2024 நவம்பர் 25, திங்கட்கிழமை

ஒளிவீசும் சூரியனுக்கு வயது 18 !!!

Gopikrishna Kanagalingam   / 2016 ஜூலை 25 , மு.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

காற்றலையைக் கட்டியாண்டு காலம் காலமாக காதினிக்கும் இசை தந்து அசைக்க முடியாத அலைவரிசையாய் 17 ஆண்டுகள் தமிழ் பேசுவோர் மனங்களில் நீங்கா இடம் பிடித்த வானலைகளின் முதல்வன் சூரியன், 18ஆம் ஆண்டை நோக்கி படையெடுக்க தயாராகின்றான்.

கால ஓட்டத்தின் வேகத்தில் காற்றலையை மாற்றி காலம் மாறும் நாகரிகம் கருதிய நிகழ்ச்சிகளைப் படைப்பதில் சூரியனுக்கு நிகராய் இது வரை வேறு எந்த வானொலியிலும் தோன்றவில்லை எனலாம். நேயர்கள் விரும்பும் நிகழ்ச்சிகளை புதிது புதிதாய் வடிவமைத்து வழங்குவதில், என்றுமே சூரியன் முதல்வன் தான். சூரியன் வானொலி, ஒரு நிகழ்ச்சியை வடிவமைத்து வானலையில் தவழ விட்டால், அதை ஒத்த பாணியில் ஏனைய வானொலிகளிலும்  நிகழ்ச்சிகளைக் கேட்கக் கூடியதாகவும் இருக்கும்.

இலங்கைத் தமிழ் வானொலிகளிலே மாபெரும் இசை நிகழ்ச்சியொன்றை வழங்கும் ஒரே வானொலி என்றால், அது சூரியன் மட்டும் தான். சூரியன் மெகா பிளாஸ்ட் என்ற பிரமாண்ட நிகழ்ச்சிகளின் ஊடாக, நாட்டின் எந்தத் திசை சென்றாலும் பல இலட்சம் சொந்தங்களை ஒரே இடத்தில் திரட்டும் சாதனை நிகழ்வுமெனலாம்.

இரசிகர்களைத் திருப்திப்படுத்த வெறுமனே நிகழ்ச்சிகளை மட்டும் ஒலிபரப்பாமல், சமூகம் சார்ந்த செயற்பாடுகளிலும் பல பிரமாண்டங்களைப் படைத்துள்ளான் சூரியன். இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்படும் மக்களுக்காக, அவர்களின் தேவைகள் அறிந்து அவற்றைப் பூர்த்தி செய்து வைப்பதிலும், கடந்த காலங்களிலும் 'உதவும் கரங்களை' கை கோர்த்தவன், சூரியனே. அது மட்டுமல்லாது, ஒவ்வொரு வருடமும் வருமானம் குறைந்த குடும்பங்களின் பிள்ளைகளுக்கான ஓராண்டுக்குத் தேவையான பாடசாலை உபகரணங்களையும் சூரிய சொந்தங்களின் முழுமையான ஒத்துழைப்புடன் ஆரம்பித்து, பொருட்களைக் கையளித்தும் வருகின்றான்.

தன் நேரடி வழிநடத்தலுடன், சூரியன் ஆரம்பித்த நாளில் இருந்த உற்சாகத்தை விட இன்னும் இன்னும் அதிக உழைப்பை வெளிப்படுத்தி ஆசிய ஊடக வலையமைப்பை இலங்கையின் முதல்தர ஊடக வலையமைப்பாக நிலைநிறுத்த தன் முழுமையை தந்துகொண்டிருக்கும் நிறுவனத் தலைவர் ரெய்னோ சில்வாவின் நேரடி வழிநடத்தலில், சிறக்கின்றது சூரியன்.

பல ஆண்டுகால ஊடக அனுபவம் கொண்ட, தனியார் வானொலிகளில் பல புதுமைகள் புகுத்திய, இன்று வரைக்கும் முன்னணி ஊடகவியலாளர்களைத் தோற்றுவித்த தன் காந்தக் குரலாலும் ஆளுமையாலும் காலை நேரத்தில் இலங்கை வானலையை சிறப்பிக்கும் ஏ.ஆர்.வி. லோஷன், சூரியனின் பணிப்பாளராக தன் பணியை சிறப்பிக்கிறார்.

சிரேஷ்ட நிகழ்ச்சி முகாமையாளராக, இசைச்சமர் நிகழ்ச்சியின் நாயகன் சந்துரு செயற்பட, நிகழ்ச்சி முகாமையாளராக 'என்றென்றும் புன்னகை'யின் நாயகன் டிலான் செயற்படுகிறார்.

காலை வேளையை சிறப்பிக்க  விடியும் வேளையை சுறுசுறுப்புடன் உறவுகளின் மகிழ்ச்சியுடன் அதிகாலைப் பொழுது பக்தி மையமாகவும் உதயமாக்குகிறது. இந்த நிகழ்ச்சியை ரிம்ஸாட் மற்றும் பிரெஷா தொகுத்து வழங்குகின்றனர்.

காலை நேர செய்தியைத் தொடர்ந்து, புதுப் புது தகவல்களுடன் சுடச் சுட விளையாட்டு மற்றும் பல இலட்சம் இரசிகர்களின் நெஞ்சம் தொட்ட  பேப்பர் பெடியனின் பத்திரிகைச் செய்திகளுடன் உற்சாகத்துக்குக் குறைவில்லாத காலை நேரத்தின் கலக்கல் சூரியராகங்கள் நிகழ்ச்சியை ஏ.ஆர்.வி.லோஷன் மற்றும் மனோஜ் சேர்ந்து கலக்க, அதன் பின் கலகல இசைச்சமர் நிகழ்ச்சியை வழங்கும் சந்துரு மற்றும் மேனகா ஆகியோர் சிரித்துச் சிரித்துச் சிறைபிடிக்கின்றார்கள்.

மதிய நேர பிரதான செய்தியறிக்கையினைத் தொடர்ந்து, வயிறு குலுங்க சிரிக்க நகைச்சுவை துணுக்குகளுடன் நிஷாந்தன் மற்றும் வர்ஷியுடன் 2 மணித்தியாலங்கள், மதிய நேர இசை விருந்தாய், மதிய உணவுடன் இசை சேர்ந்து தித்திக்கிறார்கள். புதிய செய்திகளை தகவல்களாக தெரிந்துகொள்ள ஆசைப்படும் தேடல் மிகுந்தோர் நாடும் ஒரே இடமாக, கும்மாளம் தெறிக்கிறது. 3 மணி முதல் 5 மணி வரை, இந்நிகழ்ச்சியினூடாக வானலையைப் புதுப்பிக்கின்றார் தரணீதரன்.

அலுவலக வேலை முடிந்து அலுப்பாய் திரும்பும் அனைவருக்கும் அலட்டல் இல்லாத நிகழ்ச்சியை மாலை வேளையில் முதற்தர நிகழ்ச்சியாய், யார் பேசுறீங்க பகுதியுடன் 'என்றென்றும் புன்னகை', புன்னகைக்க வைக்கிறது, னு து  டிலான் - கோபிகா இணைந்து கேட்போரையும் குதூகலிக்க வைத்து மனம் கேட்கும் பாடல்களையும் அள்ளித் தருகின்றார்கள்.

இரவு பிரதான செய்திகளைத் தொடர்ந்து காதல் உள்ளங்களை மகிழ்வித்து - கவிதை பாட பல கவியாளர்களை அழைத்து வந்து இதயம் தேடும் கீதங்களை அழகாகத் தொகுத்துத் தருகிறார் பிரஷாந். தொடர்ந்து விடிய விடிய இரவுச் சூரியனில் துள்ளிசை அள்ளி வர இரவு நேர வேலையாளர்கள், பயணிகள், ஓட்டுநர்கள், காவலாளிகள் என பலரின் உற்ற தோழனாக, இரவிலும் ஓயாத சூரியனாக கஸ்ட்ரோ, மணிவண்ணன் ஆகியோர் துள்ள வைக்கின்றார்கள்.

நிகழ்ச்சிகளுக்கான பாடல்களை சரியாக தேடிப் பிடித்து இரசனை அறிந்து அனைத்து நிகழ்ச்சிக்குமான பாடல் தெரிவுகளை மேனகா தெரிவுசெய்து  - கட்டுப்படுத்தி வழங்க, சனிக்கிழமைகளில் உற்சாகம் மிகுந்த துள்ளிசை பாடல்கள், ஞாயிற்றுக்கிழமைகளில் சந்தோசமாய் மனது விரும்பும் மெல்லிசை காதல் பாடல்கள் என, இரு நாட்களும் பிரிக்கப்படுகின்றன. தினம் தினம் வேறு ஒரு விதத்தில் சந்திக்கும் சூர்யா, மயூரன், ராகவன், வேணி, மனோப்பிரியா போன்றோரும் விடுமுறை தினங்களில் நிகழ்ச்சிகளுடன் கைகோர்த்து கொள்கின்றனர்.

விளையாட்டை விரும்பாதவர்கள் யாரும் இல்லை அதைத் தாண்டி விளையாட்டுத் தகவல்களை அறிந்து கொள்ள ஆசை கொள்ளாதவர்கள் எவரும் இல்லை. ஒவ்வொரு நாளும் வெற்றி நடை போடும் விளையாட்டுச் செய்திகளுடன் இணையும் தரணீதரன், சனிக்கிழமை வந்தாலே அட்டகாசத்துடன் விளையாட்டு விவரங்களைத்  தருகின்றார்.

நிகழ்ச்சிகள் இவ்வாறு  செல்ல, நாடு முழுவதும் தங்களின் திட்டமிடல் செயற்பாடுகளால் சூரிய சொந்தங்களை அடிக்கடி நேரடியாக சந்தித்துக் கொள்ளும் திட்டமிடல் விரிவாக்கல் பிரிவின் சிரேஷ்ட முகாமையாளராக, 'கள்ளமனத்தின் கோடி' நிகழ்ச்சியின் ஊடாக பல தென்னிந்திய பிரபலங்களை கேள்விகளால் துளைத்தெடுத்து, சூரியன் நிகழ்ச்சிகளிலும் தன் பெயரை முன் நிறுத்தி வைத்திருக்கும் சூரியன் வானொலியின் பல ஆண்டுகால அனுபவம் கொண்ட அஷ்ரப் அமீர் திகழ்கிறார்.

அவரின் வழிகாட்டலில், உதவி முகாமையாளராக அஜித் குமார், கார்த்திக், சுரேன், ரொஷான், ஸ்டிபன், புனிதன் போன்ற இளையோர் இணைந்து சூரியன் திட்டமிடல் விரிவாக்கல் பிரிவு இயக்கம் பெறுகின்றது.

சூரியனின் இன்னுமொரு முக்கிய அம்சமாக சூரியன் செய்திப் பிரிவைக் குறிப்பிடலாம். தமிழ் பேசுவோர் அதிகம் கேட்கும்  செய்தி அறிக்கையாக முதலிடம் பிடிக்கிறது சூரியன் செய்திகள்.

இந்திரஜித்தின் தலைமையில் சிரேஷ்ட செய்தி ஆசிரியர் வி.எஸ். சிகாமணி, பரமேஸ்வரன் விக்னேஸ்வரன், முருகேசன் சதீப்குமார், ஸ்ரீ நாகவானி ராஜா, ஜோகநாதன் சஞ்சீவன், தனஞ்சயன் என செய்தி ஆசிரியர் குழாம், தெளிவான செய்திகளை நாளொன்றுக்கு நான்கு தடவைகள் தருகின்றது. 

அத்துடன் சூரியனின் இணையவெளிச் செய்திகளை உடனுக்குடன் உலகறியத் தருவதில், சுறுசுறுப்போடு இயங்கி வருகிறார் கவிந்தன்.

தென்னிந்திய தயாரிப்புக்களுக்கு நிகராக மக்களால் அதிகம் விரும்பி இரசிக்கப்படுகின்ற சூரியன் நிலைய குறியிசைகளை நேயர்கள் அவர்களது கையடக்க தொலைபேசிகளில் குறியீட்டு இசையாக சேமித்து வைத்திருந்தும் சூரியன் மீது நேயர்களாக அவர்களது அளவு கடந்த அன்பை வெளிப்படுத்துகின்றனர். அதற்கெல்லாம் காரண கர்த்தா, இசையமைப்பாளர் ஹனி நயகரா.

இவ்வாறாக வானலை வல்லரசனாக வரலாறு படைக்கும் வானொலிக்  கலாசாரத்தை  ஆரம்பித்து தொடர்ந்து 18 ஆண்டுகள் வான் அலைகளின் முதல்வன் சூரியன்.

வானொலியின் அனைத்து வெற்றிகளுக்கும் அதன் அன்பு நேயர்கள் முழுக்காரணம்.கடந்து வந்த ஆண்டுகளில் கரம்கொடுத்து காற்றலையை கட்டியாழ  காரணமான சூரிய சொந்தங்களுக்கு மீண்டும் மீண்டும் எங்கள் நன்றிகள்.

தன் இரசிகர்களின் மனம் அறிந்து -தேவை அறிந்து செயற்பட்ட வானலைகளின் முதல்வன் சூரியன் வெற்றிகரமாக தன் சாதனைமிகு ஆண்டிலும் அனைவரும் விரும்பும், ஆசையுறும் அம்சங்களை தொடர்ந்தும் தருவான் என்று நம்பிக்கையோடு காத்திருப்போம்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .