Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 21, வியாழக்கிழமை
Kogilavani / 2011 டிசெம்பர் 14 , மு.ப. 10:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
'தென்னிந்தியாவிற்கு சென்று திரைத்துறை குறித்த விடயங்களை கற்றுவரும் நம்மவர்கள் எங்களை மட்டந்தட்டுவார்களே தவிர, தைரியமாக திரைப்படம் எடுக்கும் முயற்சியில் இறங்க மாட்டார்கள். அப்படியே தைரியமாக ஈடுபடுபவர்களுக்கும் அவர்கள் ஊக்க மாத்திரையாக இருக்க தயாரில்லை' என்கிறார் இயக்குநர் எஸ்.ஜனூஸ்.
கவிஞர், திரைப்பட இயக்குநர், சிறுகதை எழுத்தாளர், அறிவிப்பாளர், நாடக நெறியாளர் என பல்கோணங்களில் தமது இருப்பை நிலைநாட்டிக்கொண்டிருக்கும் எஸ்.ஜனூஸ், அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருதுவை பிறப்பிடமாகக் கொண்டவர்.
1996இல் இலக்கியத்திற்குள் தம்மை உள்வாங்கி கொண்ட இவர், தமக்கே உரிய தனித்துவக் கலையாக கவிதையை முதலில் தேர்ந்தெடுத்துள்ளார். எதிர்காலத்தில் இவர் பல முகங்களுடன் இயங்குவதற்கான ஆரம்பச் சூழலை கவிதையே இவருக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அதனால்தான் இவர் தாயை நேசிப்பதை போன்று கவிதையையும் நேசித்து வருகின்றார்.
'பெத்தம்மா' (2009) எனும் திரைப்படம், 'பதியம்' (2011) எனும் குறும்படம் இவரது திறமையை பறைசாற்றி நிற்கும் ஆவணங்களாகும். இவரை தமிழ்மிரரின் கலைஞர்களின் நேர்காணல் பகுதிக்காக நேர்கண்டபோது அவர் பகிர்ந்துகொண்டவை:
கேள்வி: பெத்தம்மா திரைப்படம் உருவான விதமும் அத்திரைப்படத்திற்கு எழுந்த விமர்சனங்கள் குறித்தும் கூறமுடியுமா?
பதில்: சுனாமிக்குப் பின், படைப்புகளின் பிரசவ உலகில் தொய்வு நிலையே காணப்பட்டது. சுனாமியின் கோரத்தை, உறவுகளை இழந்து வாடிய உயிர்களின் தவிப்புக்களை, வாழ்வியல் யதார்த்தங்களை, வறுமையை திரையில் காட்சிப்படுத்த வேண்டுமென்ற எண்ணத்தின் வாயிலாய் பிறந்தவள்தான் 'பெத்தம்மா'. பெத்தம்மா திரைப்படத்தின் இயக்கம், திரைக்கதை, வசனம் என மூன்றையும் நானே செய்தேன். இத்திரைப்படத்திற்கான ஒளிப்பதிவை சாஹிர் உசைன் வழங்க - சர்மில், நதீகா ஆகிய இருவரும் காட்சித்திரையில் நடிகர்களாய் தோன்றியிருந்தனர்.
சுனாமிக்கு பின் எழுந்த ஆற்றுகை என்பதால் அனைவரின் மனதிலும் இத்திரைப்படம் இடம்பிடித்துக்கொண்டது. ஆனாலும் எமது நாட்டில் தொழில்நுட்பம் என்பது அன்று முதல் இன்றுவரை ஓர் பாரிய சவாலாய்தான் இருந்து வருகிறது. அந்த சவாலை 'பெத்தம்மா'வில் கண்ணுற்ற பலர் அதனை பாரிய குறைபாடாக தூக்கி பிடித்தனர்.
எங்களால் இந்தத் திரைப்படத்தை கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் மட்டுமே திரையிட முடிந்தது. பல சவால்களுக்கு மத்தியிலும் நாங்கள் அதனை அம்பாறையில் திரையிட்டோம்.
கேள்வி: இத்திரைப்படத்தை வெளியிடுவதில் நீங்கள் எவ்வாறான சிக்கல்களை எதிர்கொண்டீர்கள்? ஏன் கிழக்கு மாகாணத்திற்கு வெளியே உங்கள் திரைப்படத்தை வெளியிட முடியவில்லை?
பதில்: நடைமுறை சிக்கல்கள் அதிகமாகவே காணப்பட்டன. இத்திரைப்படத்தின் பிரதான குறைபாடாக காணப்படும் தொழில்நுட்ப சிக்கல்களை நிவர்த்தி செய்துகொண்டு தலைநகரில் வெளியிட எண்ணியுள்ளோம். ஒரு படைப்பு பலரையும் சென்றடைவதற்கு அதற்கான சூழல் சாத்தியமாக காணப்படவேண்டும். அதேபோல், தலைநகருக்கு ஒரு படைப்பு வரும்போதுதான் அது எல்லோராலும் பேசப்படும் என்பார்கள். அந்த எண்ணத்தில் அதற்கான வேலைகளில் மும்முரமாய் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றோம். வெகுவிரைவில் 'பெத்தம்மா' தலைநகரிலும் வெளிவருவாள்.
கேள்வி: பெத்தம்மா திரைப்படத்தை தலைநகரில் வெளியிடும்போது அதற்கான வரவேற்பு அதிகரிக்கும் என நினைக்கின்றீர்களா?
பதில்: ஒரு படைப்பு பலரையும் சென்றடைய வேண்டுமென்றால் அதில் ஊடகங்களின் பங்கு கட்டாயமானது. சுனாமியின் ஓர் ஆவணமாக இத்திரைப்படம் காணப்படுவதால் நிச்சயமாக இதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என நம்புகிறேன். எமது ஊடகங்களும் அதற்கு நல்லதொரு ஒத்துழைப்பை வழங்கினால் நிச்சயம் இந்தப் படைப்பு வெற்றி பெறும்.
கேள்வி: இலங்கையில் வெளிவரும் திரைப்படங்களும் சரி, குறும்படங்களும் சரி, யுத்தத்தை அல்லது சுனாமியை மையமாகக் கொண்ட ஆவணமாகவே வெளிவருகின்றன. ஏன் எமது படைப்பாளிகளின் சிந்தனையோட்டம் ஒரு வட்டத்தை தாண்டி பயணிப்பதில்லை?
பதில்: ஒரு படைப்பினூடாக அந்த சூழலை அறியலாம். சூழலின் பிரதிபலிப்பே படைப்பாகின்றது. கலைஞன் என்பவன் அனுபவத்தின் வாயிலாக உருவாகின்றான். படைப்புகள் ஆவணமாக வெளிவரும்போது அது எமது அடுத்த சந்ததி - இன்றைய யுகத்தை அறிந்துக்கொள்ளும் ஒரு வரலாற்று ஆவணமாக காணப்படும்.
ஒரு படைப்பு பொழுதைபோக்கும் அம்சமாக மட்டும் உருவாக்காமல் அது ஒரு வரலாற்று ஆவணமாக இருக்க வேண்டுமென எதிர்பார்க்கின்றேன். 2004இல் வந்த சுனாமி எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது, அல்லது 2004 இலும் ஓர் சுனாமி வந்தது என்பதை 2030 இல் உள்ள சந்ததி அறிந்துகொள்ளவதற்கு இத்தகைய படைப்புகள் அவசியம் என்கிறேன்.
கேள்வி: யுத்தம், சுனாமி என்ற இரு விடயங்களையும் கடந்து ஒரு புதுவித சிந்தனையுடன் இலங்கையில் உருவாக்கப்படும் திரைப்படங்கள் சிறந்த இடங்களை தட்டிச் செல்லும் என்பதற்கு எமது புலம்பெயர் படைப்புகள் ஓர் உதாரணம். இது குறித்து உங்களது கருத்து என்ன?
பதில்: வர்த்தக ரீதியிலான நடைமுறையில் நடக்கின்ற விடயங்களை பார்த்து பழகியவர்கள் இவ்வாறான விடயங்களையும் கசப்பென்றே கூறுவார்கள். நாம் எவ்வளவுதான் வேறு கோணத்தில் இருந்து, புதிய சிந்தனையுடன், வித்தியாசமான, வாழ்வியல் யதார்த்தத்தை வெளிப்படுத்தும் ஒரு திரைப்படத்தை எமது மக்களுக்கு கொடுத்தாலும் அதனை வரவேற்கும் கூட்டம் குறைவாக இருக்கிறது. இனியும் குறைவாகவே இருக்கும்.
இதற்கு மிக முக்கிய காரணம் இலத்திரனியல் ஊடகங்கள். நாங்கள் எவ்வளவுதான் சிறந்த திரைப்படங்களை வெளியிட்டாலும் ஊடகங்கள் ஒரு நேர்காணலுடன் நின்றுவிடுகின்றார்கள். அதன்பின் அந்த கலைஞர்களைப் பற்றிய தேடலோ, அல்லது அவர்களது ஆற்றல்களின் கனதி குறித்தோ எதனையும் ஊடகங்களில் பார்க்கவோ, கேட்கவோ, வாசிக்கவோ முடியாது. இதுதான் அன்று முதல் இன்று வரை நடந்தேறி வருகிறது.
இலங்கையில் எத்தனையோ திரைப்படங்கள் வெளிவந்தன. இலத்திரனியல் ஊடகங்கள் எத்தனையோ நிகழ்வுகளை வானலையில் ஒளிபரப்பிக்கொண்டு இருக்கின்றன. இலங்கையில் வெளிவந்த எந்த திரைப்படத்தின் பாடலையாவது நிகழ்ச்சிகளின் இடையில் ஒளிபரப்புவார்களா? ஆனால், இந்தியாவில் ஒரு திரைப்படம் வெளிவருகின்றதோ இல்லையோ அந்தத் திரைப்படத்தின் பாடல்களை எப்படியாவது பெற்றுக்கொண்டு அதனை மறுபரிசீலனை செய்யாது அப்படியே காற்றலையில் மிதக்கவிடுவார்கள். இப்படி இருக்கும்போது எமது திறமைமிக்க படைப்புகளும்கூட வரலாற்றில் ஓர் ஆவணமாக கிடக்குமே தவிர அதில் வெற்றியை எதிர்பார்க்க முடியாது.
முதலில் ரசிகர்களின் மனநிலை மாறவேண்டும், மாற்றப்பட வேண்டும். அதன்பின்பே இலங்கையில் வெளிவரும் படைப்புகள் பலரின் மனதில் தமக்கான இடத்தினை தக்கவைத்துக்கொள்ளும்.
அண்மையில் 'வன்னி மவுஸ்' எனும் திரைப்படத்தை வன்னியை சேர்ந்த புலம் பெயர் இளைஞர் ஒருவர் இயக்கி வெளியிட்டிருந்தார். அந்தத் திரைப்படம் உலகளாவிய ரீதியில் தற்போதும் பேசப்பட்டு வருகிறது.
எமது நாட்டு படைப்பாளிகளுக்கு நல்ல சிந்தனை உள்ளது. ஆனால் அதனை அவர்கள் தருகின்ற முறையில் பிழைவிடுகின்றார்கள். எமது நாட்டைச் சேர்ந்தவர்தான் இயக்குநர் பாலுமகேந்திரா. அவர் இந்தியாவிற்கு சென்று திரைத்துறையில் சிகரத்தை தொடவில்லையா? அவரின் வழிவந்தவர்களே நாங்கள். எம்மாலும் முடியும். ஆனால் அவருக்கு கிடைத்த நல்ல களம் எமக்கும் கிடைக்க வேண்டும். அப்போதே சாதிக்கமுடியும்.
கேள்வி: இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு சென்று வரும் கலைஞர்களின் வழிகாட்டல்களை இலங்கையிலிருக்கும் கலைஞர்கள் பெற்று புரிந்துணர்வுடன் செயற்பட்டால் இலங்கையிலும் ஓர் நல்ல திரைப்படத்துறையை உருவாக்க முடியும் என்பது குறித்து உங்களது கருத்து என்ன?
பதில்: நிச்சயமாக உருவாக்கலாம். நானும்கூட வளர்ந்து வரும் கலைஞன் என்ற ரீதியில் இத்தகையோரின் வழிப்படுத்தல்களை எதிர்பார்த்து இருக்கிறேன். ஆனால் இந்தியாவிற்கு சென்று வருபவர்கள் எங்களுடன் இணைந்து செயற்ட முன்வருவார்களா? இங்கு ஓர் இரு உதாரணங்களை கூறியே ஆக வேண்டும். இலத்திரனியல் ஊடகமொன்று தென்னிந்தியாவிற்கு சென்று உதவி இயக்குநராக செயற்பட்ட ஒருவரை நேர்காணல் செய்து கொண்டிருந்தது. அதன்போது அவர் 'எங்கள் நாட்டு படைப்பாளிகள் ஒரு புகைப்படக்கருவியும் இரு நண்பர்களும் இருந்தால் திரைப்படம் இயக்க ஆரம்பித்துவிடுவார்கள்' என்றார் இவ்வார்த்தை உண்மையில் எனது மனதை பாதித்தது.
எமது நாட்டவரே இவ்வாறு படைப்பாளிகளை மட்டம் தட்டினால் இவர்களா எதிர்காலத்தில் இலங்கையில் சிறந்ததொரு திரைப்படத்துறையை கொண்டுவர போகின்றார்கள்?
அதேபோல 12 வருடங்களுக்கு மேலாக இந்தியாவில் திரைப்படத்துறையில் இருந்து பல்வேறு அனுபவங்களை பெற்ற ஒரு கலைஞரிடம் எனது 'பெத்தம்மா' திரைப்படத்தை காட்டினேன். மூத்த கலைஞர் என்ற ரீதியில் அவர் கூறிய விடயங்களை உள்வாங்கிக்கொண்டு திருத்தம் மேற்கொள்ள எண்ணியிருந்தேன். ஆனால் அவர் திரைப்படத்தை முழுமையாக பார்த்துவிட்டு மிகமோசமாக விமர்சித்தார். அவர் ஒருவேளை மசாலா திரைப்படங்களை போல் எனது திரைப்படங்களையும் எதிர்பார்த்திருப்பார் போல. நான் அவரிடத்தில் பரீட்சை எழுதிவிட்டு காத்திருக்கும் மாணவனைப்போல அவரது நல்ல விமர்சனத்துக்காக காத்திருந்தேன். ஆனால் அவர் எனது முயற்சியை கூட பாராட்டவில்லை. இது அவருடைய காள்ப்புணர்ச்சியையே காட்டுகின்றது.
தென்னிந்தியாவிற்கு சென்று திரைத்துறை குறித்த விடயங்களை கற்றுவரும் நம்மவர்கள் எங்களை மட்டந்தட்டுவார்களே தவிர, தைரியமாக திரைப்படம் எடுக்கும் முயற்சியில் இறங்க மாட்டார்கள். அப்படியே தைரியமாக ஈடுபடுபவர்களுக்கும் அவர்கள் ஊக்க மாத்திரையாக இருக்க தயாரில்லை. அயலூர் அழகனை விட உள்ளூர் முடவன் மேல் என்பது போல் பின்தங்கியிருக்கும் எமது சினிமாவை ரசித்து உரமூட்ட வேண்டுமே தவிர அதனை அடியோடு வெறுக்கக்கூடாது.
தென்னிந்தியாவிற்கு சென்று பயிற்சிகளை பெற்று பல்வேறு அனுபவங்களுடன் திரும்பும் எமது கலைஞர்கள் இங்கு வளர்ந்து வரும் கலைஞர்களையும் ஊக்குவிக்க முன்வர வேண்டும். எத்தனையோ இளம் கலைஞர்கள் இவர்களது வழிகாட்டல்களை எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர். இவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கினால் இலங்கையிலும் நல்ல சினிமாவை வெளிக்கொண்டு வரமுடியும்.
கேள்வி: உங்களது கவிதை முயற்சிகள் எந்த நிலையில் உள்ளன?
பதில்:- என்னை இந்த துறைக்கு அழைத்து வந்ததே கவிதைதான். 1996 இலிருந்து இதுவரை எண்ணற்ற கவிதைகளை படைத்துவிட்டேன். அவற்றை ஒன்று திரட்டி திறமையானதை தேர்வு செய்து, தொகுத்து கவிதை தொகுதியாய் வெளியிட எண்ணியுள்ளேன். வெகுவிரைவில் எனது கவிதைகள் அடங்கிய புத்தகம் வெளிவரவுள்ளது. எனது தாயை நேசிப்பதை போலவே நான் கவிதையையும் நேசிக்கின்றேன். எனக்கு பல்துறை சார் அடையாளங்களை ஏற்படுத்தி தருவதற்கு அடித்தளமாய் அமைந்தது கவிதைதான்.
கேள்வி: சமூக வலைத்தளங்களின் அறிமுகங்களை எழுத்தாளர்கள் எவ்வாறு தமக்கு சாதகமாய் அமைத்துக்கொண்டார்களோ அதேபோல் வளர்ந்து வரும் இளம் சந்ததியும் அமைத்துக்கொள்ளுமா?
பதில்: படைப்பாளர்களுக்கு ஒரு சாதகமான சூழலை இந்த சமூக வலைத்தளங்கள் ஏற்படுத்தி கொடுத்திருக்கின்றன. அதைவிட எழுத்தாளர்கள் மட்டுமே எழுத வேண்டும் என்ற நிலை மாறி எல்லோரும் எழுதலாம் என்ற நிலை வந்துவிட்டது. இது ஒரு நல்ல சகுனம் என்றே கூறுவேன். வலைப்பதிவு, இணையத்தளங்கள், முகப்புத்தகம் போன்றவை எழுத்தாளர்களுக்கு நல்ல களங்களை வழங்கி வருகின்றன. இந்த சூழலில் நானும் ஒரு படைப்பாளனாய் இருப்பதில் மகிழ்வடைகின்றேன்.
எல்லாவற்றிற்கும் இரு பக்கங்கள் இருக்கின்றன. நல்ல பக்கத்தை தேடும், வாசிக்க நினைக்கும் ஒரு மாணவன் நல்ல விடயங்களுக்குதான் முன்னுரிமை கொடுப்பான். இவை எமக்கு கிடைத்த அரிய வாய்ப்புகள். இவற்றை தகுந்த முறையில் பிரயோசனப்படுத்திக்கொள்ளும்போது அது எம்மை பலர் மத்தியில் கொண்டு செல்லும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
கேள்வி: உங்களது அடுத்தகட்ட முயற்சிகள் குறித்துக் கூற முடியுமா?
பதில்:- நாங்கள் பலர் ஒன்றிணைந்து ஒரே நேரத்தில் 10 குறும்படங்களை தயாரித்து வெளியிடும் முயற்சியில் இறங்கியுள்ளோம். வெகுவிரைவில் அந்த முயற்சி நிறைவுபெறுமென நான் நினைக்கிறேன். சமூகத்தில் உள்ள பல்வேறுப்பட்ட விடயங்களை பேசுகின்ற குறும்படங்களாக நாங்கள் அவற்றை தயாரிக்கவுள்ளோம். இந்த முயற்சிக்கு நான் மட்டுமல்லாமல் என்னோடு கைகோர்க்க விரும்பும் நண்பர்களையும் இந்த நேர்காணலினூடாக அழைப்பு விடுக்கின்றேன்.
நேர்காணல்:- க.கோகிலவாணி
படங்கள்:- இந்ரரத்ன பாலசூரிய
kalaimahel hidaya risvi Thursday, 15 December 2011 02:44 AM
நம்மவர்கள் எங்களை மட்டந்தட்டுவார்களே தவிர, தைரியமாக திரைப்படம் எடுக்கும் முயற்சியில் இறங்க மாட்டார்கள். அப்படியே தைரியமாக ஈடுபடுபவர்களுக்கும் அவர்கள் ஊக்க மாத்திரையாக இருக்க தயாரில்லை. தனது மனக் கவலைகளை வெளிப்படுத்தி உள்ளார் ஜனூஸ். அவரது சிறந்த கருத்துக்கு வாழ்த்துக்கள்.
Reply : 0 0
sirajdeen siro maligaikadu Thursday, 15 December 2011 03:43 AM
nalla நல்ல கருத்துகள் ஜனூஸ் ........................
உங்களது கலை பயணம் தொடர எனது அன்பான வாழ்த்துக்கள்.
Reply : 0 0
zahir Thursday, 15 December 2011 06:27 AM
இன்றைய சூழ் நிலை கேற்ற காத்திரமான ஆதங்கம் கொண்டதான
கருத்துக்கள் ஜனூஸ் .... உங்கள் கலையோடு சம்பந்தமான உங்கள் வெற்றிப் பயணம் தொடர என் உள்ளம் கனிந்த வாழ்த்துக்களும் என் பிரார்த்தனைகளும்......ஆமீன்.......BEST OF LUCK
.
Reply : 0 0
najmul hussain Thursday, 15 December 2011 03:27 PM
உங்களது பயணத்தில் நிச்சயம் ஒரு நாள் நீங்கள் பெரிய வெற்றி காண்பீர்கள். மனப்பூர்வமான வாழ்த்துகள், ஜனூஸ் - என். நஜ்முல் ஹுசைன்
Reply : 0 0
nila Thursday, 15 December 2011 11:38 PM
அச்சப்படாமல் காத்திரமான கருத்துக்களை முன்வைத்தமைக்கு வாழ்த்துக்கள். கலை, இலக்கியம் இரண்டிலும் பொறாமைக்காரன் என்ற வில்லன் இல்லாவிட்டால் ஓர் ஆர்வம் இருக்காது ஜெனூஸ். உங்கள் படைப்புக்கள் வித்தியாசமானவை. வாழ்க வளமுடன். தொடரட்டும் இலக்கியப்பணி.
Reply : 0 0
Dr.S.Tharshanan, Koddaikallar Friday, 16 December 2011 02:09 AM
பாதைகள் எதுவாக இருந்தாலும் இலக்கு மாறாதிருக்கட்டும், தடைகள் நின்று நிதானிப்பதற்கு அன்றி வீழ்ந்துவிடுவதற்கு இல்லை. அசத்துங்கள் ஜானுஸ். தோழமை கலந்த வாழ்த்துக்க்கள்.
Reply : 0 0
Hussain Friday, 23 December 2011 03:17 PM
நண்பா உன் வரிகள் மிகவும் நன்றாக இருந்து.. வாழ்க வளமுடன் அன்புடன் ஹுசைன்.....
Reply : 0 0
razanamanaf Saturday, 24 December 2011 04:26 PM
வாழ்த்துவோர் வாழ்த்தட்டும் .. தூற்றுவோர் தூற்றட்டும் ... கவலையை விடுங்கள். தொடரட்டும் உங்கள் கலைப் பயணம் ... வாழ்த்துக்கள் ..
Reply : 0 0
A.L.M.Izam Sunday, 25 December 2011 04:10 AM
ஆழமான, ஆணித்தரமான கருத்துக்கள். வாழ்த்துக்கள் ஜனூஸ். ஏ.எல்.எம்.இஷாம் - சாய்ந்தமருது.
Reply : 0 0
jaleel Thursday, 29 December 2011 11:46 PM
உங்கள் கருத்துக்கு நன்றி ஜானுஸ்
Reply : 0 0
***மல்லிகை சிராஜ்*** Sunday, 29 January 2012 08:49 PM
பாதைகள் எதுவாக இருந்தாலும் இலக்கு மாறாதிருக்கட்டும், தடைகள் நின்று நிதானிப்பதற்கு அன்றி வீழ்ந்துவிடுவதற்கு இல்லை. அசத்துங்கள் ஜானுஸ். தோழமை கலந்த வாழ்த்துக்க்கள்.
Reply : 0 0
A.Peer Mohamed Saturday, 07 April 2012 05:09 PM
உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன்
Reply : 0 0
Jawahir Tuesday, 10 April 2012 03:20 PM
வாழ்த்துக்கள்
Reply : 0 0
இராமசாமி ரமேஷ் Wednesday, 18 April 2012 08:56 PM
உங்கள் ஆதங்கம் சரிதான். இருப்பினும், குறைகளை ஒரு படைப்பாளி ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில், அவனது சிந்தனைக்கும் கருத்தைப் பகிர்கின்றவரின் சிந்தனைக்கும் இடைவெளிகள் அதிகம். படிப்பவரின் பார்வைக்கு அது ஒரு கோணத்திலும் படைப்பவனின் பார்வையில் அது பிறிதொரு கோணத்திலும் இருப்பதுதான் யதார்த்தம். எனவே, உங்கள் ஆதங்கம் உண்மை. இருப்பினும், விமர்சங்களை நமக்கான படிகளாக எடுத்துக் கொள்வோமே!!
Reply : 0 0
rispic Monday, 14 May 2012 09:40 AM
all us well
Reply : 0 0
jerad niroshan Wednesday, 05 September 2012 07:05 AM
வாழ்த்துவோர் வாழ்த்தட்டும் .. தூற்றுவோர் தூற்றட்டும் ... கவலையை விடுங்கள். தொடரட்டும் உங்கள் கலைப் பயணம் ... வாழ்த்துக்கள் ........ உங்களது பயணத்தில் நிச்சயம் ஒரு நாள் நீங்கள் பெரிய வெற்றி காண்பீர்கள்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago