2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

"மாத்தி யோசி"

A.P.Mathan   / 2014 மே 21 , மு.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


மைன்ட்அப் மன்றத்தின் ஏற்பாட்டிலும் நெறியாள்கையிலும், கடந்த 15ஆம் திகதி, பொத்துவில் அல் பஹ்ரியா வித்தியாலயத்தில் நடைபெற்ற "மாத்தி யோசி" நிகழ்வு, அரங்கு நிறைந்த பங்கேற்பாளர்களோடு இனிதே இடம்பெற்றது.

"மாத்தி யோசி" நிகழ்வானது, முற்றிலும் மாறுபட்ட வகையில், நெறியாள்கை செய்யப்பட்டிருந்தது. மாணவர்களின் சுய ஆளுமை விருத்திக்கு துணையாகக் கூடிய வகையிலான ஒளியாவணங்கள் பலதும் இந்த நிகழ்வின் நிமித்தம் மைன்ட்அப் மன்றத்தினால் பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்டு ஒளிபரப்பாக்கப்பட்டன.

அத்தோடு, அரங்கின் முன் புறமாக, பல சமூக விழிப்புணர்வு செய்திகளைச் சொல்லக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட உயர் எளிமையியல் (Minimalist) சுவரொட்டிகள் பலவும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

நிகழ்வு, "முதற்சுவை" என்ற குறுகிய ஒளியாவணத்தின் மூலம் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து மைன்ட்அப் மன்றத்தின் தாரக மந்திரமான, "சிதறுண்ட புள்ளிகளை சேர்த்திணைப்போம் வாருங்கள்" என்ற தொனிப்பொருளில் அமைந்த குறுகிய ஒளியாவணம் ஒளிபரப்பப்பட்டது. தொடர்ந்து, மைன்ட்அப் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர்களான, முஸர்ரப் முதுநபீன் மற்றும் தாரிக் அஸீஸ் ஆகிய இருவரும் மேடையில் தோன்றி, "மாத்தி யோசி" என்ற மையக் கருத்தின் நோக்கம் பற்றி கலந்துரையாடி அதுபற்றி விரிவாகச் சொல்லும் ஒளியாவணத்தை வெளியிட்டனர். தொடர்ந்து மைன்ட்அப் மன்றம் என்றால் என்னவென்பது பற்றிய அறிமுகமும் அதற்கென பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்ட ஒளியாவணமும் காட்சிப்படுத்தப்பட்டது.

பின்னர் மாணவர்களோடான, இடைத்தொடர்பாடல் நிலைகளை அதிகரிக்க, அவர்களோடு பலதையும் ஒருங்கிணைப்பாளர்கள் பகிர்ந்து கொண்டனர். இதில் வெற்றியடைவதற்கு மகிழ்ச்சியாய் இருக்க வேண்டுமென்ற சித்தாந்தம் விரிவாக சமகால சம்பவ நிலைகளின் மூலம் விபரிக்கப்பட்டது.

இந்நாளில், சாத்தியமென நாம் உணர்கின்ற விடயங்கள் அனைத்துமே, ஒரு கட்டத்தில் அசாத்தியமானதாய் இருந்தவையே என்ற உண்மை புலப்படும் வகையில், ஓரொளியாவணம் ஒளிபரப்பட்டது.

அதன் பின்னர், எதையும் அடைந்து விடக்கூடிய சக்தியை ஒவ்வொருவரும் பெற்றிருக்கிறோம் என்பதைச் சொல்லுவதான ஒளியாவணம் காட்சிப்படுத்தப்பட்டது. நிகழ்வுக்கு வந்துள்ள ஆளுமைகள் அந்தச் சக்தியைப் பெற்றவர்கள் என்பதுவும் ஒருங்கிணைப்பாளர்களால் மாணவர்களுக்கு சுட்டிக்காட்டப்பட்டது.

"கனவுகளைத் தேடுவோர்" என்ற பொருளமைந்த பிரான்சு மொழியிலான பெயரைக் கொண்ட, திருக்கோவிலைச் சேர்ந்த இசையமைப்பாளர் ராஜ்குமாரின் அவர்களின் நடனக் குழுவினர், நிகழ்வில் கலந்து கொண்டோர் யாவரையும் கவரக் கூடிய வகையில், "பசுமை" என்ற தொனிப்பொருள் வெளிப்பட வித்தியாசமானதொரு நடனத்தை அரங்கேற்றினர். மரங்களை வளர்க்கும் மனங்களை வளர்ப்போம் என்ற தொனிப்பொருள் அந்த நாடகத்தில் காணப்பட்டது. அதனைத் தொடர்ந்து மரங்களை வளர்த்தலின் முக்கியத்துவம் பற்றிய ஒளியாவணம் காட்சிப்படுத்தப்பட்டது.

பின்னர், நிகழ்வில், சர்வதேச அளவில் புகழ் பெற்றுள்ள பொத்துவிலைச் சேர்ந்த கவிஞர் அஸ்மின், "மாத்தி யோசி" என்ற மகுடத்தில் கவிதை பாடினார்.

மாஸ்டர் ஏ.எல்.ஏ.முகம்மது அவர்களும் பொத்துவில் மத்திய கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்ட, நாடகமொன்று அரங்கேற்றப்பட்டது. இதில், அன்றைய காலத்தின் வகுப்பறை மற்றும் இன்றைய காலத்தின் வகுப்பறை ஆகியவற்றில் இடம்பெறும் சுவாரஸ்யமான சம்பவங்கள் நகைச்சுவை வடிவில் நாடகமாக வழங்கப்பட்டன.

பின்னர், தோல்விகளைக் கண்டு துவண்டு விடாமல், வெற்றியை நோக்கிய பயணத்தை விடாமுயற்சியோடு தொடர்கின்ற மாணவர்களை மைன்ட்அப் மன்றம் இனங்கண்டு, அவர்களுக்கு, Mindup New Find 2014 என்ற விருதுகளை வழங்கி கௌரவித்தது.

தேசிய ரீதியில் கட்டுரைப் போட்டியில் வெற்றியீட்டி, ஜனாதிபதியினால் கௌரவிக்கப்பட்ட, பொத்துவில் மத்திய கல்லூரி மாணவன், எம்.எல். ஏ. சிரான் சல்மான், Mindup New Find 2014 ஆக, விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இந்த மாணவரின், திறமைகள், ஆளுமைகள் குறித்து, மத்திய கல்லூரி அதிபர் எம்.ஐ.எம். புஹாரி, கல்லூரி ஆசிரியர்களான ஏ.எல். காஸிம் பாவா மற்றும் எம்.ஐ.எம். கையூம் ஆகியோர் சொன்ன கருத்துக்கள் காணொளி வடிவில் ஒளிபரப்பப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, தேசிய ரீதியில் பேச்சு போட்டிகளில் வெற்றியீட்டிய, பொத்துவில் தாருல் பலாஹ் வித்தியாலய மாணவன், எம்.ஏ.எம். அப்துற் றஹ்மான், Mindup New Find 2014 ஆக, விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இதன் போது, இம்மாணவரின் திறமைகள் குறித்து, குறித்த பாடசாலை அதிபர் எம். எல். கலந்தர் லெவ்வை மற்றும் குறித்த மாணவரின் வகுப்பாசிரியர் எம். அமீனுதீன் ஆகியோர் வழங்கிய கருத்துக்கள் ஒளியாவணமாக அனைவருக்கும் காட்சிப்படுத்தப்பட்டது.

மாணவர்களிற்கு உத்வேகம் வழங்கும் நோக்கோடு, மைன்ட்அப் மன்றத்தால் அழைக்கப்பட்ட சிறப்பு பேச்சாளர்களில் ஒருவரான, பொத்துவில் பிரதேச செயலாளர், என்.எம். முஸர்ரத் அவர்கள், "சிந்தனையை நிறுத்து" என்ற தொனிப்பொருளில் பேசினார்.

அதனைத் தொடர்ந்து, மைன்ட்அப் மன்றத்தினால், வருடத்தில் ஒரு தடவை, ஒருவருக்கு மட்டும் வழங்கப்படும் உயரிய பரிசான மைன்ட்அப் பரிசு பற்றிய அறிமுகம் காட்சிப்படுத்தப்பட்டது.

இந்த ஆண்டுக்கான மைன்ட்அப் பரிசை (Mindup Prize) பொத்துவில் அல் இர்பான் வித்தியாலயத்தின் மாணவியான, எம்.எம். பாத்திமா றுஸ்தா பெற்றுக்கொண்டார். இதன் போது, இவரின் ஒழுக்கம், கல்வியின் பாலான ஈடுபாடு, ஆர்வம் பற்றி கல்லூரியின் ஆசிரியர்களான, எச். அன்வர் சதாத், ஜே.எம். சுல்தான் மற்றும் ஏ. முகைதீன் பாவா மௌலவி ஆகியோர் வழங்கிய காணொளிக் குறிப்புகள் ஒளியாவணமாக ஒளிபரப்பப்பட்டது.

எம்.எஸ். முபாறக் ஆசிரியரினால், "மாத்தி யோசி" என்ற தலைப்பில் கவிதையொன்று வழங்கப்பட்டது.

மைன்ட்அப் மன்றத்தினால், சிறப்புப் பேச்சாளராக அழைக்கப்பட்ட பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எஸ்.ஏ. வாஸீத் அவர்கள், "எதிரிகளை நேசி" என்ற தலைப்பில் உரையாற்றினார்.

அதனைத் தொடர்ந்து பொத்துவில் அபிவிருத்தி ஒன்றியமும் மைன்ட்அப் மன்றமும் இணைந்து, பல்வேறு துறைகளில் சாதனை செய்த பொத்துவிலைச் சேர்ந்த ஆளுமைகளை, "மண்ணுக்கு மகிமை" என்ற விருது வழங்கிக் கௌரவித்தது.

பொத்துவிலில் முதலாவது Doctor of Medicine ஆக உருவாகி, குழந்தை நோயியல் நிபுணராக பணிசெய்யும், டாக்டர். எம்.எச். பௌமி எம். ஹசன், மேலைத்தேய வைத்தியத்துறையில் நிகழ்த்திய சாதனைக்காக விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

சர்வதேச மெல்வல்லுனர் போட்டியில், தங்கப் பதக்கம் வென்ற பொத்துவிலின் முதலாவது ஓட்டவீரன், ஏ.எல். அஸ்ரப், விளையாட்டுத் துறையில் நிகழ்த்திய சாதனைக்காக "மண்ணுக்கு மகிமை" விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

சர்வதேச அளவில் புகழ்பெற்ற, தென்னிந்திய திரைப்படங்களான "நான்" மற்றும் "அமர காவியம்" ஆகியவற்றில் பாடல்கள் எழுதியுள்ள பொத்துவிலைச் சேர்ந்த கவிஞர் அஸ்மின், தனது கலை, இலக்கியத்துறை சாதனைக்காக விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

பாடசாலை கற்றல், கற்பித்தல் அடைவுகளிலும், பௌதீக சூழலின் அழகிய தன்மையிலும் சிறந்து விளங்குகின்ற பாடசாலையான, அல் இர்பான் மகளிர் கல்லூரி, கல்வித் துறையில் நிகழ்த்தி வரும் சாதனைக்கான "மண்ணுக்கு மகிமை" விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. இந்த விருதை கல்லூரி அதிபர், ஏ.எல். கமருதீன் அவர்கள் பெற்றுக் கொண்டார்.

மீன்பிடித்துறையில் தன்னை தக்கவைத்துக் கொண்டு, பல்லாண்டு காலமாக அதில் நிலைத்திருந்து, அதனூடாக நாணயமான வியாபார நிலைகளை தக்க வைத்துக் கொண்டவர்களில் அலியார் நாகூர்தம்பி அவர்கள், மீன்பிடித்துறையில் நிகழ்த்திய சாதனைக்காக "மண்ணுக்கு மகிமை" என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

பொத்துவிலின் ஒரேயொரு கலாபூஷண விருதிற்கு சொந்தக் காரரான, அண்ணாவியார், எச்.எல்.எம். இஸ்மாயில் அவர்கள், பாரம்பரிய கலைகளின் நிலைப்பிற்காக ஆற்றிவரும் சேவைக்காக விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

தனது பல வருட கால அனுபவத்தின் மூலம், விவசாயத்தின் விஞ்ஞானத்தைத் தெரிந்து கொண்டு, அதனைப் பிரயோகித்து விவசாயத்தில் குறிப்பாக நெல் வேளாண்மையில் மிளிர்ந்து வரும் பாத்திரங்களுள், "தலைவர்" என அறியப்படும் எம்.எச்.அப்துல் காதர் அவர்கள், விவசாயத்தில் நிகழ்த்தி வரும் சாதனைக்காக "மண்ணுக்கு மகிமை" விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

பல்லாண்டு காலமாக, சுதேச வைத்தியத்துறையில் சேவைகள் பல ஆற்றி, தனது வாரிசுகள் மூலமாகவும் இந்த வைத்திய சேவையை வழங்குவதில் வெற்றி கண்ட முருகன் கோபால் வைத்தியரின் சேவையைப் பாராட்டும் வகையில், அவரின் மனைவி, திருமதி. கோபால் அவர்களுக்கு "மண்ணுக்கு மகிமை" விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

இதன் பின்னர், மைன்ட்அப் மன்றத்தினால், நான்கு சாதனையாளர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

பொத்துவிலின் முதலாவது நீதிபதியான, மாவட்ட நீதிபதி எம்.பீ. முகைதீன் அவர்களின் சாதனையைப் பாராட்டும் வகையில் அவருக்கு மைன்ட்அப் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு உத்வேகம் தரக்கூடிய பல அறிவுரைகளை மாவட்ட நீதிபதி தம் வாழ்க்கைச் சம்பவங்களின் மூலமாக விளக்கிக் கூறினார். பெற்ற தாயை மதிப்பதும், பிறந்த ஊரை மதிப்பதும் வெற்றியைப் பெற்றுக் கொள்ள வழிசெய்யும் என தெரிவித்தார்.

இலங்கையின் தேசிய ரகர் அணியின் தலைவராக இருந்து சாதனை செய்த பொத்துவிலைச் சேர்ந்த முன்னாள் பொலிஸ் அத்தியட்சகர் எம். அப்துல் மஜீட் அவர்களின் சாதனை, சமூக சேவை என்பவற்றைப் பாராட்டும் பொருட்டு, அவர் மைன்ட்அப் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

இவர் நிகழ்வில் உரையாற்றுகையில், ஒழுக்கமான தன்மைகளை மாணவர்கள் தங்களுக்குள் தக்கவைத்துக் கொள்வதன் மூலமே, வாழ்வில் உச்சங்களைத் தொடலாம் என வலியுறுத்தினார்.

பொத்துவிலின் முதலாவது சட்டத்தரணி என்ற பெருமைக்குச் சொந்தக்காரர், எம். இஸ்மாயில் ஆதம்லெவ்வை அவர்களின் சட்டம் மற்றும் இலக்கிய துறைகளில் ஈட்டிய சாதனைகளை மெச்சும் வகையில் மைன்ட்அப் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

இஸ்லாமிய மார்க்கக் கல்வியை கற்று, மூன்று முறை, மூன்று கல்லூரிகளில் மௌலவிப் பட்டம் பெற்றுள்ளதோடு, ஐக்கிய அரபு ராச்சியத்தின் இஸ்லாமிய அமைச்சின் ஆலோசகராக விளங்கி இலங்கை நாட்டிற்கே பெருமை சேர்த்துத் தந்த பொத்துவிலைச் சேர்ந்த அஸ்ஸெய்க். ஏ.எல்.எம். காஸிம் மௌலவி அவர்களின் ஆளுமை, சமூக சேவை ஆகியவற்றைப் பராட்டும் வகையில் அவருக்கு மைன்ட்அப் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரான கலாநிதி. எம்.எச்.ஹாறூன் அவர்கள், "காலத்தைத் தோற்கடிப்போம் வா" என்ற தலைப்பில் நேர முகாமைத்துவம் பற்றி உரையாற்றினார்.

பட்டயப் பொறியியலாளரான, ஏ.கே. அப்துல் ஜப்பார் அவர்கள், "தடைகளைத் தாண்டி முன்னேறு" என்ற தொனிப்பொருளில் உரையாற்றினார்.

இந்த நிகழ்வில், பேச்சாளர்கள், விருது பெற்ற ஆளுமைகள் யாவர் பற்றியதுமான ஒளியாவணங்கள் காட்சிப்படுத்தப்பட்டமை விசேட அம்சமாகக் காணப்பட்டது.

நிகழ்ச்சியின் நிறைவாக, ஆசிரியர் எச்.எம். அனூர்தீன் அவர்களால், நன்றியுரை வழங்கப்பட்டது.

மைன்ட்அப் மன்றம் எதிர்காலத்தில் பொத்துவில் மக்களிடையே சுயதொழில் வாய்ப்புக்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளில் தற்போது ஈடுபட்டு வருவதாக, அதன் ஒருங்கிணைப்பாளர்களான, முஸர்ரப் முதுநபீன் மற்றும் தாரிக் அஸீஸ் ஆகியோர் தெரிவித்தனர்.

அரங்கு நிறைந்த நிலையில், நிகழ்வு மிக இனிதே நடந்தேறியது, "மாத்தி யோசி" நிகழ்வின் பால் மக்கள் கொண்டிருந்த ஆர்வத்தைக் காட்டுகிறது என்றே சொல்லத் தோன்றுகிறது.












You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .