்டாகத்தொழிற்பயிற்சி, ஆய்வு நிதி மற்றும் STEM (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ) திறன் மேம்பாட்டுத்திட்டங்களை உள்ளடக்கிய நன்கு வரையறுக்கப்பட்ட உயர்கல்வி சீர்திருத்த உத்தியை அரசு அறிமுகப்படுத்த வேண்டும்.
இந்த அரசால் முன்வைக்கப்பட்டுள்ள பாதீட்டில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுக்கு 206 பில்லியன் ரூபா மீண்டெழும் செலவுக்காகவும் 65பில்லியன் ரூபா மூலதன செலவுக்காகவும் மொத்தமாக 271 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 11 பில்லியன் ரூபா கூடுதலானது ஆகும். இந்த அதிகரிப்பு கல்வித் துறையை பொறுத்தவரை போதுமானது அல்ல.மொத்தப் பாதீட்டில் கல்விக்கான ஒதுக்கீடு6.4 வீதமாக உள்ளது. இது குறைந்தது 10 வீதமாக ஆவது உயர்த்தப்பட வேண்டும்.
ஆசிரியர் அபிவிருத்திக்கு இந்த ஆண்டில் 6.13 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 2.08 பில்லியன் ரூபா அதிகமாகும். இது பாராட்டப்பட வேண்டிய விடயமாகும். எனினும் தொடக்கப் பள்ளிகளின் வசதியை மேம்படுத்த கடந்த ஆண்டு 302 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது.இந்த ஆண்டில் இது 10 மில்லியன் ரூபா ஆக குறைக்கப்பட்டுள்ளது. இது கவலை தரும் செய்தியாகும்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட நாட்டில் உள்ள பெரும்பாலான பல்கலைக் கழகங்கள் மோசமான உட்கட்டமைப்பு மற்றும் வரையறுக்கப்பட்ட ஆய்வு நிதியால் பாதிக்கப்பட்டுள்ளன.
அறிவு சார்ந்த பொருளாதாரமாக இலங்கை மாறுவதை நோக்கமாகக் கொண்டால், இந்த பல்கலைக்கழகங்கள் நவீன வசதிகள்,ஆய்வு நிதி மற்றும் வினைத்திறனான ஆசிரியர் குழாத்தைக் கொண்டதாக இருக்க வேண்டும். உயர் கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வித் தரத்தை மேம்படுத்தும் பொருட்டு உள்கட்டமைப்பு மேம்பாடு, ஆராய்ச்சி மானியங்கள் மற்றும் தொழில்துறை ஒத்துழைப்பு முதலியவற்றுக்கான ஒதுக்கீடு களுக்கு அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
இப்பொழுது உள்ள முறையில் ஆசிரியர் வளப்பங்கீடு சரியான முறையில் அமையவில்லை. ஆசிரியர் நியமனத்தின் பொழுது பெரும்பாலான ஆசிரியர்கள்,பின்தங்கிய இடங்களுக்கு நியமனங்களை பெற்று வருகின்றனர். வந்து சில காலங்களில் தத்தமது மாவட்டங்களுக்கு இடமாற்றம் பெற்றுச் சென்று விடுகின்றனர்.
இந்த சிக்கலை தீர்ப்பதற்கு கல்வியற் கல்லூரிக்கு அனுமதி வழங்கும் பொழுது பிரதேச செயலாளர் மட்டத்தில் உள்ள வெற்றிடங்களுக்கு அவ்வவ் பிரதேச செயலாளர் பிரிவுகளில் இருந்து பயிலுநர்களைத் தெரிவு செய்தால் இந்த சிக்கலைத் தீர்க்கலாம்.
பொது நிருவாக அமைச்சு கிராம அலுவலர்களை நியமிக்கும் பொழுது பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள வெற்றிடங்களுக்கு அவ்வவ் பிரதேச செயலாளரின் பிரிவுகளில் உள்ளவர்களையே நியமிக்கின்றது. இதே முறையை கல்வி அமைச்சும் பின்பற்றினால் ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வு காணலாம். இதுகுறித்த ஒரு கொள்கை முடிவை அரசு விரைவில் எடுத்துச் செயற்படுத்த வேண்டும்.
திருகோணமலை மாவட்டத்தில் தொடக்கக் கல்வியில் 278 ஆசிரியர் பற்றாக்குறையும், இடைநிலை கல்வியில் 991 ஆசிரியர் பற்றாக்குறையும், உயர்நிலைக் கல்வியில் 606 ஆசிரியர் பற்றாக்குறையும் ஆக மொத்தம் 1875 ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகின்றது.
இவ்வாறு ஆசிரியர் பற்றாக்குறையோடு பாடசாலைகளை நடத்துவது வருங்கால தலைமுறைக்கு எதிராக மேற்கொள்ளப்படும் ஒரு குற்றச் செயலாகும். தொடர்ந்தும் இவ்வாறான வெற்றிடங்களை விட்டுக் கொண்டிராமல் அவற்றை நிரப்ப ஆவன செய்ய வேண்டும். திருகோணமலை மாவட்டத்தில் 195 பாடசாலைகள் அதிபர் இல்லாமல் இயங்குகின்றன. இது மட்டும் அல்லாமல் 73 கல்வி நிருவாக சேவை அதிகாரிகள் (SLEAS) வெற்றிடங்களும் காணப்படுகின்றன.
திருகோணமலை மாவட்டத்தில் 78 கல்வி சாரா ஊழியர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுகின்றன. இதில் 73 வெற்றிடங்கள் காவலாளிகள் ஆகும். காவலாளிகள் இல்லாமல் பாடசாலை காணப்படும் பொழுது களவு போவதற்கான வாய்ப்புகள் அதிகம். இவர்களை நியமிக்க தாமதம் இன்றி ஆவன செய்ய வேண்டும்.
திருகோணமலை மாவட்டத்தில் உடைந்து விழக் கூடிய நிலையில் உள்ள கட்டடங்களைக் கொண்ட 16பாடசாலைகள் காணப்படுகின்றன. இவற்றை திருத்தி அமைக்க 39 மில்லியன் ரூபா செலவு ஏற்படும்.
திருகோணமலை மாவட்டத்தில் 12பாடசாலைகள் தொழிநுட்ப ஆய்வுகூடம் இன்றி இயங்குகின்றன. அதேபோல வகுப்பறைகளை நவீன மயப்படுத்த வேண்டிய தேவை உள்ள 19 பாடசாலைகள் காணப்படுகின்றன.
அதேபோல 15 பாடசாலைகள் வெள்ளப் பேரிடர் ஆபத்தோடு காணப்படுகிறன. இத்தோடு யானை தாக்குதல் அபாயத்திற்கு உள்ளாகக் கூடியவாறு 33 பாடசாலைகள் காணப்படுகின்றன. இடர்களில் இருந்து பாடசாலையை பாதுகாப்பதற்கு நிதி ஒதுக்கப்பட வேண்டும்.
இசை சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதன் மூலம் நாட்டின் கல்வித் துறையின் வளர்ச்சிப் பாதை வினைத்திறனுடன் செயல்படும் என்றார்.
ஏ.எச்ஹஸ்பர்