2024 நவம்பர் 02, சனிக்கிழமை

தொடர்பாடல் மாணவர்களின் நாட்டாரியல் கலை நிகழ்த்துகைகள்

Super User   / 2014 மே 29 , மு.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


கிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தில் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் தொடர்பாடல்துறை மாணவர்கள், தமது கற்கைகளின் ஒரு பகுதியாக நாட்டாரியல் கலை வெளிப்பாடுகளை பொதுமக்கள் முன் நிகழ்த்திக் காட்டினர்.

திருகோணமலை நகரப்பகுதியில் செவ்வாய்க்கிழமையன்று (27) மாலை நடைபெற்ற இந்த நிகழ்த்துகைகளில், நாட்டாரியல் கலை வடிவங்கள் மூலம் மக்கள் பிரச்சினைகளை, அபிவிருத்திசார் கருத்துக்களை எவ்வாறு கையாளலாம் என்பதை மாணவர்கள் எடுத்துக்காட்டினர்.

சிங்கள, தமிழ் மற்றும் இஸ்லாமிய நாட்டாரியல் கலை வடிவங்களின் ஒருங்கிணைந்த வடிவமாக நிகழ்த்தப்பட்ட இந்த நிகழ்த்துகைகள், வீதி நாடகம் என்ற பொதுமைக்குள் கொண்டுவரப்பட்டு மூவின மக்களாலும் மூன்று மொழிகளிலும் இணைந்து மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கல்விப்புலத்தில் பிரத்தியேக வகுப்புக்கள் மூலம் தமது சிறுபராய மகிழ்ச்சியைத் தொலைக்கும் சிறுவர்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தனிமனித ஆளுமையில் உருவாக்கும் உளப்பாதிப்புக்கள், சீதன முறைமையினால் உருவாகும் குடும்பச் சிக்கல்கள் ஆகியன இந்த வீதி நாடகங்களின் கருப்பொருட்களாக இருந்தன.

தொடர்பாடல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சி.ரகுராமின் வழிநடத்தலில், விரிவுரையாளர்கள் சிவப்பிரியா சக்திலிங்கம், ஷாலிகா போயாகொட, நிசன்சலா ஜெயவர்த்தன ஆகியோர் இந்த நிகழ்வுகளை அமைத்திருந்தனர்.

இந்த நிகழ்வுகளை நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கண்டுகளித்ததோடு, பல்கலைக்கழக மாணவர்களின் சமூக ஈடுபாட்டையும் பாராட்டினர்.

ஏற்கனவே விவரணப்படத் தயாரிப்புக்களிலும் குறும்பட உருவாக்கங்களிலும் தமது பட்டப்படிப்பில் பயிற்சிபெறும் இம்மாணவர்கள் - கடந்த சில வருடங்களில் மாத்திரம் சமூகப் பிரச்சினைகளை மையமாகக்கொண்ட 200 வரையான விவரணப்படங்களையும், 100 வரையான குறும்படங்களையும் உருவாக்கியிருப்பதோடு அவற்றில் சில சர்வதேச, தேசிய மட்டங்களில் விருதுகளைப் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
ஊடகம், தொடர்பாடல் கற்கைகள் புலத்தைப் பொறுத்தவரையில், இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களில் கிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாகம் மாத்திரமே. இத்துறைசார்ந்த பட்டப்படிப்பை ஆங்கிலமொழி மூலமும், தொடர்களப்பயிற்சிகள் மூலமும் வழங்கிவருவதும், இங்குள்ள மாணவர்கள் தமது பட்டப்படிப்பின் ஓர் அங்கமாக தேசிய தொலைக்காட்சியான ரூபவாஹினியில் மூன்று மாதகாலம் தொழில்சார் பயிற்சி பெறுவதும் கவனிக்கத்தக்கது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .