2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

வடமாகாண குறும்பட போட்டி தொடர்பில் கலைஞர்கள் ஆட்சேபம்

Suganthini Ratnam   / 2013 மே 15 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


வடமாகாண கலை பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தால்; நடத்தப்பட்ட வடமாகாண குறும்படப் போட்டி தொடர்பில் வவுனியா மாவட்ட கலைஞர்கள் சிலர் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர்.

வவுனியா வைரவபுளியங்குளத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இது தொடர்பில் கலைஞர்கள் குழு ஒன்று ஊடகவியலாளர்கள் சந்திப்பை நடத்தியது.

இதன்போது அவர்கள் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

'அண்மையில் வடமாகாண மட்டத்தில் நடத்தப்பட்ட குறும்படப்  போட்டி தொடர்பில் அனைத்து குறும்படத் தயாரிப்பாளர்களுக்கும் போதுமான கால அவகாசத்தில் அறிவித்தல்கள் வழங்கப்படவில்லை. இதனால் அதிகளவான குறும்படங்கள் வெளியிடப்படும் வவுனியா மாவட்டத்திலிருந்து போதுமான குறும்படங்களை போட்டிக்கு அனுப்ப முடியாது போனது.

ஒரே நாளில் 17 குறும்படங்கள்; என்ற வகையில் 34 குறும்படங்கள் இரு நாட்களில் காட்சிப்படுத்தப்பட்டு போட்டி இடம்பெற்றது. இதன்போது நடுவர்களாக முதல் நாளில் கலந்துகொண்டவர்கள் சிலர் இரண்டாம் நாளில் கலந்துகொள்ளவில்லை. இது நடுவர்கள் இந்தப் போட்டியில் அக்கறை காட்டாத தன்மையை வெளிப்படுத்துகின்றது. எனவே நாம் எமது விசனத்தை தெரிவித்துக்கொள்ள வேண்டியுள்ளது.

குறும்படப் போட்டிக்கு நடுவர்களாக கலந்து கொண்டவர்கள் தொடர்பில் நாம் ஆட்சேபம் தெரிவிக்கின்றோம். நடுவர்கள் குறும்படத்துடன் தொடர்பு இல்லாதவர்களாக காணப்பட்டனர் என்பது தொடர்பில் நாம் போட்டி இடம்பெறும்போதே ஏற்பாட்டாளர்களுக்கு தெரிவித்தோம். எனினும் அதற்கான மாற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படாமையால் போட்டி முடிவுகள் சிறந்த முறையில் இடம்பெறவில்லை.

இவ்வாறான நிலை எதிர்காலத்தில் குறும்படத்துறையில் இருந்து எம்மை வெளியேற்றுவதாக கூட இருக்கலாம். ஏனெனில் இப்போட்டி விதிமுறையின் பிரகாரம் இடம்பெறவில்லை.

எமது தொழில்நுட்ப ஆற்றல்கள் உட்பட குறும்படத்தின் தன்மை வெளிப்படும் வகையில் நடுவர்களுக்கு காண்பிக்கப்படவுமில்லை. அத்துடன் போட்டிக்கு அனுப்பப்படும் குறும்படங்கள் குறிப்பிட்ட கால எல்லைக்குள் எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என கோரப்படடிருந்தபோதிலும், நீண்டகாலங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்ட படங்களும் போட்டிக்காக அனுப்பப்பட்டிருந்தது.

முன்னர் இடம்பெற்ற இதேபோன்ற போட்டியொன்றில் பரிசு பெற்ற குறும்படமும் காட்சிப்படுத்தப்பட்டதுடன், அக்குறும்படத்திற்கு சான்றிதழ் வழங்கியவர்களும் தற்போதைய போட்டியிலும் நடுவர்களாக கலந்து கொண்டிருந்தனர். இ;வ்வாறான நிலையில் இப்போட்டி தொடர்பில் நாம் எமது ஆட்சேபத்தை தெரிவித்துக்கொள்கின்றோம்' என்றனர். 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X