2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

கொலை நகரமாக மாறும் நெல்லை -அதிர்ச்சி தகவல்!

Freelancer   / 2024 மே 22 , பி.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

திருநெல்வேலி மாவட்டத்திலும், மாநகரிலும் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 240 கொலைச் சம்பவங்கள் நடந்துள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பொலிஸார் அளித்துள்ள பதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தக் கொலை வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள 887 பேரில் 48 பேர் சிறார் என்பது இன்னொரு அதிர்ச்சி.

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் 1990, 2000ஆம் ஆண்டுகளில் சாதிய வன்முறைகளால் கொலை சம்பவங்கள் அதிகரித்திருந்தன. அதேபோல் கடந்த சில ஆண்டுகளாகவும் கொலைச் சம்பவங்கள் மேலும் அதிகரித்திருக்கிறது.

திருநெல்வேலியில் கடந்த சில நாட்களுக்கு முன் பட்டப்பகலில் நடைபெற்ற இரட்டைக் கொலைகள் பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டத்திலும், மாநகரிலும் கடந்த 4 ஆண்டுகளில் நடைபெற்ற கொலைச் சம்பவங்கள், கொலை வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்கள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் (ஆர்டிஐ) கேட்கப்பட்ட கேள்விகளுக்கு திருநெல்வேலி மாநகர மற்றும் மாவட்ட காவல்துறை அளித்துள்ள பதில்கள் மேலும் அதிர்ச்சியை தந்திருக்கிறது.

திருநெல்வேலி மாநகரில் கடந்த 4 ஆண்டுகளில் 58 கொலைகளும், மாவட்டத்தில் 182 கொலைகளுமாக மொத்தம் 240 கொலைகள் நடைபெற்றுள்ளன. இதில் ஒன்று ஆணவக் கொலை, முன்விரோத கொலைகள் 45, சாதிய கொலைகள் 16 நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கொலை வழக்குகளில் மாவட்டம் முழுவதும் 887 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர்களில் மாநகர் பகுதியில் 92 பேரும், மாவட்டத்தில் 243 பேருமாக மொத்தம் 335 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்குகளில் கைது செய்யப்படாமல் 7 பேர் தலைமறைவாக உள்ளனர். கொலை வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்களில் 48 பேர் சிறார்.

இந்தக் கொலை சம்பவங்களில் 25 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் அதிகளவில் ஈடுபடுவதாகவும், பள்ளி - கல்லூரிகளில் இருந்து படிப்பை பாதியில் விட்டவர்களே அதிகளவில் கொலை குற்றச் செயல்களில் ஈடுபடுவதாகவும் காவல் துறை தெரிவித்துள்ளது.S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .