2024 டிசெம்பர் 28, சனிக்கிழமை

'பாடிப்பறை' முதலாமாண்டு நிறைவின் சிறப்பு நிகழ்வு

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 02 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


சமூக விஞ்ஞான கல்வி வட்டத்தினரால் மாதந்தோறும் பௌர்ணமி விடுமுறை நாட்களில் நடத்தப்பட்டு வரும் 'பாடிப்பறை' கவித்துறை நிகழ்வின் முதலாம் ஆண்டு நிறைவு, கடந்த வெள்ளிக்கிழமை மாலை வெள்ளவத்தையில் அமைந்துள்ள தேசிய கலை இலக்கியப் பேரவையின் கைலாசபதி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. 

பேராசிரியல் சி.சிவசேகரம் தலைமை தாங்கிய இந்த முதலாமாண்டு நிறைவு சிறப்பு பாடிப்பறையில், ம.மிதுன்ராகுலினால் 'தனிமை' என்ற தலைப்பில் மொழிபெயர்ப்புக் கவிதையொன்று அளிக்கை செய்யப்பட்டது. இது ஒரு உருது மொழிக்கவிதையாகும். இது ஃபைஸ் அஹ்மட் ஃபைஸ் என்ற தென்னாசியாவின் மிக முக்கியமான கவிஞர்களில் ஒருவராகக் கருதப்படும் பாகிஸ்தானிய கவிஞருடையது. இக்கவிதையை மீநிலங்கோ தமிழில் மொழிபெயர்த்திருந்தார். இதன்போது, மிதுன்ராகுல் தனது அளிக்கையில் கவிஞரைப் பற்றிய விரிவான அறிமுகத்தையும் கொடுத்து மொழிபெயர்ப்பின் முக்கியத்துவத்தைப் பற்றியும் விளக்கமளித்தார்.

அடுத்ததாக கா.கமலதாசனினால் 'மலையகத் தலைவர்களும் கொள்கைத் தயாரிப்பும்' என்ற தனி ஆற்றுகையொன்று முன்வைக்கப்பட்டது. மூன்று வேறுபட்ட பாத்திரங்களில் மலையகத்தின் இன்றைய நிலைமையையும் எவ்வாறு மலையக அரசியல் சீரழிந்து இருக்கிறது என்பதை தனது ஆற்றுகையின் மூலம் வெளிப்படுத்தினார்.

'சுட்ட சாம்பலின் சுடர்மிக எழுவோம்' என்ற தலைப்பிலான கவியரங்கம் பேராசிரியர் சி.சிவசேகரம் தலைமையில் இடம்பெற்றது. இதில் பண்பாட்டுச் சாம்பல் எனும் பொருளில் ச.சுதாகரும், தொழிநுட்பச் சாம்பல் எனும் பொருளில் மு.மயூரனும் வரலாற்றுச் சாம்பல் எனும் பொருளில் தெ.ஞா.மீநிலங்கோவும் சமூகச் சாம்பல் எனும் பொருளில் த.வி.ரெஷாங்கனும் கவிதை பாடினர். கவித்துவமும் கருத்தாளமும் எள்ளலும் கலந்த கலவையாய் கவியரங்கம் அமையப்பெற்றது. 

தேசிய கலை இலக்கியப் பேரவையின் யாழ் பிரதேசப் பேரவையானது 'ஈனம் இனியும் இல்லை' என்ற தலைப்பில் ஆற்றுகையொன்றை முன்வைத்தது. பாரம்பரிய மேடைநாடகத்தினதும் வீதிநாடகப் பாணியினதும் கலவையாக இடம்பெற்ற இவ்வாற்றுகையானது சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது. தவிலும் பறைமேளமும் ஒலிக்க பாடல்களோடும் இணைந்ததாக இந்த ஆற்றுகை அமைந்தது. க.சத்தியசீலன், ப.விஷ்ணு, ச.துஷ்யந்தன், த.ஸ்ரீபிரகாஷ் ஆகியோர் இதனை வழங்கினர்.

இறுதி நிகழ்வாக பேராசிரியர் சி.மௌனகுருவின் மட்டக்களப்பு அரங்க ஆய்வுகூடம்  இசை ஆற்றுகையொன்றை அளித்தது. அருணாசல கவிராயரின் இராம நாடகக் கீர்த்தனையின் சில பாடல்களையும் சுப்பிரமணிய பாரதியாரின் சில பாடல்களையும் கர்னாடக இசையிலும் கூத்திசையிலும் இசைத்து புதியதொரு அனுபவத்தை பார்வையாளர்களுக்கு அளித்தனர். இவ்வாற்றுகையை ஒழுங்கமைத்து முக்கிய பாத்திரம் வகித்தவர்கள் பேராசிரியர். சி.மௌனகுரு மற்றும் பிரியதர்சினி ஜதீஸ்வரன். இதில் க.மோகனதாசன், ஜி.வாசுகி, ச.துஜ்யந்தி ஆகியோர் பங்கெடுத்தமை குறிப்பிடத்தக்கது.









You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X