2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற சீமான் கைது

Freelancer   / 2024 டிசெம்பர் 31 , பி.ப. 02:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்  சீமானை,  பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த சம்பவம் தொடர்பாக கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவரை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில், பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகள், பாலியல் சீண்டல்களை கட்டுப்படுத்த தவறிய தமிழக அரசை கண்டித்தும், சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை கண்டித்தும் அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

இதையடுத்து, அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில், இன்று (31), சென்னை , வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கேட்டிருந்த நிலையில், ஆர்ப்பாட்டத்துக்கு நுங்கம்பாக்கம் பொலிஸார் அனுமதி மறுத்துள்ளனர். அனுமதி மறுக்கப்பட்டாலும் ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக நாம் தமிழர் கட்சி சார்பில் கூறப்பட்டது.

ஆர்ப்பாட்டத்துக்கு பொலிஸார் அனுமதி மறுத்த நிலையில், நான் தமிழர் கட்சியினர் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை பொலிஸார் கைது செய்தனர். 

இதனை தொடர்ந்து, அங்கு வந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காரை விட்டு இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றார். அப்போது பொலிஸார் அவரை தடுத்தனர்.

 இதனால் இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, சீமானை பொலிஸார் கைது செய்து வாகனத்தில் ஏற்றி அருகில் உள்ள திருமண மண்டபத்துக்குள அழைத்து சென்றனர்.

பொலிஸார் கைது செய்தபோது "ஜனநாயக ரீதியில் போராட வந்த என்னை காவல்துறை ஒடுக்குகிறது" என்று சீமான் குற்றஞ்சாட்டினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X