2024 நவம்பர் 21, வியாழக்கிழமை

தமிழிணைய மாநாடு தஞ்சையில்

Editorial   / 2022 நவம்பர் 06 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகத் தமிழ் தகவல் தொழில் நுட்ப மன்றத்தின் ( INFITT) 21ஆவது  தமிழிணைய மாநாடு (Tamil Internet Conference) வருகின்ற டிசம்பர் மாதம் 15 தொடக்கம் 17 வரை தஞ்சை  தமிழ் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது .

INFITT(International Forum for Information Technology in Tamil) என்றும் தமிழில் உத்தமம் என்றும் அறியப்படும் உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் தன்னுடைய 21வது உலகத்தமிழ் இணைய மாநாட்டினை இந்த வருடம்   டிசம்பர் மாதம்  15ஆம் திகதி தொடக்கம் 17ஆஅம் திகதி வரை தஞ்சாவூரில் உள்ள தமிழ்ப் பல்கலைக்கழகம் மற்றும் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து நடத்துகிறது.

இது தொடர்பிலான ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு சென்னை பத்திரிகை மன்றத்தில் நடைபெற்றதுடன், உத்தமம் நிறுவனத்தின் தற்போதைய தலைவரும் இலங்கையைச் சேர்ந்தவருமான  திரு.த.தவரூபன், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் திருவள்ளுவன் மற்றும் உத்தமத்தின் முன்னாள் தலைவர் அண்ணாமலை பல்கலைக்கழகம் முனைவர் மா. கணேசன், உத்தமம் செயல் இயக்குனர் முனைவர் இ.பொன்னுசாமி ஆகியோர் கலந்துகொண்டு விளக்கமளித்தனர். 

இந்த மாநாட்டின் முக்கியக் கருப்பொருளாகத் “தொழில்துறை 5.0 இல் தமிழின்பங்கு”(Tamil in Industry 5.0) எனவும் தொழிற்துறையில் ரோபோக்களின் ஆதிக்கம் மேலோங்கி செயற்கை நுண்ணறிவுத் திறன் பயன்பாடு அதிகரித்து வருகின்ற தொழிற்புரட்சியின் 5வது பரிணாமம் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் இக்காலப்பகுதியில் தமிழினை இங்கு எவ்வாறு பிரயோகம் செய்யலாம் உட்புகுத்தலாம் என்பது தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்படுவதாக ஆய்வுகள் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இம்மாநாட்டில் தமிழ்ரோபாட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு மற்றும் இயற்கைமொழி ஆய்வுகள் ஆகிய தலைப்புகளில் இந்தியா, இலங்கை, மலேசியா, அமெரிக்கா மற்றும் உலகெங்கிலும் உள்ள பல்கலைக்கழகங்களின் தமிழ் மற்றும் கணினி அறிவியல் துறைகளைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும்  ஆராய்ச்சியாளர்கள் தங்கள் கட்டுரைகளைப் படைக்கவிருக்கிறார்கள்.

இலங்கை .மலேசியா, மோரிசு, சிங்கப்பூர், அமெரிக்கா, பிரான்ஸ், செக்குடியரசு மற்றும் இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள், தமிழ்க்கணிப் பொறியில் தங்களின் தற்போதைய ஆய்வுகளை முன்வைக்கின்றனர்.

இம்மாநாட்டில் ஆய்வாளர்களையும் மாணவர்களையும் தமிழ் தொழில்நுட்ப ஆர்வலர்களையும் தொழிற்துறைசார்ந்தவர்களையும் கலந்து சிறப்பிக்குமாறு மாநாட்டு ஏற்பாட்டுக் குழுசார்பில் அழைப்பு விடுக்கப்படுகின்றது. மாநாட்டிற்கான பதிவுகளை மாநாட்டு இணையத்தளத்தில் மேற்கொள்ளமுடியும் என்பதுடன், தமிழிணைய மாநாடு தொடர்பான மேலதிக தகவல்களை  www.tamilinternetconference.org இந்த இணைய முகவரியிலிருந்தும் பெற்றுக்கொள்ளலாம்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X