2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

அரங்க ஆய்வுக் கூடத்திற்கு அனா பக்னர் வருகை

Kogilavani   / 2014 ஜூன் 23 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


ஜேர்மனியைச் சேர்ந்த பிரபல நாடகக்கலைஞரும் நடன அமைப்பாளருமான அனா பக்னர் பேராசிரியர் சி.மௌனகுருவின் மட்டக்களப்பு அரங்க ஆய்வுகூடத்துக்கு சனிக்கிழமை (21) விஜயம்செய்திருந்தார்.

இவருடன், ஜேர்மன் கலாசார நிலையத்தின் ஒழுங்கமைப்பாளரான ஜெயம்ரமேஸ் டி சேரம், கொழும்பு பல்கலைக்கழக ஆங்கிலத்துறை விரிவுரையாளரும் நவீன நாடகத்தில் பரிசோதனைகளை நிகழ்த்துபவருமான செல்வி றுகானி பெரேராவும் கவிஞர் குமாரியும் இணைந்திருந்தனர்.

இதன்போது மட்டக்களப்பு அரங்க ஆய்வுகூடத்தினால் கடந்த 4 வருடங்களாக மேற்கொள்ளப்பட்டுவரும் நிகழ்வுகள், ஆய்வுகள், வீடியோ படக்காட்சி மூலம் காண்பிக்கப்பட்டது. அத்துடன், மாணவர்களின் நிகழ்த்துகைகளும் இடம்பெற்றன.

பின்னர் நடைபெற்ற கலந்துரையாடலில் கலைசார்ந்து பயணிப்பது தொடர்பிலும், எதிர்கால செயற்பாடுகள் குறித்தும் ஆராயப்பட்டது.
இலங்கையின் பல பாகங்களிலுமுள்ள நடனங்களை அறிவதும், அந்நடனங்களில் பரிசோதனை முயற்சிகள் செய்பவர்களைக் காண்பதும் அவர்களது நோக்கங்களாகும்.

இதன்போது, அரங்க ஆய்வுகூட அங்கத்தவர்களின் ஆற்றுகைகளும் காண்பிக்கப்பட்டன. ஆய்வு கூட அங்கத்தவர்கள் ஜேன்வாக்னரிடமிருந்து ஜேர்மனிய நாடக அனுபவங்களைப் பெற்றுக் கொண்டனர்.

ஜேன்வாக்னரும் ஏனையோரும் அரங்க ஆய்வு கூட கண்டு பிடிப்புக்களையும் முயற்சிகளையும் அறிந்து கொண்டனர்.

இதன்போது பாரம்பரிய கலைவடிவங்களைப் பேணிவரும் கிராமங்களில் ஒன்றான கன்னன்குடாவைச் சேர்ந்த கூத்துக் கலைஞரான களபதிப்பிள்ளையைக் கொண்டும் பல ஆடல் வடிவங்கள் ஆடிக் காண்பிக்கப்பட்டது.

கன்னங்குடாவைச் சேர்ந்தவரும் மகாபாரதக் கூத்தில் சல்லியன் பாத்திரம் தாங்கியவரும் 72 வயதினருமான கணபதிப்பிள்ளையைக் கொண்டு கிராமத்தில் ஆடப்படும் கூத்தாட்ட முறை ஆடிக் காண்பிக்கப்பட்டது.

இங்கு கருத்துத் தெரிவித்த பேராசிரியர் மௌனகுரு, மட்டக்களப்பில் பல ஆடல் வடிவங்கள் உள்ளன. இந்த ஆடல் வடிவங்கள் வெளி உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட வேண்டும். இவை கிராமங்களிலிருந்தே பெறப்பட்டன. நாங்கள் இவற்றிற்காக கிராமங்களுக்கே செல்ல வேண்டும் என்று தெரிவித்தார்.

அதேநேரம் ஜேர்மனியைச் சேர்ந்த பிரபல நாடகக்கலைஞரும் நடன அமைப்பாளருமான அனா பக்னர், ஒரு அரங்க ஆய்வு நிறுவனம் இவ்வளவு வேகமாகவும் ஆழமாகவும் செயற்பட்டு வருவது எனக்கு வியப்பைத்தருகிறது.

இது மென்மேலும் வளர்ச்சி பெறுவதற்கு எம்முடைய ஒத்துழைப்புக்கள் தொடர்ந்தும் இருக்கும் எனத் தெரிவித்தார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .