2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

போப் பிரான்சிஸின் இளமைக்கால காதல்

Freelancer   / 2025 ஏப்ரல் 23 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் உடைய இயற்பெயர் ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ. 22 வயதில் இறை சேவைக்கு தன்னை அர்ப்பணித்த அவரால் கத்தோலிக்க திருச்சபையில் பல சீர்திருத்தங்கள் நிகழ்ந்தன எனலாம்.

டிசெம்பர் 17, 1936 அன்று அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸில் ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ பிறந்தார். அவரது தந்தை, மரியோ ஜோஸ் பெர்கோக்லியோ, ரயில்வேயில் பணிபுரிந்தார், அவரது தாயார், ரெஜினா சிவோரி, வீட்டை நிர்வகித்தார்.

ஜார்ஜ் குழந்தைப் பருவத்தில் அவருடைய குடும்பம் பியூனஸ் அயர்ஸில் உள்ள மெம்ப்ரில்லர் தெருவில் வசித்து. அங்கு ஜார்ஜ், அமலியா டாமோன்டே என்ற தனது அண்டை வீட்டுப் பெண் மீது காதல் வயப்பட்டார்.

12 வயதில், ஜார்ஜ் அமலியாவுக்கு ஒரு காதல் கடிதம் எழுதினார். அதில் சிவப்பு கூரையுடன் கூடிய ஒரு சிறிய வெள்ளை வீட்டின் ஓவியத்தை வரைந்திருந்தார்.

தாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டால், அத்தகைய வீட்டை தான் வாங்குவேன் என்று அதில் எழுதியுள்ளார். மேலும், "நான் உன்னை திருமணம் செய்து கொள்ளாவிட்டால், நான் ஒரு பாதிரியாராகிவிடுவேன்" என்றும் அவர் அந்த கடிதத்தில் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதம் குழந்தைத்தனமானது என்று அமலியா நினைத்தார். ஜார்ஜ் எதிர்பார்த்தபடி அவர் பதிலளிக்கவில்லை. அமலியாவின் கண்டிப்பான பெற்றோரும் இந்தக் கடிதத்தைக் கண்டுபிடித்தனர்.

அதைத் தொடர்ந்து அவர்கள் தலையிட்டு இருவரையும் பிரித்து வைத்தனர். சிறிது காலத்திலேயே ஜார்ஜ் பெர்கோக்லியோ குடும்பம் அங்கிருந்து வேறு இடத்துக்கு குடிபெயர்ந்தது. அமலியா இறுதியில் வேறொருவரை மணந்தார். பல ஆண்டுகள் கழித்து ஏபி செய்தி நிறுவனத்துக்கு அமலியா டாமோன்டே அளித்த நேர்காணலில், ஜார்ஜ் அளித்த கடிதத்தை நினைவு கூர்ந்தார்.

 

உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, ஜார்ஜ் பியூனஸ் அயர்ஸ் பல்கலைக்கழகத்தில் பயின்று வேதியியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர், அவர் ஒரு பாதிரியாராக மாற முடிவு செய்தார்.

அவர் 1969இல் திருச்சபையில் திருச்சபைப் பொறுப்பேற்றார், இறுதியில் பியூனஸ் அயர்ஸின் பேராயரானார். மார்ச் 13, 2013 அன்று, அவர் 266ஆவது போப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அசிசியின் புனித பிரான்சிஸால் ஈர்க்கப்பட்டு பிரான்சிஸ் என்ற பெயரைப் பெற்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .