2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

இரு தலைகள்: ஒரே உடம்பு; சம்பளமோ டபுள்

Editorial   / 2024 ஓகஸ்ட் 09 , பி.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிறக்கும்போதே இரண்டு தலைகள் ஒரு உடலுடன் ஒட்டிப் பிறந்த இரட்டையர்களின் வாழ்க்கை பலரை ஆச்சரியப்பட வைத்துள்ளது மட்டுமல்லாமல், உடல்ரீதியாக இவர்கள் பல்வேறு அதிசயங்களைக் கொண்டுள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.
சோஹ்னா மற்றும் மோஹ்னா ஆகிய இருவரும் இரட்டையர்கள் மட்டும் இல்லை. ஒட்டியே பிறந்த இரட்டையர்கள். உடல் இரண்டாக உள்ள இவர்களுக்கு கை நான்கு. ஆனால் கால் மட்டும் இரண்டுதான். தலை இரண்டு, ஆனால் வயிறு ஒன்றுதான். சுருக்கமாகச் சொல்லப் போனால் 'மாற்றான்’ சூர்யாவைப் போல இருவரைப் போல இருக்கும் ஒருவர்.

இதில் மற்றொரு விநோதம் என்னவென்றால் இரண்டு கால் இருந்தாலும், ஒரு காலை தொட்டால் சோஹ்னாவுக்கு உணர்வு ஏற்படுகிறது. மற்றொரு காலை தொடும்போது அது மேஹ்னாவுக்கு மட்டுமே தொடு உணர்வைத் தருகிறது. அதைப் போன்று இரண்டு பேரும் ஒரே உடம்புக்குள் இருந்தாலும் ஒருவரின் தலையைத் தொடும் போது மற்றொருவருக்கு உணர்வு வருவதே இல்லை. இரண்டு பேருக்கும் பொதுவாக இருக்கும் வயிறு, நெஞ்சு போன்ற பகுதியை தொட்டால் இருவருக்கும் உணர்ச்சி உருவாகிறது.

ஆனால், இந்த இருவரும் ஒன்றாகவே தூக்குகிறார்கள். ஒன்றாகவே கழிவறைக்குப் போகிறார்கள். இந்த இருவருக்கும் வயிறு ஒன்றுதான் என்றாலும் இருவருமே தனித்தனியாகச் சாப்பிடுகிறார்கள். ஒரு சாப்பிட்டுவிட்டார் என்பதால் மற்றொருவரின் பசி அடங்கிவிடுவதில்லை. அதுவும் ஆச்சரியமாக உள்ளது.

இருவருக்கும் ரத்தத்தின் குரூப் ஒன்றாகவே உள்ளது. அறிவியல் ரீதியாகப் பார்த்தால் இரண்டு குழந்தைகளாக தனித்தனியாகப் பிறக்க வேண்டிய இவர்கள் கரு உருவாகும் போது ஒன்றோடு ஒன்றாக ஒட்டிக் கொண்டுவிட்டார்கள். அக்கரு அப்படியே வளர்ந்துவிட்டது. பிறந்த பிறகு இதயமும், நுரையீரலும் ஒன்று மட்டுமே இருந்ததால் இவர்களை அறுவை சிகிச்சை மூலம் பிரிக்க முடியாது என மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

மேலும் இந்த இருவருக்கும் ஆசன வாய் கூட ஒன்றுதான் உள்ளது. இருவரும் ஒட்டியே இருந்தாலும் சோஹ்னா தனி மொபைலில் படம் பார்க்கிறார். மோஹ்னா தனது செல்போனில் வீடியோகளைப் பார்க்கிறார். அதில் மட்டும் தனித்தனியாக இயங்குகிறார்கள். எளிமையாகச் சொன்னால் இடுப்புக்கு மேல் இவர்கள் இரட்டையர்கள். இடுப்புக்குக் கீழ் ஒரு மனிதர்.

இவர்கள் பிறந்த போது உயிர்வாழ்வதற்கு 15%தான் வாய்ப்பு உள்ளது என மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதைப் பொய்யாக்கி இந்த இரட்டையர்கள் இப்போது வரை இன்பமாக வாழ்ந்து வருகிறார்கள். இந்த இருவரும் 4 அடி உயரம் உள்ளனர். இவர்களின் அகலம் 3.2 இஞ்ச் இருக்கின்றது. இவர்கள் ஒட்டியே பிறந்ததால் இவர்களது பெற்றோர்கள் சிறு வயதிலேயே கைவிட்டுவிட்டார்கள்.

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள காப்பகம் ஒன்றில்தான் இந்த இருவரும் வளர்ந்து வருகிறார்கள். இவர்களுக்கு அமிர்தரஸ் நகரம் தான் சொந்த ஊர். இப்போது 22 வயதை நிறைவு செய்துள்ள இந்த இரட்டையர்கள் எப்படிப் பசி வந்தால் தனித்தனியாகச் சாப்பிடுகிறார்களோ, அதே போல இரண்டு பேருக்கும் தனித்தனியாகச் சம்பளம் அளிக்கப்படுகிறது. ஒவ்வொருவருக்கும் மாதம் தலை 10,000 ரூபாய் சம்பளம் கிடைக்கிறது. இந்த நகரத்தில் உள்ள மின்சார வாரியத்தில் எலக்ட்ரீஷியன்களாக வேலை பார்த்து வருகிறார்கள்.

பல காலம் இவர்கள் உயிர்வாழ முடியாது என்று சொன்ன மருத்துவ உலகம் இன்று வாயடைத்துப் போய் உள்ளது. வாழ்க்கை எல்லாம் சரி. திருமண உறவு என்று வந்தால் எப்படி? என்ற கேள்விக்கு, “கட்டாயம் அது சாத்தியமானதுதான். ஆகவே, நாங்கள் திருமண வாழ்க்கைக்காகக் காத்திருக்கிறோம்” என்கிறார் சோஹ்னா. எவ்வளவு வயது வரை நீங்கள் வாழ விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு இருவரும் சேர்ந்து, “கடவுள் எவ்வளவு காலம் எங்களை வாழச் சொல்கிறாரோ அதுவரை” என்று சொல்கிறார்கள். மேலும் எப்படியும் 50வயது வரை வாழ்வோம் என்று நம்பிக்கை உள்ளது என்கிறார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .