2024 டிசெம்பர் 25, புதன்கிழமை

'ஈழத்தின் வலி என்னையும் நோகடித்தது'

Kogilavani   / 2014 ஜனவரி 13 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன், தேவ அச்சுதன்
, வடிவேல் சக்திவேல்

'ஈழத்தின் வலியை உணர்ந்தவர்களில் நானும் ஒருத்தி. உணர்ந்ததை விட மனதில் அனுபவித்திருக்கின்றேன். உறக்கமில்லாத பல இரவுகளை நான் கழித்திருக்கின்றேன். போர் இடம்பெற்றபோது நிம்மதியில்லாத நாட்களாக என் வாழ்நாளில் பல நாட்களை நான் தொலைத்திருக்கின்றேன். விரக்தியின் விழிம்புக்குக் கூட நான் சென்றதுண்டு. உறவுகளிடம் கூட பகிர்ந்து கொள்ள முடியாத அந்த ஓலங்கள் இன்றும் என் மனத்திரையில் ஊமையாகி விட்டிருக்கின்றன' என மட்டக்களப்பு அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்தார்.

கிழக்குப் பல்கலைக்கழக வைத்திய பீட விரிவுரையாளரும் பொதுவைத்திய நிபுணருமான வைத்திய கலாநிதி மகேஸ்வரன் உமாகாந் எழுதிய 'ஈழத்தின் வலி', 'மாவிலாறிலிருந்து நந்திக் கடல் வரை நான்காம் ஈழ யுத்தம்' எனும் நூல் வெளியீடு ஞாயிற்றுக்கிழமை (12) இரவு ஈஸ்ட் லகூன் விடுதியில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், 

'2008 ஆம் ஆண்டு வன்னி மாவட்டத்தின் இக்கட்டான சூழ்நிலையில் முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்கள் நிருவாகத்திலிருந்து தனிமைப் படுத்தப்பட்டிருந்த நிலையில் அந்த மக்கள் தங்களது அடிப்படைத் தேவைகளுக்காகவும் தங்களது உயிரைக் காத்துக் கொள்வதற்காகவும் ஓடிக்கொண்டிருந்த வேளையிலே வைத்தியர்களான உமாகாந்தும் சத்தியமூர்த்தியும் இணைந்து அந்த நிர்க்கதியான மக்களுக்காக இரவு பகலாக கடமையாற்றிக் கொண்டிருந்தார்கள்.

நான் வவுனியாவில் மேலதிக அரசாங்க அதிபராகவும் அரசாங்க அதிபராகவும் கடமையாற்றிய காலத்தில்  அவர்களது மனிதாபிமான சேவையை நன்கு உணர்ந்திருந்திருக்கின்றேன்.

எந்தவிதமான சத்திர சிகிச்சைக் கூடங்களும் இல்லாமல் எந்தவிதமான விஷேட நிபுணர்களுமில்லாமல் தனித்த இரு மனிதர்களாக முழுமையாக மக்களுக்காகத் தங்களை அர்ப்பணித்துச் சேவையாற்றியிருந்தார்கள்.

மக்கள் இடம்பெயர்ந்து வவுனியாவை நோக்கி வந்து கொண்டிருந்தபோது யார் வருகிறார்கள் எப்படி வருகின்றார்கள் என்று எதுவும் தெரியாத நிலையில் அந்த மக்களை வவுனியா மாவட்டம் உள்வாங்கிக் கொண்டிருந்தது.

ஓமந்தைச் சோதனைச் சாவடிக்குச் சென்று அந்த மக்களை நான் பார்த்திருக்கின்றேன். அவர்களது துயரக் கதைகளைக் கேட்டிருக்கின்றேன்.

கசப்பாக இருந்தாலும் உண்மைகளை வெளிக்கொண்டு வரவேண்டிய தருணத்தில் அதனை வெளிப்படுத்தித்தான் ஆக வேண்டும். 'உங்களுக்கு வாக்களித்த மக்கள் அநாதைகளாக வந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்களை வந்து பார்க்கமாட்டீர்களா? என்று அந்த மாவட்டத்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பலமுறை வேண்டுகோள் விடுத்திருக்கின்றேன்.

பதிலளிக்க முடியாத அந்தத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்னுடன் தொடர்புகளைத் துண்டித்துக் கொண்ட சந்தர்ப்பங்களுமுண்டு.
இப்படிப்பட்ட அரசியல்வாதிகளுக்கு மத்தியிலே தங்களது அரச பதவிகளையும் உயிரையும் துச்சமாக மதித்து மக்களுக்காகச் சேவை செய்த இந்த இரு உத்தமர்களையும் ஒரு போதும் என்னால் மறக்க முடியாது.

இவர்கள் பின்னாட்களில் கைதுசெய்யப்பட்டு சிறையிலே வாடினார்கள்.

மூன்று இலட்சம் மக்கள் வவுனியாவுக்கு வந்து மூன்றரை வருட காலம் அகதி முகாம்களிலே தங்களது வாழ்நாட்களைக் கழித்து இன்று தமது பகுதிகளுக்கு மீண்டும் திரும்பிச் சென்றிருக்கின்றார்கள். ஒரு அத்தியாயம் எழுதப்பட்டு முடிந்து விட்டது.

ஆனால் அத்தியாயத்தின் வேதனைகளும் வலிகளும் பலருக்கு மறந்து போயிருக்கின்றது. சில இடங்களில் மறைந்து போயிருக்கின்றது.
அவைகளையெல்லாம் வெளியில் சொல்லி அதனைச் சரித்திரமாக்கிச் சாதித்துக் காட்டியிருக்கின்றார் இந்த வைத்தியக் கலாநிதி உமாகாந். வைத்தியர்களுக்கு மனங்களையும் மனதிலுள்ள ரணங்களையும் பார்க்கத் தெரிந்திருக்கின்றது என்பதை அவர் நிரூபித்திருக்கின்றார்.

எந்தத் துணிச்சலில் இந்த ஈழத்து வலியை எழுதினார் என்பது முதலில் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இந்த நூலுக்கு அதிகார பூர்வமாக அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாக என்னிடம் கூறியிருந்தார்.

விடுதலைப் போராட்டமென்பது விவேகத்தையும் ஞானத்தையும் அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும். மனதில் தூய்மையும் உண்மையும் இருக்க வேண்டும். இத்தனை அழிவுகளுக்குப் பின்னாலும் காலமாற்றத்தையும் சர்வதேசப் போக்குகளையும் சரியாகப் புரிந்து கொள்ளாத தான்தோன்றித் தனமாக மேற்கொண்ட நடவடிக்கைகளே படுதோல்விக்குக் காரணமென்பதை நூலாசிரியர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

உலக மகா யுத்தத்தின்போது ஐரோப்பிய மக்கள் சந்தித்த  துயரங்களும் அழிவுகளும் தங்களது எதிர்கால சந்ததியினர் அனுபவிக்கக் கூடாது என்பதனால் அந்த மக்கள் யுத்தத்திற்கு எதிராக கிளர்ந்தெழுந்த அந்த நிலைமை இன்று எமது சமூகமும் வேதனைகளின் விழிம்பினூடே விழித்தெழ வைத்திருக்கின்றது.

அரசியலிலே யதார்த்தத்தையும் உண்மையையும் நேர்மையையும் கொண்டவர்களாக இந்த சமுதாயத்திற்கு வழி காட்ட வேண்டிய தேவை உணரப்பட்டிருக்கின்றது என்பதை இந்த ஈழத்தின் வலி சுமந்து நிற்கின்றது.

உலகத்திற்கு இந்த வலியை எடுத்தியம்பியிருக்கும் வைத்திய கலாநிதி உமாகாந்தின் இந்த ஈழத்த வலி நூலாக்கத்தைப் பாராட்டுவதோடு எனது ஆதரவையும் தெரிவித்தக் கொள்கின்றேன்.

இந்த நூல் ஆங்கிலத்திலும் வெளிவந்து உலகின் கண்களுக்கும் ஈழத்தின் வலி உணரப்பட வேண்டும் என்பதே எனது அவாவாகும். தோல்வியின் காரணங்களையும் ஒரு புரிதலுக்காக உலகறியச் செய்ய வேண்டும்' என்றார்.

நிகழ்வில் வைத்தியர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், வர்த்தகப் பிரமுகர்கள், மதத் தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நூலின் முதற் பிரதியை நூலாசிரியரின் பெற்றோர் மட்டக்களப்பு அரச அதிபருக்கு வழங்கி வைத்தனர்.

மட்டக்களப்பு அம்பாறை மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் உட்பட பல பிரமுகர்களும் நிகழ்வில் உரையாற்றினர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X