Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை
Kogilavani / 2011 செப்டெம்பர் 07 , மு.ப. 09:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
'மனித இனத்தையும் கவிதைகளையும் பிரித்துப் பார்க்கமுடியாது. ஏரோட்டினாலும் தேரோட்டினாலும் பாடிக்கொண்டே வாழ்ந்தவர் நாம். பிறந்தால் தாலாட்டு, இறந்தால் ஒப்பாரி என படித்தவர், பாமரர் என்ற வேறுபாடின்றி நம் வாழ்வோடு பின்னிப் பிணைந்திருக்கிறது கவிதை'' என்கிறார் வளர்ந்துவரும் இளம் கவிஞர் மன்னார் அமுதன்.
தான் பிறந்த மன்னார் மண் மீதான பற்றுதலை வெளிப்படுத்தும் வகையில் தன்பெயருடன் மன்னாரையும் இணைத்துக் கொண்டுள்ளார் இவர்.
கவிதை, சிறுகதை, கட்டுரை என இவரது இயங்குகளம் விரிந்து பயணிக்கிறது. 'விட்டு விடுதலை காண்', 'அக்குறோனி' ஆகியன இவரின் கவித்துவத்தை வெளிப்படுத்தி நிற்கும் இரு கவிதைத் தொகுதிகளாகும்.
மரபைவிட்டு நவீனம் நோக்கி பல எழுத்தாளர்கள் பயணித்துக் கொண்டிருக்கும் இக்காலத்தில், ஓர் இளம் கவிஞராக மரபுக் கவிதையை தமக்கேயுரிய பாணியாக தேர்ந்தெடுத்திருக்கின்றார். ஒரு கவிஞனின் கவிதையில் அவன் வாழ்ந்த சமூகத்தை அறியலாம் என்பார்கள். இவரது அநேகமான கவிதைகள் சமூகத்தின் மீது இவர் கொண்ட பற்றுதலை எடுத்துக் காட்டுகின்றது.
தமிழ்மிரர் இணையத்தளத்தின் கலைஞர்களுக்கான நேர்காணல் பகுதிக்காக மன்னார் அமுதன் அளித்த செவ்வியின்போது அவர் பகிர்ந்துகொண்டவை...
கேள்வி: நீங்கள் உங்களது வெளிப்பாட்டுக் களமாக கவிதையை தேர்ந்தெடுத்தமைக்கு காரணம் என்ன?
பதில்:- சிறுகதைகளையும் கட்டுரைகளையும் விட கவிதைகளை நான் அதிகமாக எழுதிவருகின்றேன் என்றுதான் கூறவேண்டும். மனித இனத்தையும் கவிதைகளையும் பிரித்துப் பார்க்கமுடியாது. ஏரோட்டினாலும் தேரோட்டினாலும் பாடிக்கொண்டே வாழ்ந்தவர்கள் நாம். பிறந்தால் தாலாட்டு, இறந்தால் ஒப்பாரி என படித்தவர், பாமரர் என்ற வேறுபாடின்றி நம் வாழ்வோடு பின்னிப் பிணைந்திருக்கிறது கவிதை. தொழிற்புரட்சிக்கு முந்தைய காலம் வரை நம் முன்னோர்கள் கவிதைகளில் தான் வாழ்க்கையை லயித்துக் கழித்திருக்கிறார்கள். வெறும் சொல் வித்தைகளாக மட்டுமேயல்லாமல் மொழியாட்சியுடன் அமையும் கவிதைகளின் அதிர்வு காலங்கள் கடந்தபின்பும் மக்கள் மனதைவிட்டு அகல்வதேயில்லை.
கேள்வி:- ஆரம்பத்தில் கவிதையால் அடையாளப்படுத்தப்படுபவர்கள் அடுத்த கட்டமாக சிறுகதை, நாவல் என தமது பன்முக திறமையை வெளிப்படுத்த முனையும்போது கவிதையை மறந்துவிடுகின்றார்களே. இதைப்பற்றி உங்களது கருத்து என்ன?
பதில்:- கவிதை எழுத முயற்சிக்காத படைப்பாளியென்று எவரும் இருக்கமுடியாது என்றே நினைக்கின்றேன். படைப்பிலக்கியத்தின் எந்தவடிவத்தை தம்மால் சிறப்பாகக் கையாளமுடியும் என உணர்ந்துகொள்வதற்கு சிறிது காலம் தேவைப்படும். அந்தக் காலத்தைச் சிலர் கவிதையில் கழிக்கின்றனர். இவ்வாறு கவிதையில் ஆரம்பிப்பவர்களே காலப்போக்கில் சிறுகதை எழுத்தாளர்களாக, நாவலாசிரியர்களாக, கட்டுரையாளர்களாக உருவாகின்றார்கள். சிந்தனை விரிவடையும் போதும், எழுத்தை லாவகமாகக் கையாளும் பக்குவம் அதிகரிக்கும் போதும் இருக்கும் தளத்திலிருந்து சற்று முன்னோக்கி நகர்வது இயல்பானதே. ஆனால் இதில் எல்லோருக்கும் வெற்றி கிடைப்பதில்லை. கருவை கவிதைக்குள் அடக்கமுயன்று முடியாமல் அல்லது அக்கவிதையில் திருப்தி அடையாமல் சிறுகதையிலோ, பத்தி எழுத்திலோ வெளிப்படுத்துபவர்களும் உள்ளனர்.
கேள்வி: மரபை நோக்கி உங்கள் கவிதைகள் பயணிக்கின்றனவே...
பதில்:- இலக்கியம் என்பது ஒரு பரந்தவெளி. இதில் பயணிக்க இலக்கணம் இன்றியமையாத ஒன்றாகவே நான் கருதுகின்றேன். இங்கு கற்றுக் கொள்வதற்கும் வெளிப்படுத்துவதற்கும் எவ்வளவோ விடயங்கள் உள்ளன. தமிழ் இலக்கணம் மட்டுமின்றி பிறமொழி இலக்கியங்களையும் கற்றுக்கொள்வதால் இலக்கியம் பற்றிய நமது பார்வையும் நம் எழுத்தின் வீச்சும் அதிகரிக்கும். மரபில் பல கருத்துக்களை ஆணித்தரமாக கூறலாம். ஒத்திசைவும் ஓசையும் வாசகர்களின் மனதில் இலகுவாக பதிந்துவிடும். நீண்ட வரிகளில் உள்ள ஒத்திசைவற்ற புதுக்கவிதை வரிகள் வாசித்தவுடன் முற்றுமுழுதாக மனதில் பதிந்துவிடுவதில்லை. புதுக்கவிதைகளைக் கூட ஓசை நயத்துடன் எழுதுவதே எனது நடை. இலக்கியப் பெருங்களத்தில் நம் மனவிருப்பத்துடனேயே பயணிக்கிறோம். நம்மால் மரபில் எழுதமுடியுமா முடியாதா என்பது வேறுவிடயம். ஆனால் நம் செயல்படும் துறைசார்ந்த விடயங்களைத் வாசித்தாவது அறிந்து வைத்திருக்க வேண்டும்.
கேள்வி:- ஹைகூ, நவீன கவிதைகள் என வாசகர்கள் புதிய கோணங்களை நோக்கி பயணிக்கும் இக்காலகட்டத்தில் மரபுக் கவிதைகள் வாசகர்களை சென்றடையும் என நினைக்கின்றீர்களா?
பதில்: கவிதையைப் பொறுத்தவரை, கவிஞனுக்குத் தோன்றும் முதல் வரிதான் அந்தக் கவிதை மரபா அல்லது நவீன வடிவமா என்பதைத் தீர்மானிக்கிறது. பொழிப்புரை தேவைப்படாத மரபுக் கவிதைகள் தான் இன்று பெரும்பாலும் படைக்கப்படுகின்றன. தமிழ் ஆற்றலை வெளிக்காட்டுவதற்காகப் படைக்கப்பட்ட தமிழ்க் கவிதைகளின் காலம் கடந்துவிட்டது. இன்று இலகு தமிழில் படைக்கப்படும் கவிதைகளுக்கு அகராதியைப் புரட்டி அர்த்தம் தேடவேண்டிய அவசியம் இருப்பதில்லை. எல்லோரும் புதுக்கவிதை எழுதும் இன்றைய சூழலில் ஒருசில கவிஞர்கள் மட்டுமே மரபிலும், புதுக்கவிதையிலும் திறமையாக எழுதிக் கொண்டிருக்கின்றனர்.
கேள்வி: உங்களது கவிதை தொகுதிகளில் ஓவியங்கள் ஏன் உள்வாங்கப்படுவதில்லை..?
பதில்:- எனது முதலாவது தொகுதியான 'விட்டு விடுதலை காண்' இல் இணையத்திலிருந்து ஓவியங்களை எடுத்துப் பயன்படுத்தியிருந்தேன். எல்லாக் கவிதைகளுக்கும் ஓவியங்கள் அவசியமற்றவை. சில கவிதைகளுக்கு தலைப்பை வாசித்தால் தான் கவிதை முழுமைபெறும். சில கவிதைகளுக்கு அருகிலுள்ள ஓவியத்தைப் பார்த்தால் தான் கவிதையின் பொருளை அறிந்துகொள்ள முடியும். 'அக்குரோணி' தொகுதியில் உள்ள கவிதைகளுக்கு ஓவியங்களை இணைக்க வேண்டிய சந்தர்ப்பம் ஏற்படவில்லை என்றுதான் கூறவேண்டும்.
இது தவிர்ந்து, இன்று ஓர் ஓவியம் குறைந்தது 1000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இன்று நம் மக்கள், ஒரு நல்ல கவிதை நூலை குறைந்தது 200 ரூபாய் கொடுத்தாவது வாங்கும் நிலையில் இல்லை. புத்தக விற்பனை வெளியீட்டு விழாவோடு நிறைவடைந்து விடுகிறது. இந்நிலையில் பொருளாதார மதிப்பீடற்ற ஆக்க இலக்கிய கர்த்தாக்கள் காப்புரிமையுடைய ஓவியங்களை உள்வாங்கி நூல் வெளியிடுவது என்பது மிகவும் கடினமானது.
கேள்வி: உங்களது சிறுகதை முயற்சிகள் எந்த நிலையில் உள்ளன?
பதில்: இதுவரை 6 சிறுகதைகளையே எழுதியுள்ளேன். அவற்றில் ஒருசில மட்டுமே வெளிவந்துள்ளன. இன்னும் இரண்டு வருடங்களில் எனது சிறுகதைத் தொகுதி வெளிவரும் என நம்புகின்றேன். இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நூல்களை வெளியிடுதலே இப்போதைக்கு சாத்தியமாகவுள்ளது. பொருளாதார ரீதியாக என்னைப் பலப்படுத்திக் கொண்ட பின்பே அடுத்தடுத்த தொகுதிகளை வெளிக்கொணர முடியும்.
கேள்வி:- வளர்ந்துவரும் எழுத்தாளர் என்ற ரீதியில் நீங்கள் எதிர்நோக்கும் சவாலென எதனைக் கருதுகின்றீர்கள்?
பதில்:- மனம் வெதும்பிச் சொல்லும் அளவிற்கு எதுவுமில்லை. கண்ணிற்குத் தெரிந்தும் தெரியாமலும் எண்ணற்ற சவால்களை நாள்தோறும் நாம் எதிர்கொண்டுகொண்டே தான் இருக்கின்றோம். அந்தச் சாவால்கள் தான் சோர்வடையாமல் எழுதத் தூண்டுகின்றன. எழுச்சியிலும் வீழ்ச்சியிலும் என் எழுத்துக்கள் மட்டுமே என்னைத் தாங்கிக் கொள்ளும் என்பதைத் தெளிவாக விளங்கிக் கொண்டுள்ளேன்.
கேள்வி: ஓர் எழுத்தாளனுக்கு இருக்கக் கூடாத பண்பாக எதனை கூறுவீர்கள்?
பதில்:- மகாகவி சுப்பிரமணிய பாரதியின் வரிகள் அழகாகக் கூறுகின்றன..
தேடிச் சோறுநிதந்தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி- மனம்
வாடித் துன்பமிக உழன்று- பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து- நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி–கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும்- பல
வேடிக்கை மனிதரைப் போலே.... நல்ல எழுத்தாளன் இருக்கக்கூடாது.
கேள்வி: அண்மையில் உங்களுக்கு அகஸ்தியர் விருது கிடைத்தது. இதைப்பற்றி கூறுங்கள்?
பதில்:- எழுத்தாளர்களுக்கு அளிக்கப்படும் அங்கீகாரமாக நாம் விருதுகளை நோக்கினால், அந்த அங்கீகாரம் ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் கிடைக்க வேண்டும். விருது பெறுவதற்கு இன்னும் வயதுள்ளது என்று கூறி இளம் எழுத்தாளர்களை ஒதுக்கக் கூடாது. படைப்புகள் காத்திரமாக இருக்கும் பட்சத்திலோ, பாராட்டத் தக்க சேவையை முன்னிறுத்தியோ வழங்கப்படும் விருதுகள் இளைஞர்களை ஊக்குவிக்கும். கலைமகள் ஹிதாயா றிஸ்வியின் தடாகம் இலக்கிய வட்டம் போன்ற அமைப்புகள் இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கின்றன. அகஸ்தியர் விருதும், கலைத்தீபம், கலைமுத்து போன்ற பட்டங்களையும் வழங்கி கௌரவித்தனர். விருதுகளை முன்னிறுத்தி கவிஞர்கள் கவிதைகளைப் படைப்பதில்லை. கிடைப்பதற்கு இருக்கும் விருதுகளை சிலர் தடுத்து, தாம் சுவீகரித்துக் கொள்ளமுனையும் போதுதான், விருதுகள் பற்றிய பிரச்சினைகள் ஆரம்பமாகின்றன.
கேள்வி: இலக்கிய உலகிற்கு நீங்கள் ஆற்றப்போகும் சேவை குறித்துக் கூறுங்கள்.
பதில்: இலக்கியம் என்பது படைத்தல் மட்டுமன்று படிப்பதும் தான். பரந்த வாசிப்பிற்கு எம்மை உட்படுத்தும் போது எழுத்தின் ஆழமும் இலக்கியம் பற்றிய எமது பார்வையும் விசாலமடையும். மன்னார் மாவட்டத்தில் இருந்து இலக்கிய சஞ்சிகை ஒன்று விரைவில் வெளிவரும்.
நேர்காணல்:- க.கோகிலவாணி
படங்கள்: குஷான் பதிராஜ
Tharani Friday, 09 September 2011 07:26 PM
காசிருந்தால் இரண்டல்ல நூறு புத்தகங்கள் போடலாம்.
Reply : 0 0
மன்னூரான் Friday, 09 September 2011 09:01 PM
இளம் எழுத்தாளர்களுக்கு மட்டுமன்றி சில மூத்த எழுத்தாளர்களுக்கும் அறிவுரை கூறும் வண்ணம் அமுதனின் செவ்வி அமைந்திருக்கிறது. மன்னாரிலிருந்து விரைவில் ஒரு இலக்கிய சஞ்சிகை வெளிவருமென்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி. அமுதனுக்கு வாழ்த்துக்கள்! தமிழ் மிரருக்கு நன்றி!
Reply : 0 0
KLM Thursday, 15 September 2011 04:38 AM
காசு இருந்தால் எல்லோரும் புத்தகம் போடலாம். ஆனால் விசயமுள்ள புத்தகம்தான் எடுபடும்.
Reply : 0 0
Tharani Friday, 16 September 2011 02:13 AM
அமுதனின் புத்தகத்தில் என்ன விஷயம் இருக்கிறது. அது எடுபடவில்லையா?
Reply : 0 0
Tharani Wednesday, 21 September 2011 07:03 PM
உண்மையான ஆளுமை கொண்ட இலக்கியவாதிகள் எங்கோ ஓரமாய் இருந்து எழுதிக் கொண்டிருப்பார்கள். போலிகள் எப்பொதும் கொத்து ரொட்டி போடுபவர் போல சத்தமெழுப்பிக் கொண்டிருப்பார்கள்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
6 hours ago