2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

சஞ்சிகைகளின் கண்காட்சி

Kogilavani   / 2013 ஜூன் 24 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேவ அச்சுதன், ரீ.எல்.ஜவ்பர்கான்

கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறையின் ஏற்பாட்டில் நாளைம் மறுதினமும் சஞ்சிகைகளின் கண்காட்சி ஒன்று நடைபெறவுள்ளது.

நுண்கலைத்துறை கலைக்கூடத்தில் மொழித்துறைத் தலைவி கலாநிதி நதிரா மரியசந்தானம் தலைமையில் ஆரம்ப நிகழ்வு நடைபெறும். இக் கண்காட்சியில் பிரதம விருந்தினராக கிழக்குப் பல்கலைக்கழக துணை வேந்தர் கலாநிதி.கே.கோபிந்தராஜா கலந்துகொள்கிறார்.

சிறப்பு விருந்தினர்களாக கலை கலாசார பீட பீடாதிபதி, பேராசிரியர் மா.செல்வராஜா கிழக்குப் பல்கலைக்கழக பதிவாளர் கே.மகேசன் ஆகயோரும், கௌரவ விருந்தினர்களாக பேராசிரியை மௌ.சித்திரலேகா, மண்முனை மேற்கு பிரதேச செயலாளரும், படி சஞ்சிகையின் ஆசிரியருமான வெ.தவராஜா ஆகியோரும் கலந்துகொள்கின்றனர்.

சஞ்சிகைக் கண்காட்சி ஜூன் 2013 தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,  
'கடந்த 19ஆம் நூற்றாண்டின்; அச்சு சாதன வளர்ச்சியின் முக்கிய பாய்ச்சலாக அமைந் தவை பத்திரிகைகளும் சஞ்சிகைகளுமாகும்.

சமயப்பிரசாரம், அரசியற்செய்திகள், பொருளாதாரத்; தகவல்கள் முதலானவற்றை வெளி யிடுவதற்காக ஆரம்பித்த பத்திரிகைகளும் சஞ்சிகைகளும் சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து நவீன கவிதை, சிறுகதை நாவல் முதலான புதிய இலக்கிய வடிவங்களுக்குக் களம் அமைத்துக்கொடுத்தன.

கால ஓட்டத்தில்; பத்திரிகைகள் பல துறைச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க,  சஞ்சிகைகளே இலக்கியம், அரசியல், பொருளாதாரம், சமூகவிடயங்கள் போன்றவற்றுக்குக் காத்திரமான பங்கை ஆற்றி மக்களுக்கு அவை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தின.

அறிவுத் தேவைகளும் தேடல்களும் பெருகிவந்துள்ள நிலையில் நுண்கலைகள், அரசியல், சமயம், திரைப்படம், மருத்துவம், விஞ்ஞானம், பொருளாதாரம், சோதிடம், விளையாட்டு, பெண்கள், சிறுவர்கள் முதலானோர் சார்ந்தும் உயர்கல்வி நிறுவனங்கள், பிரதேச சபைகள் சார்ந்தும் பல வகையான சஞ்சிகைகள் வெளிவரத் தொடங்கின.

இன்று இளந்தலைமுறையினரைக் கவர்ந்திழுக்கும் பொழுதுபோக்குச் சஞ்சிகைகளிலிருந்து கனதியான விடயங்களை உள்ளடக்கிய கலை, இலக்கியச் சஞ்சிகைகளும் ஆய்விதழ்களும்  வெளிவந்து கொண்டிருக்கின்றன.

அச்சில் வெளிவந்த இதழ்களின் முக்கியத்துவம் குறைந்து மின் இதழ்கள் புற்றீசலாய் வளர்ந்துவிட்ட இன்றைய நிலையில் அச்சில் வெளிவந்த இதழ்கள் பற்றிய அறிவும் அவற்றை வாசிக்கும் பழக்கமும் மிகவும் குறைந்து கொண்டே செல்லுவதை அவதானிக்கமுடிகிறது.

எனவே மொழித்துறை எமது பல்கலைக்கழகத்தில் இக்கண்காட்சியை நிகழ்த்துவதன் மூலம் தமிழ் அறிவுலகின் சஞ்சிகைத் தேட்டத்தை ஓரளவுக்கேனும் காட்சிப்படுத்த முயல்கிறது.

இவ்வகையான சஞ்சிகைகள் அனைத்தையும் ஒருசேரக் காட்சிப்படுத்துவது சிரமமானதாகவும் காலநீட்சியுடையதாகவும் கூட்டுமுயற்சி சார்ந்ததாகவும் இருப்பதனால் அவற்றின் எல்லையை வரையறுத்து எமது தேடுதலில் கிடைத்துள்ள சஞ்சிகைகளை மட்டுமே தற்போது காட்சிப்படுத்தியுள்ளோம்.

இக்கண்காட்சி அனைத்து மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் படைப்பாளர்களுக்கும் ஆர்வலர்களுக்கும் புதிய உலகை அறிவிக்கும் என நம்புகின்றோம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X