Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 01, வெள்ளிக்கிழமை
Kogilavani / 2015 மார்ச் 19 , மு.ப. 05:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
மலையக மக்களின் தேசியப் பண்பாட்டு அடையாளமாக காமன் கூத்து விளங்கி வருகின்றது. மீளவும் மீளவும் பெயர்க்கப்பட்டு சிதறடிக்கப்படும் சமூகமாக மலையக சமூகம் இருந்து வருகின்றது. நிலவுரிமையற்ற இந்த மக்கள் சமூகத்தின் இணைப்பு சக்தியாக விளங்கி வருபவற்றுள் காமன் கூத்துக்கு முக்கிய இடம் உண்டு.
தமிழகத்திலிருந்து இலங்கையின் மத்திய மலைநாட்டுக்கும், மத்திய மலைநாட்டிலிருந்து மீண்டும் இந்தியாவின் பல பகுதிகளுக்கும் பிரித்தனுப்பப்ட்ட மக்கள் கூட்டம் மீளவும் சமூகமாக இணைந்தெழுவதில் காமன் கூத்து பெரும் பங்கு வகித்திருப்பதை தெளிவாக காணமுடியும்.
இந்தவகையில் இந்தியாவின் நீலகிரி மலைத்தொடர்; பகுதிகளில் மிகவும் கடினமான சூழ்நிலைகளில் குடியமர்த்தப்பட்ட மக்கள் கூட்டம், மாண்புடன் மீண்டெழுந்து நிலை கொண்டிருக்கும் பயணத்தில் காமன் கூத்து ஆற்றிவரும் பங்கு அளப்பரியது.
இவ்வாறே இனரீதியான தாக்குதலுக்கு உட்பட்டு இலங்கையின் வடக்கு பகுதிகளில் குடியேறிய மக்கள் கூட்டம், விளிம்புநிலை மனிதர்களாக புறக்கணிப்புகளுக்கு ஆளான சூழ்நிலைகளிலும் அவர்களை ஒன்றிணைக்கும் சக்தியாக காமன் கூத்து விளங்கி வருவது அவதானத்திற்குரியது.
மக்கள் கூட்டம் சிதறடிக்கப்படும் சூழ்நிலைகளில் எல்லாம் ஒன்றிணைக்கும் காந்தப்புலமாக காமன் கூத்து தொழிற்பட்டு வருவதை மலையக சமூகப் பண்பாட்டு வரலாற்றில் காணமுடிகிறது. ஆயினும் நவீன அறிவும் நகரமயமாக்கமும் மக்களை ஒன்றிணைக்கும் வலுவான பண்பாட்டு அம்சங்களை அற்றுப்போகச்
செய்து காலனித்துவ தளைகளுள் வீழ்த்தி விடுவதில் கணிசமான வெற்றியைக் கண்டிருக்கிறது என்றே கூறவும் வேண்டும்.
காலாதிகால பல தலைமுறைகளின் வாழ்வியலோடு நிரூபிக்கப்பட்ட அறிவுத் திறன் என்பவை விஞ்ஞான ரீதியான நிரூபிக்கப்படாத மூடநம்பிக்கைகள் என காலனித்துவ அறிவு கட்டமைத்த நம்பிக்கை ஆதிக்கம் செலுத்துவதாகவும் அதிகார பூர்வமானதாகவும் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
விஞ்ஞான ரீதியானதும் அறிவு பூர்வமானதுமான மதிப்பீடுகள் இன்றியே பாரம்பரியமானதும் உள்ளூர் சார்ந்ததுமான அறிவுத் திறன் என்பன அழித்தொழிப்புக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது. காலனித்துவ கல்வியும் அதனை முன்னெடுத்துவரும் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் என்பவை இன்றுவரை இந்தவகையிலேயே இயங்கி வருகின்றன.
காலனித்துவத்துக்கு முன்னானவையெல்லாம் மூடநம்பிக்கைகள், பாமரத்தனமானவை, நாகரீகமற்றவை என்ற கருத்தாக்கப் புள்ளியிலிருந்தே நவீனயுகம் வரலாற்றை ஆரம்பிக்கிறது. அந்த ஆதிக்க வரலாற்றை முன்னெடுப்பவர்களாக அதற்கு உட்படுத்தப்பட்டிருப்பவர்களையே ஆக்கியும் வைத்திருக்கிறது. காலனித்துவத்தின் பலம் என்பதே ஆதிக்கத்தை விரும்பி ஏற்று முற்போக்கு முகத்துடன் முன்னெடுக்க வைத்திருப்பது தான்.
இந்தவகையில் காலனித்துவம் நாகரீகமற்றது, விஞ்ஞான பூர்வமற்றதென கட்டமைத்த பாரம்பரிய மற்றும் உள்ளூர் செயற்பாடுகளில் பங்கெடுப்பதும் அதனை முன்னெடுப்பதும் நாகரீகமற்றதும் பிற்போக்கானதும் பாமரத் தன்மையானதும் என்ற பதிவுகள் புத்தியில் ஏற்றப்பட்டு இயங்கு நிலையில் வைத்திருக்கப்படுகிறது.
இந்த பின்னணியில் பாரம்பரியங்கள் உள்ளூர் அறிவுமுறைகள் பற்றிய தேடல் என்பது பெருமிதம் பேணலுக்குரியவை அல்ல. மாறாக கேள்விக்கு உட்படுத்தல்களுக்கு ஊடான மீள்கண்டுபிடித்தல்களுக்கும் மீள் பயன்படுத்தலுக்குமான செயற்பாடுகளாக அமைகின்றன.
இந்த வகையிலேயே கூத்து மீளுருவாக்கம் என்பது ஈழத்து அரங்கச் சூழலில் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. உள்ளூர் அறிவுத் திறன்களின் மீள்கண்டுபிடிப்புகளுக்கும் புத்தாக்கங்களுக்குமான நடைமுறைப் பயணமும் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக செயல் முனைப்பு பெற்று வருகின்றது.
இது தற்சார்பான சமூகப் பொருளாதாரப் பண்பாட்டு வளர்ச்சிக்கானது. மக்கள் கூட்டுறவுகளுக்கூடான உலகந்தழுவிய வலைப்பின்னல்களின் கண்ணியாக அமைகின்றது.
இந்தப் பின்னணியிலேயே காமன் கூத்து பற்றிய பொன். பிரபாகரனின் நூல் முக்கியத்துவம் உடையதாகிறது. மரபு ரீதியாக நவீன அறிவுப்பரப்பில் நிகழ்த்தப்பட்டு வரும் பாரம்பரியங்களில் ஆவணப்படுத்தல் அல்ல இந்த நூல். இது இயங்கு நிலையில் காமன் கூத்தின் சமகாலத் தேவையையும் அதன் சவால்களையும் கருத்திற்கு கொண்டு வருகிறது.
பாரம்பரிய அரங்குகளின் முழுமையான பரிமாணங்களை அறியாது யானை பார்த்த கதையாக அணுகப்படும் நவீன அரங்கச் சூழலில் காமன் கூத்தின் முழுமையான பரிமாணங்களை வெளிக்கொண்டு வருவதில் முனைப்புக் கொண்டிருப்பதில் இந்நூல் வித்தியாசமானதாக அமைகின்றது.
பொன். பிரபாகரன் ஆய்வு செய்வதற்காக தகவல்களை சேகரிக்க காமன் கூத்தில் ஈடுபடுபவர் அல்ல. மாறாக காமன் கூத்தின் இயங்கு நிலையின் முக்கியத்துவத்தினை உணர்ந்து அதனை முன்னெடுப்பதில் பாரம்பரியக் கலைஞர்கள் சமூகங்களுக்கு சமாந்தரமாக இயக்கம் கொண்டிருக்கும் சமூகப் பண்பாட்டு செயற்பாட்டாளர்களில் முன்னோடிகளில் ஒருவராக இருப்பவர்.
மக்களை சமூகமயப்படுத்துவதில் காமன் கூத்தின் முக்கியத்துவத்தையும் அதன்போது கேள்விற்குட்படுத்தப்பட வேண்டியவற்றின் தேவையையும் உணர்ந்து கலை பண்பாட்டு செயல்வாதமாக முன்னெடுக்கப்பட்டுவரும் சமூக பண்பாட்டு செயல்மைய உரையாடல்களின் வலுவான கண்ணியாக இருப்பவர்.
மக்களின் உழைப்பிலும் உருவாக்கத்திலும் இயங்கிவரும் காமன் கூத்துப் போன்ற சமூக மையப்பட்ட பண்பாட்டு நடவடிக்கைகளில் இருந்து மக்களை அந்நியப்படுத்தி அவர்களை நுகர்வோராக கீழ்நிலைப்படுத்தும் 'நவீனமயமாக்கம்' என்ற கலைப் பண்பாட்டு மோசடிகளுக்கு எதிரான குரலாகவும், பாரம்பரியக் கலைகள் அருகிவிட்டன என்ற பொய்யுரைப்புகளை தகர்க்கும் ஆவணமாகவும், காமன் கூத்தின் சமகால முக்கியத்துவத்தை உணர்த்தும் கையேடாக இந்நூல் அமைகின்றது.
நவீன அறிவியல் ஆய்வுகள் என்ற பெயரிலான புனைவுகளுக்கும் யதார்த்தத்திற்குமாக நிகழ்ந்து வரும் உரையாடல்களை மேலும் வலுப்படுத்தும் ஊக்கியாகவும் இந்நூல் அமைந்திருப்பது அதன் சிறப்பாகும்.
தனியன்களாக்கப்பட்டு, அந்நியப்படுத்தப்பட்டு காலனித்துவ, நவகாலனித்துவ பிடிகளில் சிக்கியிருக்கின்ற நிலைமைகளில் இருந்தும், சாதி, பால் போன்ற உள்ளக ஆதிக்கங்களில் இருந்தும் விடுவிக்கும் கலைப் பண்பாட்டுக் களங்களாக காமன் பொட்டல்கள் மீளுருவாக்கம் வருகின்றன.
இந்தச் செயல்மைய உரையாடல்கள் தொடரும், வளரும், வலுக்கொள்ளும்.
கலாநிதி சி. ஜெயசங்கர்
முதுநிலை விரிவுரையாளர்
நுண்கலைத்துறை
கிழக்குப்பல்கலைக்கழகம்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
49 minute ago
4 hours ago
5 hours ago