2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

காஸா எல்லையில் பெரிய பூட்டு

Editorial   / 2024 மே 09 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போரில் கடைசி நம்பிக்கையாக திகழ்ந்த ரஃபா நகரை குறிவைத்து ராணுவத்தை இறக்கி விட்டுள்ளனர். இதனால் பாலஸ்தீனிய மக்கள் பெரிதும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அடுத்து என்ன நடக்குமோ? என்ற பதற்றம் தொற்றிக் கொண்டது.

மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் தொடர் கதையாகி மாறியுள்ளது. இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான சண்டை 214வது நாளை எட்டியுள்ளது. காஸா பகுதி முற்றிலும் உருக்குலைந்து கிடக்கிறது. இங்கிருந்து பல லட்சம் பேர் ரஃபா நகரில் தஞ்சமடைந்துள்ளனர். இந்நிலையில் ரஃபாவில் ஹமாஸ் படைகளின் முகாம்கள் இருப்பதாக கூறி, அவற்றின் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் முடிவு செய்துள்ளது. இது அப்பாவி மக்கள் மீது திரும்ப வாய்ப்பிருப்பதாக கூறியும் கேட்கவில்லை.

தற்போது கான் யூனிஸ் நகருக்கு ரஃபாவில் உள்ள மக்களை இடமாற்றம் செய்ய இஸ்ரேல் திட்டமிட்டு, அதற்கான வேலைகளை முடுக்கி விட்டுள்ளது. பாலஸ்தீனிய மக்களை இடமாற்றம் செய்ய பிற நாடுகளின் உதவியை இஸ்ரேல் நாடியிருக்கிறது. ரஃபாவில் தன்னுடைய ஆபரேஷன் தொடங்கிவிட்டதை உணர்த்தும் விதமாக ராணுவ டாங்கிகளை உள்ளே கொண்டு சென்றுள்ளது. மேலும் எகிப்து நாட்டை ஒட்டி காணப்படும் காஸா எல்லைப் பகுதியை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.

இதுபற்றி இஸ்ரேல் ராணுவத்தினர் வெளியிட்டுள்ள செய்தியில், எங்களின் நோக்கம் என்பது ஹமாஸ் படையினரை ஒழிப்பது, கடந்த வாரம் கீரீம் ஷாலோம் எல்லையில் 4 இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில் ரஃபாவில் பயன்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு வசதிகளை அழிப்பது என்று தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு தயாராக இருப்பதாக ஹமாஸ் படையினர் தெரிவித்துள்ளனர்.

இதற்கான நடவடிக்கையில் அமெரிக்கா மற்றும் அரபு நாடுகள் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றன. எனவே இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் ஒப்பந்தத்திற்கு சம்மதம் தெரிவிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். அந்த அளவிற்கு சர்வதேச அளவில் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.

ரஃபாவில் இஸ்ரேல் படைகள் ஊடுருவ ஆரம்பித்ததில் இருந்து தற்போது வரை, அப்பாவி மக்கள் பலர் கொல்லப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் 27 பேரின் உடல்கள் வந்து சேர்ந்துள்ளன. படுகாயம் அடைந்த 150 பேர் சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டுள்ளதாக நிர்வாகம் கூறியுள்ளது. எனவே பொதுமக்கள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது. ரஃபா மற்றும் கிரீம் ஷாலோம் கிராசிங் என இரண்டு எல்லைப் பகுதிகளை இஸ்ரேல் ராணுவத்தினர் சீல் வைத்துள்ளனர்.
இந்த வழியாக தான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்கள் செல்லப்படுகின்றன. தற்போது இவை மூடப்பட்டிருப்பதால் பெரிய சிக்கல் ஏற்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. மனித நேய அடிப்படையில் உதவிகள் செய்ய வழிகள் இல்லையெனில் நிலைமை இன்னும் மோசமடையும் என்று சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் எச்சரிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .