2024 நவம்பர் 02, சனிக்கிழமை

சமூகங்களை ஒன்றிணைக்கும் முயற்சியே 'தென்றல் Singing Star': ஹட்சன் சமரசிங்க

Kogilavani   / 2014 ஜனவரி 10 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


'யுத்தம் நிறைவடைந்து ஐந்து வருடங்கள் நிறைவடைந்திருக்கும் இந்த தருவாயில் சமூகங்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் நாம் 
இறங்கியுள்ளோம். இரு சமூகங்களுக்கு இடையில் பாலம் ஒன்றினை அமைக்கும் முயற்சியின் ஒரு ஏற்படாகவே இந்த 'தென்றல் Singing Star' இசை நிகழ்வு அமைந்துள்ளது' என இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹட்சன் சமரசிங்க தெரிவித்தார்.

'இந்த இசை நிகழ்வின் இறுதி போட்டிக்கு தெரிவாகி இருக்கும் 10 பேரில் நான்கு பேர் தமிழர்கள், நான்கு பேர் சிங்களவர்கள், இருவர் முஸ்லிம்கள். இந்த இசை நிகழ்ச்சிக்கூடாக இலங்கையில் வாழும் பல்லின சமூகங்களையும் ஒன்றிணைக்கும் ஒரு சந்தர்ப்பம் வாய்க்கும் என்று நாங்கள் ஒருபோதும் நினைத்ததில்லை' என்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ஏற்பாட்டில் கடந்த ஜூலை 1ஆம் திகதியிலிருந்து நடைபெற்று வரும் 'தென்றல் Singing Star' என்ற நட்சத்திரப் பாடகர் தெரிவுப் போட்டியின் இறுதிப்போட்டி எதிர்வரும் ஜனவரி 18 ஆம் திகதி இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஆனந்த சமரக்கோன் உள்ளக அரங்கில்நடைபெறவுள்ள நிலையில் அது தொடர்பில் அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று வெள்ளிக்கிழமை கொழும்பில் இடம்பெற்றது.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'இந்தியாவில் மிக புகழ்பெற்ற பாடகராக அறியப்படும் ஜேசுதாஸின் 73 ஆவது பிறந்த தினம் இன்றாகும். தனது பாடும் திறமையால் பல்லாயிரம் ரசிகர்களை கொண்ட அவர் வெறுமனே காதல் பாடல்களை மட்டும் பாடவில்லை. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்திப் பாடல்களையும் பாடியுள்ளார்.

அப்படிப்பட்ட இசைக்கலைஞன் இந்தியாவில் இந்து ஆலயங்களுக்கு செல்வதற்குக்கூட அனுமதிக்கப்படுவதில்லை என்பதை இங்கு நான் சுட்டிக்காட்ட விளைகிறேன்' என்றார்.

அண்மையில் வெள்ளைக்காரர் ஒருவர் சிங்களப்பாடலொன்றை மிகவும் இனிமையாக பாடியிருந்தார். அது எனக்கு மிகவும் ஆச்சர்யமாகவே இருந்தது. வெள்ளைக்காரர் ஒருவரால் எவ்வாறு சிங்களப்பாடலொன்றை அதுவும் ஒரு பிழையின்றி இனிமையாக பாட முடியும் என்பதை அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் எனக்குள் ஏற்பட்டது. அது தொடர்பில் நான் அவரிடம் வினவினேன்.

அதற்கு அவர், 'நான் சிங்கள பெண் ஒருவரையே திருமணம் செய்துள்ளேன். என்னால் சிங்கள பாடல் மட்டுமல்ல சிங்கள மொழியையும் சரளமாக பேச முடியும்' என்று கூறினார். வெளிநாடுகளுக்கு செல்லும் தமிழர்கள் சிலர் அங்கு ஜேர்மன், பிரான்ஸ் உட்பட்ட பல்வேறு மொழிகளைக் கற்றுகொண்டு வெள்ளைக்கார பெண்ணை திருமணம் செய்துகொண்டு பரம்பரையொன்றை உருவாக்கிக்கொள்கின்றனர்.

வெளிநாட்டில் புது இன பரம்பரை ஒன்றும் உருவாக்கும் எம்மவர்களுக்கு ஏன் இங்கு ஒரு பரம்பபரையை உருவாக்க முடியாது?

சிங்கள இளைஞர் ஒருவர் தமிழ் பெண்ணையும் தமிழ் இளைஞர் ஒருவர் சிங்கள பெண்ணையும் திருமணம் செய்துகொண்டு அவர் சார்ந்த மொழிகளை கற்று ஏன் புதிய பரம்பபரையை உருவாக்க முடியாது?  என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழர்களுக்கே உரிய பல்வேறு கலைவடிவங்கள் காணப்பட்டன. ஆனால், அவை அனைத்தும் யுத்தத்தினால் அழிவடைந்து போனமைதான் உண்மையான நிலைவரம்.

'இந்த இசை நிகழ்சிக்காக சுமார் 8 இலட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தன. அவற்றில் பட்டைத்தீட்டப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட 10 பேரே எதிர்வரும் 18 ஆம் திகதி தேசிய ரீதியில் சாதனை படைக்கவுள்ளார்கள். இவர்கள் நாடளாவிய ரீதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கலைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது' எனவும் அவர் தெரிவித்தார். (படங்கள்- பிரதீப் டில்ருக்ஷன)



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .