2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

கலாசாரத்தில் திணிப்புக்கள் நடைபெறுகின்றன: மௌனகுரு

Kogilavani   / 2014 ஜூன் 29 , மு.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


'கடந்த 50 வருடங்களாக நான் கலைத்துறையோடு இருந்து பணியாற்றி வருகின்றேன். கடந்த முப்பது வருடங்களாக  எமது வடக்கு கிழக்குப் பிரதேசங்கள் பல்வேறு நெருக்கடிகளுக்குள் அகப்பட்டுக் கொண்டிருந்தது.

அதன் காரணமாக பல கலை நிகழ்வுகள் வெளிப்படையாக நடக்க வாய்ப்பிருக்கவில்லை. ஆனால் இன்று நிலைமைகள் தலைகீழாக மாறிவிட்டன. பிறநாட்டுக் கலாசாரத்தையே நம்முடைய கலாச்சாரமாக ஏற்றுக் கொள்ள வைக்கின்ற திணிப்புக்களும் இடம்பெறுகின்றன' என கிழக்குப் பல்கலைக்கழக ஓய்வு பெற்ற கலைத்துறைப் பேராசிரியர் எஸ். மௌனகுரு தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டம் – ஏறாவூர்ப்பற்று செங்கலடிப் பிரதேச செயலக கலை மன்றங்கள் இணைந்து வழங்கிய கலை சங்கம நிகழ்வு சனிக்கிழமை (28) தன்னாமுனை பொன்தானா மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'என்னுடைய அனுபவ அவதானிப்புக்களை இளையோர் தயை கூர்ந்து கேட்க வேண்டும்.

இப்பொழுது எமது நாட்டுக்கு பல இனத்தவர்களும் நிறத்தவர்களும் பலமொழி பேசுபவர்களும் வருகை தருகிறார்கள்.

நாங்கள் பல்வேறு நவீன தொழில்நுட்ப விடயங்களுக்கு எங்களையும் எங்களது பிள்ளைகளையும் பழக்கப்படுத்திக் கொண்டுள்ளோம்.

நாமும் பிள்ளைகளும் சேர்ந்து விடிய விடிய தொலைக்காட்சி பார்க்கின்றோம், அப்படிப்பட்ட தொலைத் தொடர்பாடல் நவீன தொழில்நுட்ப யுகத்திலே நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

வெளிநாட்டுத் தாக்கம், தொழில்நுட்பம், நடந்து முடிந்து விட்ட போரால் நாம் அடைந்திருக்கின்ற கஷ்டங்கள், இவற்றுக்கும் மேலால் நாங்கள் இப்பொழுது புதிதாக கலாசாரப் பாரம்பரியங்களை எடுத்துக் கொண்டு வருகின்ற ஒருகாலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

இந்த வேளையிலே பிரதேச செயலகங்கள் முன்வந்து பிரதேச செயலாளரின் தலைமையிலே அவரது முழு ஒத்துழைப்புடன் மீண்டும் இந்தக் கலைகளுக்கு உயிர்ப்பூட்டி வருகின்றார்கள்.

கிழக்கு மாகாணத்திலே பிரதேச செயலகங்களிலே இந்தக் கலாசார விடயங்கள் அதிகமாக நடந்து கொண்டிருக்கின்றன.

அவற்றில் ஒன்றுதான் எங்கள் பாரம்பரியமான கூத்து, பரதம்;, பறைமேளம், மகுடி போன்ற பல்வேறு மறைந்திருக்கின்ற அல்லது அழிந்து போய்க் கொண்டிருக்கின்ற கலைகளை மீளவும் புனருத்தாரணம் செய்து வருவது அதில் ஒரு வகை.

இன்னொன்று புதிதாக வருகின்ற நவீன நடனங்கள், நவீன பாடல்களை எங்கள் இளஞ் சிறார்களுக்குப் பழக்கி அதை ஒரு வித்தியாசமான கலைத்துறையிலே ஈடுபடுத்திக் கொண்டு வருகின்றோம்.

இந்த இரண்டும் எங்களுக்குத் தேவைதான். பாரம்பரியத்தை பேணுகின்ற அதே நேரத்தில் நவீன விடயங்களையும் உள்வாங்கத்தான் வேண்டும்.
இவ்வாறு இரண்டு போக்கிலே இந்தக் கலை அம்சங்கள் இருப்பதை அவதானிக்க முடிகின்றது.

ஜன்னலைத் திறந்து விடுங்கள் காற்று வரட்டும் அப்பொழுதுதான் சுவாசம் சுலபமாகிவிடும் என்று மகாத்மா காந்தி கூறியிருக்கின்றார்.
அதுபோல இப்பொழுது எல்லாமே திறக்கப்பட்டிருக்கின்றன காற்று தாராளமாக வருகின்றது, சுவாசமும் இலகுவாகிப் போயிருக்கின்றது.
ஊருக்கு ஊர் ஆங்கிலப் பாடசாலைகள் முளைத்திருக்கின்றன.

பிறநாட்டுக் கலாசாரத்தையே நம்முடைய சொந்தக் கலாசாரமாக ஏற்றுக் கொள்ள வைக்கின்ற திணிப்புக்களும் இடம்பெறுகின்றன.

தாய் மொழி தமிழைப் பேசுவதை விட நமது பிள்ளைகள் ஆங்கிலம் பேசுவதால் நாம் மகிழ்ச்சியடைகின்றோம்.

பாரம்பரியமான கொண்டாட்டங்களை விட கேக் வெட்டிக் கொண்டாடும் ஆங்கில மரபில் நாம் மகிழ்ச்சியடைகின்றோம்.

இப்படி எமது உள்ளூரின் எல்லா உணர்வு பூர்வமான கலாசாரங்களையும் நாம் தொலைத்துக் கொண்டிருக்கின்றோம்.

இந்த நிலையிலே சமூகப் பொறுப்புணர்ச்சி உள்ளவர்கள் இந்த இளம் சந்ததிகளை புதிய திசைக்கு வளர்த்தெடுக்க வேண்டும்.

இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கூடாக சுய சிந்தனை இல்லாத ரோபோக்களாக எமது பிள்ளைகளை வளர நாம் வழிவிடுகின்றோம். இதையே நாமும் பார்த்து மகிழ்கின்றோம்.

இங்கிருக்கின்ற பெற்றோரிடம் நான் ஒரு கேள்வி கேட்கின்றேன். உங்கள் பிள்ளைகள் ரோபோக்கள் மாதிரி வளர வேண்டுமா அல்லது உயிருள்ள மனிதர்கள் மாதிரி வளர வேண்டுமா?

ரோபோக்களுக்கு இதயம் இல்லை மனிதர்களுக்கு இதயமுண்டு. இதயமுள்ள, உணர்வுள்ள அக்கபூர்வமான பிள்ளைகளாக நமது பிள்ளைகளை வளர்த்தெடுப்பதற்கு அக்கறை காட்டுங்கள், அதற்காக உங்கள் பொருளாதாரத்தையும் நேரத்தையும் தியாகம் செய்யுங்கள்.

அதற்குப் பின்னர்தான் நம்மிடம் உயிரோட்டமான கலைகள் வளரும். கண்ணையும் காதையும் மாத்திரம் களிப்பூட்டுகின்றதாக நமது ஆடலும் பாடலும் அமைந்து விடக்கூடாது.

அது ஆன்மாவைத் தொடவேண்டும். இவ்வாறு ஆன்மாவைத் தொடுகின்ற கலைகளை வளர்த்தால்தான் நாம் அதற்கூடாக ஆரோக்கியமான ஒரு சமூகத்தை உருவாக்க முடியும்.

இப்பொழுது சிங்களப் பகுதிகளிலே நவீன நாட்டியம் என்கின்ற ஒரு மோகம் வந்து விட்டது. இதற்கு ஜேர்மன் நிறுவனம், பிரிட்டிஷ் நிறுவனங்கள் எல்லாம் நிதியளிக்கின்றார்கள். அது ஐரோப்பிய நடனம்.

நாம் மேற்கத்தேய நடனங்களை ஒரு புறம் தள்ளி வைத்து விட்டு எமது பாரம்பரிய மரபின் வழியாக ஒரு நவீன நடனத்தை உருவாக்க வேண்டும்.
கூத்தின் வழியாகவும், பரதத்தின் வழியாகவும் இந்த நவீனத்ததை பாரம்பரியம் தழுவியதாக உருவாக்கலாம்.

சந்திரலேகா பரதத்தை வைத்துக் கொண்டு ஓரு நவீன நடனத்தை உருவாக்கிக் காட்டினார்.

எல்லோரையும் போல நமது இளம் கலைஞர்கள் சாக்கடைக்குள்ளே விழுந்து விடாமல் உணர்வுள்ள,  உயிரோட்டமுள்ள எமது கலைகளை மீளப் புதுப்பிக்க வேண்டும். எமது உள்ளுர்ப் பிரதேச வாழ்வியல் பண்பாட்டை வளர்த்தெடுக்க எல்லோரும் நம்மை அர்ப்பணித்து செயலாற்ற வேண்டும்' என்றார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .