Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 05, வியாழக்கிழமை
A.P.Mathan / 2010 ஒக்டோபர் 12 , மு.ப. 06:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டியத்தில் தனக்கென ஒரு தனி முத்திரை பதித்து நூற்றிற்கும் மேற்பட்ட மாணவர்களின் அரங்கேற்றத்தினை கண்ட தலைநகரின் சிறந்த நடன ஆசிரியை வாசுகி ஜெகதீஸ்வரன்.
மூன்று வயதில் தனது அன்னையை முதற் குருவாகக் கொண்டு பரதத்தை பயிலத்தொடங்கினார் கலாசூரி வாசுகி ஜெகதீஸ்வரன். மூன்று வயதின் ஆரம்பம் இதுவரை தடைகளின்றி தொடர்கிறது.
தனது அன்னையின் நாட்டிய கலா மந்திரில் பல மாணவர்களின் மத்தியில் இவரும் ஒரு மாணவியாக இருந்து பரதத்தின் மூலாதாரத்தை பயின்றுகொண்டார். கணக்கியலை தனது துறையாக தேர்ந்தெடுத்த இவர், அதனது பட்டப்படிப்பை முடிக்க வேண்டும் என்ற நோக்கில் இந்தியாவிற்கான பயணத்தை மேற்கொள்ள இருந்த தருணம் திடீரென ஏற்பட்ட ஒரு மனமாற்றமே இன்று அவர் எம்முன்னிலையில் நடன தாரகையாக மிளிர்வதற்கு வழிசமைத்துக்கொடுத்தது.
03 வருட பரதப் படிப்பை இந்தியாவில் பயின்று, தாயகம் திரும்பிய இவரிடம் பெரிய பொறுப்பாக தனது அன்னை 1953ஆம் ஆண்டிலிருந்து நடத்தி வந்த நாட்டிய கலாலயம் 1976ஆம் ஆண்டு கையளிக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை இவரின் கீழ் இயங்கிக்கொண்டிருக்கின்றது அந் நாட்டிய கலாலயம். இதுவரை 103 மாணவர்களின் அரங்கேற்றத்தை கண்டு மகிழ்ந்த இவர் இன்னும் பல்லாயிரம் மாணவர்களை பரதக் கலைஞர்களாக உருவாக்கிவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் உழைத்துக் கொண்டிருக்கிறார். கலாசூரி (1990), பரத பூஷன திலகம், நர்த்தன நாயகி, கலை செம்மல் (1994), கலாநிதி, புங்கா, ரத்ன தீபம், இலங்கையின் முன்னோடி, நடனத்தின் முன்னோடி போன்ற பட்டங்களையும் விருதுகளையும் அவர் பெற்றுக்கொண்டுள்ளார்.
இவற்றையெல்லாம் விட இவரது நாட்டியக் குழுக்கள் பல்வேறு நிகழ்வுகளுக்காக இந்தியா உட்பட பல வெளிநாடுகளுக்கு பயணமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதில் செம்மொழி மாநாட்டில் இலங்கையின் சார்பாக இவரது நடனக்குழுவும் பங்குபற்றியிருந்தமை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியதாகும்.
தமிழ்மிரரின் கலைஞர்கள் அறிமுகப் பகுதிக்காக கலாசூரி வாசுகி ஜெகதீஸ்வரனை பேட்டி காண்பதற்காக அவரது இல்லத்திற்கு சென்றிருந்தோம்.
கேள்வி: உங்களது நாட்டிய கலா மந்திர் குறித்துக் கூறுங்களேன்...?
பதில்: எனது நாட்டியக் கலா மந்திரில் 100இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பரதத்தை பயின்று கொண்டிருக்கிறார்கள். இந்த நாட்டிய கலாமந்திரினூடாக முதல் அரங்கேற்றம் 1980ஆம் ஆண்டு நடைபெற்றது. அன்று முதல் இன்று வரை பலரை அரங்கேற்றம் செய்துவிட்டேன். இப்போது 103ஆவது அரங்கேற்றமும் நிறைவடைந்துள்ளது.
அண்மையில் எனது 100ஆவது அரங்கேற்றம் நடந்தது. பரத கலையின் பாடத்திட்டத்தை மட்டுமல்லாமல் புதிய வகுப்பிற்கு வரும் தமிழ் மொழி மாணவர்களும் சகோதர மொழி மாணவர்களும் பரதம் குறித்தும் அதன் புனிதத்துவம் குறித்தும் தெரிந்துகொள்கிறார்கள். அவர்களை ஒவ்வொரு வருடமும் நடன பரீட்சைக்காக ஆயத்தப்படுத்தி அனுப்புகின்றேன்.
பரத கலையை தொழில்முறையாக கற்பிக்கக்கூடிய எனது மாணவர்கள் சர்வதேச ரீதியில் பரந்து வாழ்கின்றனர். என் மாணவர்களின் திறமை எல்லா இடங்களிலும் பரந்து விரிந்து காணப்படுகிறது.
எனது நாட்டிய கலா மந்திரினூடாக 50இற்கும் மேற்பட்ட நாட்டிய நாடகங்கள் மேடையேற்றப்பட்டுள்ளன. உள்நாட்டிலும் சர்வதேச அரங்கிலும் அதிகமான நடன நிகழ்வுகளை நடத்திக்கொண்டு வருகின்றோம்.
இவ்வாண்டில் அதிகமான நடன நிகழ்வுகளை செய்துள்ளோம். மீடியா மந்திரா என்ற அமைப்பு மஹா சிவராத்திரிக்காக ஒழுங்கு செய்திருந்த நிகழ்வில் 05 ஆசிரியர்கள் ஒன்றிணைந்து ஒரு நாட்டிய நிகழ்வை செய்தோம். இவ்வருடத்தில் கும்பேஸ்வரர் ஆலயம், சிதம்பரம், தஞ்சை பெருங்கோயிலில் நடந்த ஆயிரமாவது சிவராத்திரி போன்ற நிகழ்வுகளில் எனது மாணவர்கள் பங்கேற்றனர்.
இவை முடிய ஜூன் மாதத்தில் நடந்த செம்மொழி மாநாட்டில் இலங்கையில் கலை வளம் என்ற அடிப்படையில் அரை மணித்தியாலம் எனது மாணவர்கள் நடன நிகழ்வை நடத்தினார்கள். இவ்வாறான சிறப்பு நிகழ்ச்சிகளை எனது நாட்டிய கலா மந்திரினூடாக செய்திருக்கிறோம்.
கேள்வி: அரங்கேற்றம் என்பது பரதத்திற்கு எந்தளவு முக்கியத்துவமானது?
பதில்: அரங்கேற்றம் என்பது ஒரு நடனத்தை முழுமையாக படித்தல். நடனத்தை பயில வரும் மாணவர்களுக்கு ஆரம்பத்தில் 'அடவு' பயிற்சிகளை அதாவது நாட்டியத்தின் அடிப்படையை கற்றுக்கொடுக்கின்றோம். அதனை திறம்பட அவர்கள் கற்றுக்கொண்ட பின் நாட்டிய உருபடிகள் என்ற மார்க்கம் அலாரிப்பு தொடக்கம் தில்லான வரைக்கும் சம்பிரதாய உருபடிகள் என்ற மார்க்கத்தை நாங்கள் மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கின்றோம். மார்க்கத்தை முடித்து முதல் முதல் ஒரு மாணவி தனியாக அரங்கத்தில் காலடி எடுத்து வைப்பது அரங்கேற்றம்.
அரங்கேற்றத்திற்கு முன்பு அவர்கள் அடிப்படை விடையங்களையே கற்கின்றார்கள். இந்த அரங்க பிரவேசத்துக்கு பின்புதான் அவர்கள் எத்தனையோ மாறுதல்களை கற்கின்றார்கள்;. அரங்கேற்றம் என்பது பெஷனுக்காக செய்யக் கூடியது என நினைத்திருக்கக் கூடாது. சிலர் எனது மகள் அரங்கேற்றம் முடித்துவிட்டாள். படித்து முடித்துவிட்டாள் என்று கூறுவார்கள். அது முழுமையானதல்ல என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
கேள்வி: அரங்கேற்றத்தை கட்டாயமாக பிரமாண்ட மேடையில்தான் செய்ய வேண்டுமா?
பதில்: பிரமாண்ட மேடையென்று இல்லை. அந்தக் காலத்தில் கோயில்களில்தான் செய்தார்கள். ஆனால் தற்போது பரத நாட்டியம் நன்கு வளர்ச்சியடைந்துள்ளது. ஒரு குறிப்பிட்ட பார்வையாளர்கள் மட்டும் அங்கு சென்று பார்ப்பது என்று இல்லாமல், சமூகத்தில் அதை சிறப்பாக செய்ய வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இருக்கின்றபடியால் ஒரு மண்டபத்தை ஒழுங்கு செய்து அரங்கேற்றத்தை செய்கின்றார்கள்.
இது பெற்றோர்களின் நிலையை பொறுத்தது. சிறிய மண்டபங்களை ஒழுங்கு செய்து அதில் அரங்கேற்றம் செய்பவர்களும் இருக்கின்றார்கள். அவ்வாறானவர்களுக்கு உறவினர்களும் நண்பர்களும் குறைவாக இருக்கலாம். சில பெற்றோருக்கு பொதுமக்கள் தொடர்பு அதிகமாக இருக்கும். அவ்வாறானவர்கள் பிரமாண்டாமான மண்டபங்களை ஒழுங்குசெய்தால்தான் அனைவரையும் உபசரித்ததாக இருக்கும்.
பொதுவாக அரங்கேற்றத்தை பிரமாண்டமான மேடையில்தான் செய்ய வேண்டும் என்று இல்லை. சிலருக்கு பண வசதியிருந்தால் பெரிய மண்டபங்களில் செய்யலாம்.
ஆனால் கொழும்பைப் பொறுத்தவரை ஒருசிலர்தான் பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபம் போன்ற பிரமாண்டாமான அரங்கங்களை தெரிவு செய்கிறார்கள். இவ்வாறானவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். பொதுவான அரங்கேற்றங்கள் சிறிய நடுத்தர மண்டபங்களில்தான் இடம்பெறுகின்றன.
கேள்வி: இவ்வாறான சாதாரண மண்டபங்களில் கூட தங்களது அரங்கேற்றத்தை செய்ய முடியாதவர்களும் இருக்கின்றார்களே, இவர்கள் அரங்கேற்றம் என்பதை எப்படி செய்து முடிப்பார்கள்...?
பதில்: இருப்பார்கள். ஆனால் வறுமையான நிலையில் இருக்கும் பிள்ளைகளுக்கு அரங்கேற்றம் செய்யமுடியாது. அரங்கேற்றத்தை சாதாரண முறையிலும் செய்யலாம். பண வசதியை காட்டியும் செய்யலாம். சாதாரண முறையில் செய்யும் பொழுதுகூட அரங்கேற்றத்திற்கு தேவையான அடிப்படை விடயங்கள் உண்டு. ஒரு மேடை வேண்டும். ஒளி, ஒலி அமைப்பு, ஆடை- ஆபரணம், அழைப்பிதழ், நினைவுமலர் போன்றவை வேண்டும்.
இவையில்லாமல் இந்தக் காலத்தில் அரங்கேற்றத்தை வந்து பாருங்கள் என்று அழைக்க முடியாது. நிகழ்ச்சிக்கென ஒழுங்கு முறை உண்டு. எனவே இவற்றை செய்வதற்காகவே செலவழிக்கக் கூடியளவாவது மாணவர்களுக்கும் பெற்றோர்க்கும் பண வசதி இருக்க வேண்டும்.
அரங்கேற்றத்தை வீதியில் நின்று ஆடமுடியாது. ஓலி தேவை, மேடை தேவை, ஆடை தேவை, ஆபரணம் தேவை. இவையில்லாமல் அரங்கேற்றம் செய்ய முடியாது. ஆடம்பர செலவுகளை வேண்டுமானால் தவிர்த்துக்கொள்ளலாம். அதே நேரத்தில் எங்களுடைய நடனக் கல்லூரி நடத்தும் வருடாந்த நடன நிகழ்வுகளின்போது சிறிய மாணவர்கள், கனிஷ்ட மாணவர்கள், சிரேஷ்ட மாணவர்கள் அனைவரையும் வைத்து இசை நடன நிகழ்வை மேற்கொள்வோம்.
இவ்வாறான மாணவர்கள் தங்களது திறமைகளை அரங்கேற்றத்தினூடாகதான் காட்ட வேண்டும் என்று இல்லை. நாட்டிய நாடகம், குழுநடனம், தனிநடனம் போன்ற வேறு வேறு நிகழ்ச்சிகள் மூலமாக நாங்கள் அவர்கள் ஒவ்வொருவரையும் ஒன்றிணைத்து ஒரு களத்தை அமைத்துக்கொடுக்கின்றோம். அப்போது நீங்கள் கூறும் 'முடியாத' மாணவர்களுக்கு பெரிய ஒரு வாய்ப்பாக அமையும். அவர்களுக்குரிய அந்த செலவை எங்களது நாட்டியப் பள்ளிதான் பொறுப்பேற்கின்றது.
கேள்வி: நீங்கள் இவ்வாறான ஏழை மாணவர்களுக்கு செய்யும் உதவிகள் குறித்துக் கூறுங்கள்...?
பதில்: சில மாணவர்களுக்கு ஆடை வசதியில்லை என்று கூறுவார்கள். இவர்களுக்கு வசதிமிக்க மாணவர்களிடம் ஏன் நீங்கள் இவர்களுக்கு ஆடையுதவிகளை செய்ய கூடாது என்று கேட்டு அவர்களுக்கு உதவிகளைப் பெற்றுக்கொடுப்பேன். அவர்களுக்கு கட்டாயம் உதவி செய்பவர்களும் இருக்கின்றார்கள். நீங்கள் சொல்லும் நிலையில் ஒரு குறிப்பிட்ட சிலர்தான் வருவார்கள். எல்லா தமிழ் சமூகமும் வறுமைக் கோட்டுக்குள் இல்லையே? பாடசாலை சென்று படிக்கக் கூடியளவில்தானே இருக்கின்றார்கள். பெரிதாக செலவழிக்கக் கூடியளவு இல்லாவிட்டாலும் சாதாரணளவில் செய்யக் கூடிய தாய்- தந்தையர்தானே அந்தக் கலையை தேர்வு செய்கின்றார்கள். சாப்பிடுவதற்கு வழியில்லை அதற்கு வழியில்லை என்று எம்முடைய மக்கள் இல்லைதானே, அப்படியானவர்கள் வசதிவாய்ப்புகள் குறைந்த பிரதேசத்தவர்களாக இருக்கலாம். கொழும்பில் வாழ்பவர்களுக்கு அடிப்படையில் ஓரளவாவது வசதிவாய்ப்புகள் இருக்கும்.
கேள்வி: தற்போதைய நிலையில் பரதகலை மேல்தட்டு வர்க்கத்தினருடைய கலை என்ற ஒரு எண்ணக்கரு சமூகத்தில் நிலவிக் கொண்டு வருகின்றது. இல்லை இது எல்லோருக்கும் பொதுவான கலை என்ற நிலைமையை எவ்வாறு உருவாக்கலாம்?
புதில்: அரங்கேற்றத்தை தலையில் வைத்துக்கொண்டு மேல்மட்ட கலையென்பது பிழையான கருத்து என்றே நான்சொல்வேன். பொதுவாக அப்படி சொல்வது பிழை. சமூகத்தில் இப்படி ஒரு கருத்து நிலவி வருகின்றது. அரங்கேற்றம் மட்டும்தான் நடனத்தில் இருக்கின்றது என்பது இல்லையே? இதனைக் கற்றுக்கொள்ளும் அனைவரும் அரங்கேற்றம் தான் செய்யவேண்டும் என்ற அடிப்படை எண்ணத்தை மனதில் வைத்துக்கொண்டு வருவதில்லை. இக்கலையை பற்றி தெரிந்துகொள்ள வருவார்கள். பரீட்சைக்காக படிக்கின்றார்கள்.
கேள்வி: இப்போதைய காலகட்டத்தில் பரதத்துடன் மேலைத்தேய நடனப் பாணியையும் தொடர்புபடுத்தி பரதத்தை மேடையேற்றுவதால் அதனது புனித்தத் தன்மை இழக்கப்படுகிறது. இதிலிருந்து எவ்வாறு அதனது புனித்தத் தன்மையை மீட்டெடுக்கலாம்?
பதில்: தற்போதைய நிலையில் இதனை பரதத்தில் உட்புகுத்திக்கொண்டு வருகிறார்கள். 'அரங்கேற்றத்திற்கென வந்தால் அலாரி, ஜதீஸ்வரம் இதனையே கொண்டு வருகின்றீர்கள்' என்று கேட்கிறார்கள். ஆனால் அது பிழை.
எப்போதும் ஒரு பாரம்பரியம் இருக்க வேண்டும். இவையெல்லாம் ஒரு சாஸ்திரிய நடனங்கள். அதெற்கென ஓர் அமைப்பு, அதற்கென ஒரு பாணியிருக்கின்றது. ஒரு நாளும் இவ்வாறான சாஸ்திரிய நடனத்தில் மாற்றங்களை உட்புகுத்த கூடாது. எங்களால் முடிந்தவரை அதனை பேணி பாதுகாக்க வேண்டும். அரங்கேற்றம் என்று வரும்போது அதில் நாங்கள் பியூஷன் போடமாட்டோம். ஒரு நிகழ்வு ஏதும் வந்தால் கர்நாடக சங்கீதத்திற்குட்பட்டதும் பரத நாட்டியத்திற்கு பொருத்தமானதுமான பாடல்களில் கொஞ்சம் எங்களது மூளையை பயன்படுத்தி செய்யலாமே தவிர பியூஷன்தான் நடனம் என்றிருப்பது மகா பிழை. அப்படி இருப்பதால் கலையினுடைய உயிர்ப்புத்தன்மையையே அழித்து விடுவதுபோன்று.
இது அதிக காலத்திற்கு நீடிக்காது. என்னதான் பியூஷன் இருந்தாலும் சாஸ்த்திரிய நடனம்தான் நிலைத்து நிற்கும்.
கேள்வி: பரதக் கலையை எந்த வயதில் பயிலலாம்...?
பதில்: சாதாரணமாக 05, 06 வயதிலிருந்து தொடங்க வேண்டும். அப்போது அவர்கள் தரம் ஒன்றில் கல்வி பயில்பவர்களாக இருப்பார்கள். பரதத்தில் அடவு, தட்டவு, நாட்டடவு என்பன எண்ணிக்கையுடன் தொடர்புபட்டு வரும். இவையெல்லாவற்றிலும் கருத்தூன்றி நிற்கக் கூடியளவு பக்குவம் அவர்களுக்கு இந்த வயதிலிருந்தே ஆரம்பிக்கின்றது எனலாம்.
கேள்வி: இளம் வயதில் கற்கத் தவறியவர்கள் பின்னர் தமக்கு வசதிகள் ஏற்படும்போது விரும்பினால் பரதம் கற்றுக்கொள்ள முடியுமா?
பதில்: இந்த வயதை பிந்தி கற்க வருபவர்களுக்கு நெகிழ்வு தன்மை இல்லாமல் போகும். கை, கால்களை நீட்டி ஆடும் போது அவர்களுக்குள் உள்ள அந்த முதிர்ச்சி தன்மையால் கஷ்டப்படுவார்கள். ஆனால் பாடசாலைகளில் விளையாட்டு போட்டிகள் முதலியவற்றில் பங்குபற்றி உடம்பை ஒரு நெகிழ்வுத் தன்மைக்குள் வைத்திருப்பவர்களுக்கு இது இலகுவாக இருக்கும். இதனை கற்றே தீரவேண்டும் என்ற உறுதியான மனப்பாங்குடன் அசுர சாதகம் பண்ணினால் பரதத்தை பயிலலாம்.
கேள்வி: இந்தக் கலையை நீங்கள் பயிற்றுவிப்பதில் எதிர்நோக்கும் சவால்கள் குறித்துக் கூறுங்கள்?
பதில்: அதிகமான சவால்களை சந்திக்கின்றேன். மாணவர்கள் விடும் பிழையிங்கு பெரிதாக வராது. ஏனென்றால் அதிகமான பயிற்சிகளை வழங்கிய மாணவர்களை வைத்துதான் பெரிய பெரிய நிகழ்வுகளை நடாத்துகின்றோம். அதனால் மாணவர்கள் விடும் பிழைகள் இங்கு குறைவு. கலைகளை எங்களுடைய அர்ப்பணிப்புடன் செய்ய வேண்டும். அர்ப்பணிப்பு என்பது இல்லையென்றால் ஒரு கலை சிறப்பாக பார்வையாளரைச் சென்றடையாது. சில நேரங்களில் ஒத்திகையென்று வைக்கும்போது அனைத்து மாணவர்களையும் ஓர் இடத்திற்கு ஒன்று சேர்ப்பது மிகவும் கஷ்டமாக இருக்கும். ஒரு சில மாணவர்கள் வேலைக்குச் சென்றுவிடுவார்கள், பாடசாலைக்குச் சென்றுவிடுவார்கள், பிரத்தியேக வகுப்புகளுக்குச் சென்றுவிடுவார்கள். இவற்றை சமாளித்துக்கொள்ள வேண்டும். இதைத்தவிர சில இடங்களுக்கு நிகழ்ச்சிகளை கொண்டு செல்லும்போது மேடையமைப்பில் தடங்கல்கள் ஏற்படும். ஒலி- ஒளியமைப்பு மேடையில் கால்பதித்து ஆடும்போது ஏற்படும் ஒலி பார்வையாளருக்கு இடையூறை விளைவிக்கக் கூடியதாக அமையும்.
சிலநேரங்களில் பக்க வாத்தியக் கலைஞர்களுடன் சென்றால் பிரச்சினைகள் இருக்காது. இறுவெட்டுக்களை நம்பிக்கொண்டு சென்றால் சில நேரங்களில் அந்த இறுவெட்டு நின்று நின்று வேலைசெய்யும். இவ்வாறான அனுபவங்களை சகித்துக்கொண்டுதான் இருக்கவேண்டும். கலைஞர்களுக்கு அதிகமான மன உறுதி தேவை.
கேள்வி: இந்தக் கலையில் ஆண் மாணவர்களது ஆர்வம் எவ்வாறு உள்ளது?
பதில்: என்னிடம் வந்தவர்களில் 04 மாணவர்கள் அரங்கேற்றத்தை முடித்துள்ளார்கள். அதிகமான ஆண் மாணவர்கள் இந்த பரதக்கலையை பயின்றுகொண்டு இருக்கின்றார்கள். சிலருக்கு அரங்கேற்றம் செய்வதற்கு வசதியில்லாமல் போய்விடுகிறது.
சிலர் சிறு வயதில் பயின்றுவிட்டு பெரியவர்களாக வந்தபின் மேற்படிப்புக்காக வேறு வேறு துறைகளை தேர்ந்தெடுத்துக்கொள்கிறார்கள்.
இந்தியாவை பொறுத்தவரை ஆண் மாணவர்கள் இந்தக் கலையில் பங்குப்பற்றுவது அதிகமாக இருக்கின்றது. இலங்கையில் தமிழ் மொழி ஆண் மாணவர்கள் குறைவாகவே உள்ளனர். ஆனால் சகோதர மொழி மாணவர்கள் அதிகமாகவே உள்ளனர். அதையே அவர்களது துறையாக தேர்ந்தெடுத்து செய்பவர்களும் இருக்கவே செய்கின்றார்கள்.
கேள்வி: பரதம் பயில விரும்புபவர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது?
பதில்: பரதமானது பாரம்பரிய கலை. அதனை பயில்பவர்கள் குருபக்தியோடு, அர்ப்பணிப்போடு பயின்று இக் கலையின் வளர்ச்சிக்கு உறுதுணையாக செயற்படவேண்டும்.
பரத கலைக்காக தன்னை அர்ப்பணித்து சேவையாற்றி வரும் கலாசூரி வாசுகி ஜெகதீஸ்வரனுக்கு தமிழ்மிரர் சார்பாக நன்றிகளை கூறி விடைபெற்றோம்.
நேர்காணல்: க.கோகிலவாணி
படங்கள்: பிரதீப் பத்திரன
Niththi Friday, 15 October 2010 01:06 AM
கேள்விகளும் பதில்களும் அருமை. சிறந்த செவ்வி இது. பாராட்டுக்கள். புகைப்படங்களும் சிறப்பாக உள்ளன.
Reply : 0 0
pushparajah Sunday, 08 April 2012 12:03 AM
இலNன்கை OLI IZHILANTHU POIKI KONDURIUKKURITHATHU. THALAI சர் I ILLAI, THALIA ATTUPAVARUM SARI ILLAI...let's not dance to their tunes. Yes Sir, Yes Sir three bags full.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago