2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

விளையாட்டு மைதானத்தை விஸ்தரிக்குமாறு டக்ளஸுக்கு கடிதம்

Shanmugan Murugavel   / 2021 ஒக்டோபர் 28 , பி.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெரியகல்லாறு பொது விளையாட்டு மைதானத்தின் சரியான எல்லையை அளவை செய்து நிர்ணயித்தல், மைதானத்தின் கிழக்குப் புறத்தை விஸ்தரித்து எல்லைக் கட்டினை அமைத்தல், உள்ளிட்ட பல கோரிக்கை அடங்கிய கடிதம் ஒன்றை கல்லாறு மத்திய விளையாட்டுக் கழகம், பெரியகல்லாறு சர்வாத்த சித்திவிநாயகர் ஆலயத்துக்கு வருகைதந்த கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் நேற்று கையளித்தனர்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் பெரியகல்லாறு கிராமத்தில் எமது பொது விளையாட்டு மைதானம் அமைந்துள்ளது.  இது சுமார் 50 வருடங்கள் வரலாறு கொண்ட பழைமை வாய்ந்த மைதானம் ஆகும். இந்த மைதானத்தை எமது கிராம விளையாட்டு கழகங்கள் பாடசாலை மாணவர்கள், முன்பள்ளி பாடசாலை மாணவர்கள், அயல்கிராம விளையாட்டு கழகங்கள், பிரதேச செயலகங்கள், மட்டக்களப்பு மாவட்ட கிரிக்கட் சம்மேளனம் ஆகிய அமைப்புகள் இந்தமைதானத்தினை பயன்படுத்தி பல்வேறு வகையான விளையாட்டு நிகழ்வுகளை நடாத்தி வருகின்றனர்.

எமது பெரியகல்லாறு பொதுவிளையாட்டு மைதானமானது வடக்கே நாகதம்பிரான் ஆலயத்தையும், கிழக்கே நீரோடையையும் தெற்கே அன்னைவேளாங்கன்னி வீதியினையும், மேற்கே நான்கு குடும்பங்களின் காணிகளினையும் எல்லையாக கொண்டு அமையப்பெற்றுள்ளது.

சிலர் உண்மைக்கு புறம்பான தகவல்களை வழங்கியதன் காரணமாக பெரியகல்லாறு பொது மைதானத்தில் கடின பந்து கிரிக்கட் விளையாடுவதற்கு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையினால் தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர்பான கடிதம் தவிசாளரின் கையொப்பத்துடன் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

பட்டிருப்பு தொகுதியில் கடினபந்து கிரிக்கட் விளையாடுகின்ற பாடசாலை மற்றும் கழகம் என்பன எமது கிராமத்தில் மாத்திரமே அமையப்பெற்றுள்ளது. கிட்டத்தட்ட 25 வருடத்திற்கு மேலாக கடினபந்து கிரிக்கட்டினை எமது பொது விளையாட்டு மைதானத்தின் விளையாடிக்கொண்டு வருகின்றோம். எமது பிரதேச கடினபந்து கிரிக்கட் விளையாட்டின் வளர்ச்சிக் கட்டத்தின் ஒரு அங்கமாக பெரியகல்லாறு மத்திய கல்லூரி அணியினருக்கும் மட்டக்களப்பு இந்துக் கல்லூரி அணியினருக்குமான “Battle of the Everest”  என அறியப்படும் போட்டியினை இந்த மைதானத்திலேயே நடாத்தி வருகின்றோம். எமது மைதானமானது வடக்கு தெற்காக 128மீற்றரும், கிழக்கு மேற்காக 108மீற்றரும் ஆக போதியளவு இடவசதி உள்ள நிலையில் கடினபந்து கிரிக்கட்டினை விளையாட விடாமல் தடை செய்தமையினை, குறுகிய நோக்கம் கொண்ட சிலரின் சதி முயற்சியாகவே நாங்கள் பார்க்கின்றோம்.

இதனால் எமது பிரதேச கடினபந்து கிரிக்கட் வீரர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். எனவே விளையாட்டினை நேசிக்கின்ற அமைச்சராக இருக்கின்ற நீங்கள் எங்கள் கவலையினை உணர்வீர்கள் என நாங்கள் உங்கள் மீது நம்பிக்கை கொள்கின்றோம். எனவே எமது பிரதேச ஒட்டுமொத்த இளைஞர்களின் தேவையாக இருக்கின்ற மைதான பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக மைதானத்தின் கிழக்குப்புறமாக காணப்படுகின்ற 30 அடி நீளமான கரையோர பாதுகாப்பு எல்லைக்குள் உட்பட்ட புதர்கள் நிறைந்த பள்ளமான நிலப்பகுதியினை செப்பநிட்டு மைதானத்துடன் இணைத்து தருமாறு தயவான கோரிக்கையினை முன் வைக்கின்றோம்” என உள்ளிட்ட பல கோரிக்கைகள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .