2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

கொழும்பில் மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியீடு

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 10 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஹேமந்த்

இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியாவில் வாழும் நோயல் நடேசன், முருகபூபதி ஆகியோரின் மூன்று மொழிபெயர்ப்பு நூல்களின் வெளியீட்டு நிகழ்வு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதன்போது எழுத்தாளர் திக்வல்லை கமால் வரவேற்புரையாற்றினார்.

இதனையடுத்து நடேசனின் 'வண்ணாத்திகுளம்' நாவலைப் பற்றிய அறிமுகவுரையை ஊடகவியலாளர் கலாநிதி குரூஸ் நிகழ்த்தினார். இந்நாவலை சமனலவெல என்ற பெயரில் மடுளகிரிய விஜேரத்ன மொழிபெயர்த்திருந்தார். ஏற்கெனவே இந்நாவல் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பாகியிருந்தது.
தொடர்ந்து ஊடகவியலாளரும் எழுத்தாளருமான முருகபூபதியின் தேர்ந்தெடுத்த சிறுகதைகளின் மொழிபெயர்ப்பு நூலான மதக செவனெலி நூலின் அறிமுகம் நடைபெற்றது.

இந்நூலிலுள்ள சிறுகதைகளை தமிழிலிருந்து சிங்கள மொழியில் பிரபல மொழிபெயர்ப்பாளரும் கல்விமானுமாகிய ஏ.ஸி.எம்.கராமத் மொழிபெயர்த்திருக்கிறார். இந்நூலின் வெளியீட்டு முயற்சிக்கு திக்வல்லைக் கமால் முக்கிய பங்களிப்பைச் செய்திருக்கிறார்.
மூன்றாவது நூலான 'உனையே மயல் கொண்டு என்ற நடேசனின் நாவலை' தமிழகத்தைச் சேர்ந்த பார்வதி வாசுதேவ் 'லொஸ்ற் இன் யு' என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

இது ஏற்கெனவே தமிழில் வெளியாகிப் பரவலான அறிமுகத்தையும் கூடிய வரவேற்பையும் பெற்றிருந்த நாவலாகும்.  இந்நாவலைப் பற்றி பிரபல ஆங்கில விமர்சகரும் ஐலண்ட் பத்திரிகையில் நீண்டகாலம் பணியாற்றியவருமான கே.எஸ்.சிவகுமாரன் அறிமுகம் செய்தார்.

இம்மூன்று நூல்களும் தமிழ்ப்படைப்பாளிகளால் எழுதப்பட்டு பிறமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. எனவே இவற்றைப் பிறமொழியில் வாசிப்போருக்கு ஒரு தமிழ்ச் சமூக நிலைபற்றிய அறிமுகத்தையும் அதன் வழியாக தமிழ்ச் சமூகம் எதிர்கொண்டுள்ள வாழ்க்கைச் சவால்களையும் அனுபவங்களையும் அறியக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

மொழிபெயர்ப்புப் படைப்புகளை அதிகமாக வெளியிட்டு, அவற்றைப் பரவலாக்குவதன் மூலமாக ஆழமான சிந்தனையைச் சமூகங்களுக்கிடையில் பரஸ்பரம் பகிர்ந்துகொள்வதுடன், ஒவ்வொரு சமூகங்களுக்குமிடையில் நல்லதொரு ஊடாட்டத்தையும் நிகழ்த்த முடியுமென்று இந்நிகழ்வில் தெரிவிக்கப்பட்டது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .