2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

தமிழர்களுடைய கலைகளை பார்த்து தமிழர்களாக பிறந்ததற்காக பெருமையடைகின்றோம்: கலாநிதி அகளங்கன்

Kogilavani   / 2012 பெப்ரவரி 12 , மு.ப. 09:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(நவரத்தினம்)

'கடந்த சில ஆண்டுகளாக நாம் ஏன் தமிழர்களாக பிறந்தோம் என்று கவலைப்பட்டதுண்டு. ஆனால், இன்று தமிழர்களுடைய கலைகளை பார்த்து தமிழர்களாக பிறந்ததற்கு நாம் அனைவரும் பெருமையடைந்து வருகின்றோம்' என வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தின் தலைவர் கலாநிதி தமிழ்மணி அகளங்கன் தெரிவித்தார்.

நிருத்திய ஸ்ருதி நாட்டிய கலாலயத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவு விழா நகரசபை மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றபோது கௌரவ விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,

கலைகள் என்பது கிராமங்களுக்குரியதே. கிராமங்களிலேயே அவை தோன்றின. ஆனால் நாம் நகரத்தாருக்குரியதாக சொல்லிக்கொண்டிருக்கின்றோம். பேச்சு மொழி தோன்றுவதற்கும் எழுத்து மொழி தோன்றுவதற்கும் முற்பட்டது கலை வடிவம். சைகை வடிவில் மக்கள் தமது கருத்துக்களை வெளிப்படுத்தினார்கள் விளங்கப்படுத்தினார்கள். அப்படிப்பட்ட சைகை வடிவத்தை வைத்து தான் நாட்டிய வடிவங்களை உருவாக்கியிருக்கின்றார்கள்.

அரிவு வெட்டுவது எப்படி என்று இன்று பிள்ளைகளுக்கு தெரியாது. இதற்கான இயந்திரங்கள் வந்துவிட்டதனால் உழவர் நட்டியங்கள் மூலமே நாம் அரிவு வெட்டுவதை பார்க்கின்றோம். அதேபோலவே மாடு பூட்டி உழுவதை காணமுடியாதுள்ளது. அவற்றையெல்லாம் நாம் கலைகள் மூலமே பாதுகாத்து வருகின்றோம். பல ஆண்டுகள் சென்றாலும் நாட்டிய வடிவங்கள் மூலமே இவற்றை காக்கவேண்டியுள்ளது.

இன்று கிராமிய கலைகளை நகரத்தவர்கள் வாங்கி அதனை உலகம் பூராகவும் பரப்பிவருகின்றனர். உதாரணமாக அமெரிக்கா அரிசியினை ஆசிய நாடுகளில் இருந்து வாங்கி அவற்றை அழகுபடுத்தி 'அமெரிக்கன் அரிசி' என விற்பனை செய்வது போலவே நகரத்தார்களும் கிராமிய கலைகளை வாங்கி அதனை பரப்பி வருகின்றனர்.

எனவே வவுனியா நகரசபையும் கலாசார மண்டபத்தினை கலை நிகழ்வுகளுக்கு குறைந்த செலவில் கலைஞர்களுக்கு வழங்க வேண்டும் என்ற வேண்டுகோளொன்றினை நகரசபை உபதலைவர் எம்.எம். ரதனிடம் விடுத்திருந்தேன்;. அவரும் அதற்கு குறைந்த செலவிலேயே வழங்குவதாக கூறுகின்றார். ஆனால் அதனை சட்டமாக்க வேண்டும். இம் மண்டபம் நகரசபை பணத்தில் கட்டப்படவில்லை. எனவே நகரசபை இதனை வைத்து உழைப்பதற்கு பார்க்க கூடாது. தமிழர்களுடைய கலைகளை வளர்ப்பதற்கு களமாக அமைக்க வேண்டும். கூட்டங்களுக்கும் வேறு நிகழ்வுகளுக்கும் எவ்வளவு பணத்தை பெற்றாலும் கலை நிகழ்வுகளுக்கு குறைந்த செலவில் வழங்குங்கள் என கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்தார்.

நகரசபை உபலைவர் எம். எம். ரதனின் உரை

எமது கலைகளை திட்டமிட்டு அழிக்க நினைக்கும் அரசாங்கத்திற்கு மத்தியில் எமது மாவட்ட மக்கள் கலையை போற்றுகின்றனர்.
எனினும் பல சம்பவங்கள் எமது கலாசாரத்தை சீரழிக்கவும் பார்க்கின்றன. அது எமது மாவட்டத்தில் மட்டுமல்ல எமது தாயக பிரதேசமான வடக்கு கிழக்கில் முழத்திற்கு முழம், கிராமத்திற்கு கிராமம் நகரத்திற்கு நகரம் அரங்கேறி வருகின்றன. எனவே இவ்வாறான நிலையை மாற்ற வேண்டுமாயின் நல்ல கலைகளை வளர்க்கும் மன்றங்கள் உருவாக்கப்படவேண்டும். இன்று பல அரச அதிகாரிகள் வாயை மூடிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர்களது மனங்கள் ஆதங்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அவர்கள் அரச அதிகாரங்களுக்குள் சிக்கிக்கொண்டிருக்கிறனர். அதனால் வாயை மூடி மௌனித்துப்போயிருக்கினறனர். இது வடக்கு கிழக்கிலேயே இடம்பெறுகின்றது. அவ்வறே எமது கலைகளையும் அழித்துவிட சிலர் நினைக்கின்றனர் என தெரிவித்தார்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .