2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

'அரங்குகள் மனிதர்களை ஒன்றிணைத்து செயற்படவைக்கும் களமாக திகழ்கின்றன'

Kogilavani   / 2012 ஜனவரி 20 , பி.ப. 02:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

'பாரம்பரிய அரங்குகள் அதனை முன்னெடுக்கும் சமூகங்களில் சமுதாய அரங்காகத் திகழ்ந்து வருகின்றன. இன்றைய உலகச் சூழலில் நுகர்வுப் பண்பாடு வேகமாக எம்மீது திணிக்கப்பட்டுவரும் நிலையில் மனிதர்களை ஒன்றிணைத்து செயற்படவைக்கும் களமாக பாரம்பரிய அரங்குகள் திகழ்ந்து வருகின்றன' என்று நீள்கிறது கூத்துக் கலைஞர் துரைராஜா கௌரீஸ்வரனின் கூத்துக் கலைசார்ந்த கருத்துக்கள்.

கூத்துக் கலைஞர், நடிகர், நாடக நெறியாளர், இசை வழங்குநர், ஒப்பனைக் கலைஞர், ஆசியர் என இவரது இயங்குதளம் விரிந்து பயணிக்கின்றது. கிழக்குப் பல்கலைக் கழகத்தில் நுண்கலைத் துறையில் சிறப்புக் கற்கையினைப் பெற்று பட்டதாரி ஆசிரியராக வாழைச்சேனையிலுள்ள கறுவாக்கேணி விக்ணேஸ்வரா வித்தியாலத்தியத்தில் (நாடகமும் அரங்கியலும்) கடமையாற்றிவருகிறார்.

மாணவர்களை புத்தக பூச்சிகளாக மட்டும் இயங்கவிடாமல் நாடகமும் அரங்கவியல் பாடத்தினூடாக அவர்களை சுயமாக இயங்கச் செய்வதற்கு ஊக்குவித்தல், சுயசிந்தனையுடையவர்களாக உருவாக்குதல் என பல்வேறு செயற்றிட்டங்களை சிறுவர் அரங்கு, கல்வியியல் அரங்கு ஆகிய செயற்பாடுகளினூடாக இவர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலைமட்டங்களில் நடத்தப்படும் நாடகப் போட்டி நிகழ்வுகளை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி பல்வேறு நாடக முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றார். இதுவரை இவரது நெறிப்படுத்தலில் 'மொட்டுக்கள் மலர' (2008), 'மீட்பு' (2008), 'வாழ்வளித்த வளவன்' (2009), 'பெண்களும் மனிதர்கள் என்றுணர' (2009), 'வாசிப்போம்' (2009), 'கர்ணனின் துயரம்' (2010), 'இணைந்துவாழ' (2011 இல் தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற சிறுவர் நாடகம்), 'லெட்ஸ் குரோ டிரீஸ்' (2011 ஆங்கில நாடகம்), 'ஊருக்கு நல்லது செய்வோம்' (2011), 'த பிளக் பேர்டி' (2011 ஆங்கில நாடகம்), 'கரிக் குருவியின் முயற்சி' (2011), 'பள்ளி செல்வோம்' (2011 தெருவெளி அரங்கு) ஆகிய நாடகங்கள் உருவாக்கம் பெற்றுள்ளன.

பாடசாலையுடன் அரங்க செயற்பாடுகளை இடைநிறுத்திக்கொள்ளாமல் மட்டக்களப்பில் இயங்கிவரும் 'மூன்றாவது கண்' குழுவினருடன் இணைந்து இவரது அரங்க பணிகள் தொடர்ந்தவண்ணம் உள்ளன. இவர் தமிழ்மிரர் இணையத்தளத்தில் கலைஞர்களுக்கான நேர்காணல் பகுதியில் பகிர்ந்துகொண்டவை...

கேள்வி:- இலங்கையில் பாரம்பரியக் கலைகளின் வளர்ச்சி எந்த நிலையில் உள்ளது..?

பதில்: இலங்கையில் தமிழர்கள் செறிந்து வாழ்கின்ற வடக்கு, கிழக்கு மாகாணங்கள், வடமேல் மாகாணம், மலையகம் ஆகிய பகுதிகளில் பாரம்பரியக் கலைகள் பயில் நிலையில் இருந்து வருகின்றன. இப்பிரதேசங்களைச் சேர்ந்த இளைஞர்கள் இக்கலைகளில் தமது ஆர்வத்தை பூரணமாக செலுத்தி வருகின்றனர். குறிப்பாக இன்றைய உலகமயமாதல் சூழலில் பாரம்பரியக் கலைகளின் முக்கியத்துவத்தினை உணர்ந்து அக்கலைகளை முன்னெடுக்கும் செயற்பாடுகளில் இளந்தலைமுறையினர் ஈடுப்பட்டுவருவதனைக் காணமுடிகின்றது. இதனை அவதானிக்கும்போது இலங்கையில் தமிழர்களின் மத்தியில் பாரம்பரியக் கலைகளின் வளர்ச்சி காலத்தின் தேவை கருதிய ஆக்கப்பூர்வமான முன்னெடுப்பாக மேற்கொள்ளப்படுகின்றது எனலாம்.

கேள்வி:- உங்களது ஆளுமையின் வெளிப்பாடாக கூத்துக் கலையை பிரதானமாக தேர்ந்தெடுத்தமைக்கு காரணமென்ன?

பதில்:- இன்றைய உலகச் சூழலில் பாரம்பரிய அரங்க மீளுருவாக்கல் செயற்பாடுகளில் ஈடுப்படவேண்டியது காலத்தின் தேவை என உணருகின்றேன். அரங்கத்துறையினைச் சார்ந்தவர்களுக்கு இது மிக அவசியமெனக் கருதுகின்றேன். ஏனென்றால் பாரம்பரிய அரங்குகள் அதனை முன்னெடுக்கும் சமூகங்களில் சமுதாய அரங்காகத் திகழ்ந்துவருகின்றமையே இதற்கு அடிப்படையாகும். இன்றைய உலகச் சூழலில் நுகர்வுப் பண்பாடு வேகமாக எம்மீது திணிக்கப்பட்டுவரும் நிலையில் மனிதர்களை ஒன்றிணைத்து செயற்படவைக்கும் களமாக பாரம்பரிய அரங்குகள் திகழ்ந்துவருகின்றன.

கேள்வி:- நீங்கள் கூத்து ஆற்றுகையில் ஈடுப்படும்போது அதிகமாக எவ்வாறான பாத்திரங்களை உள்வாங்குவீர்கள்?

பதில்:- கூத்தில் பாத்திரத் தெரிவு என்பது அண்ணாவியராலலேயே மேற்கொள்ளப்படும். பாரம்பரியமான சட்டங்கொடுத்தல் நிகழ்வில் அண்ணாவியாரால் எமக்கு வழங்கப்படும் பாத்திரத்தையே நாம் ஆடவேண்டும். அண்ணாவியார் பெரும்பாலும் பொருத்தமான பாத்திரங்களையே வழங்குவது மரபு. இதன்படியேதான் நானும் கூத்துக்களில் பாத்திரங்களைப் ஏற்று ஆடியுள்ளேன். இதுவரை வேடன், அருச்சுனன், வீமன், அனுமான், கிருஷ்ணர், அசோகச் சக்கரவர்த்தி போன்ற பாத்திரங்களை ஏற்றுள்ளேன்.

கேள்வி:- இதுவரை நீங்கள் கலை குறித்து மேற்கொண்ட செயற்றிட்டங்கள் பற்றி கூற முடியுமா?

பதில்:- பாரம்பரிய அரங்குகளின் தேவையினை அதிக கவனத்தில் கொண்டு கூத்தரங்குகளில் வேலை செய்வதில் அக்கறையாகவுள்ளேன். என்னுடைய கலையாக்கச் செயற்பாடுகள் இரு தளங்களில் இடம்பெற்று வருகின்றன. ஒன்று நான் தொழில்புரியும் பாடசாலையினை மையப்படுத்திய செயற்பாடு.

முதன் முறையாக வாழைச்சேனை கருவாக்கேணி வித்தியாலயத்தில் தமிழ் பண்பாட்டு இசையணி ஒன்று உருவாக்கப்பட்டது. இவ்விசையணி கடந்த 2010 ஆம் இலிருந்து இன்றுவரை இயங்கிவருகின்றது.

இதனைத் தவிர பாடசாலையில் நாடகமும் அரங்கக் கலைகளும் எனும் பாடத்தைக் கற்கும் மாணவர்களுக்கு பாரம்பரிய வடமோடிக் கூத்துக்களைப் பயிற்றுவிக்கும் நோக்குடன், கிண்ணையடிக் கிராமத்தில் உள்ள கந்தையா அண்ணாவியார் வீட்டு முற்றத்தில் கூத்துப் பயிலும் விசேட செயற்றிட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

'களரி' எனும் பெயரில் மாணவர்களின் ஆக்கங்களுடன், அரங்கச் செய்திகள் உள்ளடங்கிய செய்திமடல் வெளியிடப்படல்...

இவை பாடசாலை மட்டத்தில் நான் இணைந்துக் கொண்ட கலை குறித்த செயற்றிட்டங்கள்.

இவை தவிர 'மூன்றாவது கண்' நண்பர்கள் குழுவுடன் இணைந்து மேற்கொண்டுவரும் கலையாக்கச் செயற்பாடுகளாகும். 'மூன்றாவது கண்' நண்பர்களுடன் இணைந்து பல்வேறு கலையாக்கச் செயற்பாடுகளில் ஈடுப்பட்டு வருகின்றேன். அந்தவகையில் கூத்து மீளுருவாக்கச் செயற்பாடுகள், சிறுவர்களுடனான கலையாக்கச் செயற்பாடுகள், சிறுவர் கூத்தரங்கச் செயற்பாடு, பெண்களுக்கு இழைக்கப்படும் வன்முறைகளுக்கு எதிரான ஆண்கள் குழுவின் செயல்வாத அரங்க அளிக்கைச் செயல்பாடு, ஆற்றுகைச் செயற்பாடு, நாடக அரங்கக் கலைகளுக்கான வளவாளர், பெண்ணிலைவாதச் சிந்தனைகளின் பரவலாக்கத்துக்கான வளவாளர் பங்களிப்பு என எமது கலைச் செயற்றிட்டங்களில்  மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கேள்வி:- நாடகம், கூத்து இவற்றைத்தவிர வேறு எந்த துறையில் நீங்கள் அதிகமாக ஈடுப்பட்டுள்ளீர்கள்?

பதில்:- நாம் செய்யும் செயற்பாடுகள் யாவும் ஏதோ ஒருவகையில் நாடக அரங்குடன் தொடர்புபட்டுள்ளபோதிலும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அதிக ஆர்வத்திற்குரிய துறையாக பால்நிலைச் சமத்துவத்திற்கான நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுவருவதனைக் கூறமுடியும். அதாவது உலகில் மனித குலத்தின் மகிழ்ச்சியான வாழ்வியலுக்கு வழிகாட்டும் சிந்தனைகளைக் கொண்டுள்ள பெண்ணிலை வாதத்தினை விளங்கிக் கொண்டு பால்நிலைச் சமத்துவத்திற்கான செயற்பாடுகளில் ஈடுப்படவேண்டிது அவசியமாகும். எந்தவிதமான விடுதலையும் பால்நிலைச் சமத்துவமின்றி முழுமை பெறமாட்டது என்பதால் பெண்ணிலைவாதச் சிந்தனைகளைப் பரவலாக்கும் செயற்பாடுகளில் அதிக ஈடுப்பாடு காட்டிவருகின்றேன்.

கேள்வி:- பொதுவாக உங்களது கலை வளர்ச்சிப் பயணம் கிழக்கை மட்டும் அடிப்படையாகக் கொண்டதா?

பதில்:- பொதுவாக கலைச் செயற்பாட்டாளர்களுக்கு பிரதேச வரையறைகள் எதுவும் கிடையாது. மாறாக கலைஞர்கள் தாம் வாழ்கின்ற சூழலில் இயங்கிக்கொண்டிருப்பார்கள். தாம் வாழும் இடத்தில் உள்ள கலைகளுடன் தமது செயற்பாடுகளை மேற்கொண்டு வருவர். அந்தவகையில் கிழக்கில் நாம் வாழ்வதனால் கிழக்கிலுள்ள கலைகளில் செயலாற்றிக் கொண்டிருக்கின்றோம். கிழக்கிலுள்ள கலைகளுள் நின்றபடி உலக கலைப் பாரம்பரியங்களுடன் கைகோர்த்துக் கொண்டு எமது கலைப் பயணம் தொடர்கிறது.

கேள்வி:- நீங்கள் ஓர் ஆசிரியர் என்ற ரீதியில் இவ்வாறான கலை நிகழ்வுகள் மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்கு எவ்விதம் பங்களிப்புச் செய்கின்றன என்பதை பற்றி கூற முடியுமா?

பதில்:- எமது சூழலில் பல்வேறு வித்தியாசமான ஆற்றல்களுடன் மனிதர்கள் வாழ்கின்றார்கள். விசேடமாக மாணவர்களைப் பொறுத்தமட்டில் ஒவ்வொருவரிடமும் வித்தியாசம் வித்தியாசமாக திறன்கள் இருப்பதனைக் காணமுடியும். மாணவர்களிடமுள்ள வித்தியாசமான திறன்களைக் காண்பதற்கு மாணவர்களுடனான கலையாக்கச் செயற்பாடுகள் மிகவும் உதவிவருகின்றன. ஒவ்வொரு மாணவரும் தம்மைத்தாமே இனங்கண்டு கொள்ளவும் தன்னம்பிக்கையை வளர்க்கவும், ஆக்க பூர்வமான இலட்சியத்துடன் வாழத் துணிவதற்கும் மாணவர்களுடனான கலையாக்கச் செயற்பாடுகள் உதவிவருகின்றன.

இலங்கையில் வடபுலத்தில் கலாநிதி குழந்தை ம.சண்முகலிங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ள கல்வியியல் அரங்கச் செயற்பாடு ஒருமாற்றுக் கல்விமுறையாகவே மதிப்பிடப்படுகின்றது. இந்தவகையில் கலையாக்கச் செய்பாடுகளில் ஈடுப்படும்போது இவற்றில் கலந்துகொள்ளும் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்குபற்றி வருவதையும் ஆக்கப்பூர்வமான நடத்தைகளுடன் வளர்வதையும் கல்விச் செயற்பாட்டில் அக்கறை காட்டுவதையும் அவதானிக்க முடிகிறது.
சுருங்கச் சொன்னால் கலையாக்க நிகழ்வுகள் மாணவர்களின் பெறுமதியை உணர்த்தி அவர்கள் சுயமாக முன்னோக்கிச் செல்லும் உந்துதலை வழங்கி வருகின்றது எனலாம்.

கேள்வி:- கூத்துக் கலை சார்ந்து நீங்கள் மேற்கொண்டுள்ள புதிய முயற்சிகள் குறித்துக் கூறுங்கள்...

பதில்:-  கூத்துக்கலை சார்ந்த புதிய முயற்சி எனும்போது மூன்றாவதுகண் நண்பர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் சிறுவர் கூத்தரங்கச் செயற்பாட்டைக் கூற முடியும். இச்செயற்பாட்டில் நானும் ஒரு உறுப்பினராக பங்குகொண்டு வருகின்றேன். ஈழத்துக் கூத்தரங்க வரலாற்றில் கூத்து மீழுருவாக்க ஆய்வுச் செயற்பாட்டைத் தொடர்ந்து முன்வைக்கப்பட்டுள்ள புதிய விடயமாக 'சிறுவருக்கான கூத்தரங்கு' விளங்குகிறது. ஆய்வாளரும் அரங்கச் செயற்பாட்டாளருமான சி.ஜெயசங்கரின் எண்ணக்கரு விளக்கத்துடன் இச்செயற்பாடு மூன்றாவது கண் நண்பர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கேள்வி:- உங்களது பார்வையில் பாரம்பரிய கலைகளின் வளர்ச்சியில் ஊடகங்களின் பங்கு எவ்வாறு உள்ளதென எண்ணுகின்றீர்கள்?

பதில்:- பாரம்பரியக் கலைகள் பற்றிய பொதுப் பார்வை நவீன சிந்தனைகளால் கட்டமைக்கப்பட்டதாகவே இருந்துவருகின்றன. அதாவது பாரம்பரிய கலைகளை நூதனசாலைக்குரிய காட்சிப் பொருள்களாக கருதும், பண்பாட்டின் அடையாளமாகப் பார்க்கும் பார்வையே பொதுப்புத்தியாக இருந்துவருகின்றது. இந்தவகையான பார்வையுடனேயே ஊடகங்கள் மிக பெரும்பாலும் தொழிற்பட்டு வருகின்றன. இதிலிருந்து முன்னோக்கி இன்றைய உலகச் சூழலில் பாரம்பரியக் கலைகளின்  பெறுமதியை உணர்த்தும் நோக்கில் ஊடகங்கள் செயற்பட வேண்டியது காலத்தின் தேவையாகும்.

பல்வேறு இடங்களிலும் நிகழ்ந்துவரும் பாரம்பரிய கலையாற்றுகைகள் குறித்த செய்திகளை வெளிப்படுத்துவதுடன், பாரம்பரியக் கலைகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் ஆக்கங்களை ஆய்வுக் கருத்துக்களை வெளிக்கொண்டு வருவதில் அதிக அக்கறை காட்டவேண்டும். சில அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் குறிப்பிடத்தக்க அளவு இப்பணியைச் செய்வதைக் காண்கிறோம். இது மேலும் பரவலாக்கம் பெறுவது அவசியமாகும்.
 

நேர்காணல்:- க.கோகிலவாணி
படங்கள்:- நிஷால் பதுகே


You May Also Like

  Comments - 0

  • ***மல்லிகை சிராஜ்*** Sunday, 29 January 2012 08:47 PM

    நேர்காணல்:- க.கோகிலவாணி
    படங்கள்:- நிஷால் பதுகேக் கு நன்றிகள்
    கூத்துக் கலைஞர் துரைராஜா கௌரீஸ்வரிக்கு வாழ்த்துக்கள்

    Reply : 0       0

    satheesh Thursday, 16 February 2012 10:06 PM

    மிக மகிழ்ச்சி... மேலும் தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள். இறைவன் அருள் உங்களுக்கு எப்போதும் இருக்கட்டும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .