2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

கலாநிதிப் பட்டம் வழங்கிவைப்பு

Super User   / 2014 ஏப்ரல் 08 , மு.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


மட்டக்களப்பின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான சைவப் புலவர் எஸ். தில்லைநாதன் கிழக்குப் பல்கலைக் கழக தமிழ்த் துறையில் முதலாவது கலாநிதிப் பட்டத்தினைப் பெற்றுள்ளார்.

கடந்த சனிக்கிழமை (05) கிழக்குப் பல்கலைக் கழகத்தில் இடம்பெற்ற 18 வது பட்டமளிப்பு விழாவில் இவருக்கு இந்த கலாநிதிப் பட்டம் வழங்கப்பட்டது.

மட்டக்களப்புத் தமிழரது மரபு வழிப் பண்பாட்டுக் கூறுகள் எனும் தலைப்பில் இவர் ஆய்வை மேற்கொண்டு பல்கலைக் கழகத்திற்குச் சமர்ப்பித்திருந்தார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வேந்தரும் வாழ்நாட் பேராசிரியருமான எஸ். பத்மநாதன் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகப் பேராசிரியர் எஸ். யோகராசா ஆகியோரது மேற்பார்வையின் கீழ் இவர் இந்த ஆய்வை மேற்கொண்டிருந்தார்.

உயர் விருதுகள் பலவற்றைப் பெற்றுள்ள சைவப் புலவர் கலாநிதி எஸ். தில்லைநாதன் சைவமும் நாமும் (1991), தமிழ் மொழி இலக்கியமும் இலக்கணமும் (1994), மண்டூர் முருகன் திருவிருத்தல மாலை (2001), தமிழ் மொழியில் இலக்கியச் சிறப்பு (2005), தமிழ் மொழியில் இலக்கணச் சிறப்பு (2005), மட்டக்களப்பில் இந்து சமய கலாசாரம் (2006), சைவசித்தாந்த எட்டு விரதங்கள் (2007), மட்டக்களப்புக் கோயில்களும் தமிழர் பண்பாடும் (2008), ஆகிய நூல்களின் ஆசியராகவும் பல கட்டுரைகளை ஆக்கியோனாகவும் புகழ் பெற்றுள்ளார்.

66 வயதுடைய கலாநிதி எஸ். தில்லைநாதன் கோட்டக் கல்விப் பணிப்பாளராக இருந்து ஓய்வு பெற்றவராவர். இவர் அகில இலங்கை புலவர் சங்க உபதலைவராகவும் கடமையாற்றுகின்றார்.
கல்முனை துறைநீலாவணையைப் பிறப்பிடமாகவும் மட்டக்களப்பு மண்டூரை வசிப்பிடமாகவும் கொண்டவர். ஆரம்பக் கல்வியை துறைநீலாவணை மகாவித்தியாலயம், கல்முனை வெஸ்லி உயர்தரப் பாடசாலை போன்றவற்றில் பயின்று பின்னர் அவரது கலைமாணிப் பட்டத்தை பேராதனைப் பல்கலைக் கழகத்திலும் கல்வியியற் பட்டப்பின் டிப்புளோமாவினை இலங்கைத் திறந்த பல்கலைக் கழகத்திலும் பெற்றுள்ளார்.

1973 ஆம் ஆண்டு அகில இலங்கை சைவப் புலவர் பரீட்சையில் தேறியமைக்காக இவருக்கு சைவப் புலவர் என்ற பட்டம் கிடைக்கப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X