2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

உடல்களைத் தேடும் பணி 7ஆவது நாளாகத் தொடர்கிறது

Freelancer   / 2024 ஓகஸ்ட் 06 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவு பாதித்த பகுதிகள் மற்றும் சாலியார் ஆற்றில் நேற்று 7வது நாளாக உடல்களை தேடும் பணி நடந்து வரும் நிலையில், நிலச்சரிவில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 400ஐத் தாண்டியுள்ளது.

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள சூரல்மலை, முண்டக்கை, புஞ்சிரிமட்டம் ஆகிய பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு இன்றுடன் ஒரு வாரம் ஆகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்தும், சாலியார் ஆற்றில் இருந்தும் தினமும் உடல்களும், உடல் பாகங்களும் கிடைத்து வருகின்றன. இராணுவத்தினர், பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்பு வீரர்கள் உட்பட 1200க்கும் மேற்பட்டோர் உடல்களைத் தேடி வருகின்றனர்.

இது தவிர சமூக சேவகர்கள் 1500 பேரும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். சாலியார் ஆற்றில் இருந்து தினமும் உடல்களும், உடல் பாகங்களும் கிடைத்து வருவதால் நேற்று அங்கும் உடல்களை தேடும் பணி நடைபெற்றது.

சூரல்மலை, முண்டக்கை, புஞ்சிரிமட்டம் பகுதிகளில் 30க்கும் மேற்பட்ட ஜேசிபி இயந்திரங்களை பயன்படுத்தி உடல்களைத் தேடி வருகின்றனர். இதற்கு கேரள பொலிஸின் ட்ரோன்களும், இராணுவத்தின் 2 ரேடார்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

நேற்று 4 உடல்களும் ஒரு உடல் பாகமும் கண்டெடுக்கப்பட்டது. மேலும், நிலச்சரிவால் வீடுகள் இருந்த இடமே தெரியாமல் தரைமட்டமாகி விட்டதால் எங்கெங்கு வீடுகள் இருந்தன என்பது குறித்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தெரியவில்லை. இதனால் அந்த பகுதியில் வசித்தவர்களை வரவழைத்து அவர்கள் மூலம் வீடுகள் இருந்த இடத்தை கண்டுபிடித்து அங்கு உடல்களை தேடி வருகின்றனர்.

நிலச்சரிவு ஏற்பட்டு ஒரு வாரம் ஆகிவிட்டதால் யாரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்பதால் தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதிப்பது நிறுத்தப்பட்டுவிட்டது. பலியானவர்களில் 74 உடல்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

அதேசமயம், நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களில் அடையாளம் காணப்படாத உடல்கள் மற்றும் உடல் பாகங்களை சர்வ மத பிரார்த்தனையுடன் அடக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்டது. இதற்காக அருகிலுள்ள புத்துமலை என்ற பகுதியில் ஒரு இடம் தேர்வு செய்யப்பட்டது.

இந்நிலையில் நேற்று 29 உடல்களும், 158 உடல் பாகங்களும் சர்வ மத பிரார்த்தனையுடன் அடக்கம் செய்யப்பட்டன. கை, கால்கள் என்று தனித்தனியாக கிடைத்த உடல் பாகங்கள் ஒவ்வொன்றையும் தனித்தனி உடல்களாக பாவித்து எல்லா மரியாதையும் கொடுத்து அடக்கப்பட்டன. அப்போது பொலிஸ் மரியாதையும் அளிக்கப்பட்டது.S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .