Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2021 ஏப்ரல் 20 , பி.ப. 01:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
‘பெரியண்ணா’வின் வீட்டுக் கோடியை கடுமையாகக் கண்காணிக்கவும்
நாலாபுறங்களும் கடலால் சூழப்பட்டிருக்கும் தீவுக்குள், கொரோனா வைரஸ் பரவியமைக்கு அரசாங்கத்தின் அக்கறையின்மையே பிரதான காரணமாகுமென முதலாவது கொரோனா அலையின் போது, பெருமளவில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
தம்மீது சேறு பூசப்பட்டுவிடுமோ எனும் பேரச்சத்தில், விழிபிதுங்கியிருந்த அரசாங்கம், சகல பலத்தையும் ஓரணியின் குவித்து, முழு நாட்டையும் முடக்கி, கடுமையான கண்காணிப்புகளை மேற்கொண்டு, பரவலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது.
தீவு என்பதால், வெளிநாட்டுத் தொடர்புகளைத் தற்காலிகமாகவேனும் கைவிட்டிருந்தால், முதலாவது அலையில்கூட சிக்கியிருக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது என்பது எதிர்க்கட்சியினரின் பிரதான குற்றச்சாட்டுகளில் ஒன்றாக இருந்தது.
ஆனாலும், புத்தாண்டுக்குப் பின்னர், புதிய கொரோனா மாறித் தொற்றாளர்கள், இலங்கையிலும் இனங்காணப்பட்டிருந்தனர். அதுவும்கூட, மூன்றாவது அலையை ஏற்படுத்துமென, இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம், கடுமையாக எச்சரித்திருந்தது.
ஆனால், சகல தரப்பினரும் அசட்டையாக இருந்தமையால், அடுத்த அலைக்கு முகங்கொடுத்தே ஆகவேண்டுமென்ற அச்சம் சூழ்கொண்டுவிட்டது, நீண்டநாள்களுக்குப் பின்னர், குருநாகலில் ஓரிரு இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. நேற்றுக்காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில், சனச்செறிவு கூடிய பிரதேசங்களான கொழும்பு, நீர்கொழும்பில் புதிய கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் 63 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். இந்தத் தகவலையும் ஒருகாதால் வாங்கி, மறுகாதால் விட்டுவிடக்கூடாது, இதுவும் கூட, அடுத்த கொரோனா வைரஸ் அலைக்கான ஆரம்பப்புள்ளியாக இருக்கக்கூடும்.
இதற்கிடையே புதுடெல்லியில், ஒருவாரத்துக்கு முழுமையான ஊரடங்கும் அமுல்படுத்தப்பட்டுள்ளது. புதுடெல்லியில் இருக்கும் இலங்கைக்கான உயர்ஸ்தானிகராலயத்தில் கடமையாற்றும் சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதால், உயர்ஸ்தானிகராலயமும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த தேர்தலில் வாக்களிப்பதற்காக, புதுடெல்லியிலிருந்தும் பலர் வருகைதந்திருந்தமை, அவர்களின் சமூக வலைத்தளங்களின் ஊடாகப் பகிரங்கப்படுத்தப்பட்டிருந்தன. ஆகையால், தமிழகமும் கடுமையான கட்டுப்பாடுகளுடன் இனிமேலாவது இருக்கவேண்டும். அங்கும் கொரோனா வைரஸின் தாண்டவம் அதிகரித்தே உள்ளது.
எமக்கு, தமிழகம் வெகுதொலைவில் இல்லை; அக்கரையிலிருந்து இக்கரைக்குப் போதைப்பொருள், மஞ்சள் உள்ளிட்ட சட்டவிரோதமான கடத்தல்கள், சர்வதேச கடல் எல்லையைத் தாண்டிய குற்றச்சாட்டின் கீழ், கைதுசெய்யப்படும் தமிழக மீனவர்களின் எண்ணிக்கை என்பன வெகுவாக அதிகரித்துள்ளன.
புதுடெல்லியிலிருந்து தமிழகத்துக்குப் பரவும் கொரோனா, கடத்தல்களில் தொற்றிக்கொண்டு, நாடு கடத்தப்படலாம் என்பதால், கரையோர கண்காணிப்பைக் கடுமையாக்குவது, பொறுப்பானவர்களின் பாரிய பொறுப்பாகும்.
இந்தியாவுக்கும் இலங்கைக்குமான உறவை, ‘பெரியண்ணா’வின் உறவுக்கே ஒப்பிடப்படுகின்றது. ஆகையால், பெரியண்ணாவின் வீட்டுக் கோடியான தமிழகத்தின் கரையிலிருந்து, இக்கரைக்கு கொரோனா கடத்தலை, தடுக்கும் வழிவகைகளை முன்னெடுப்பது, இரு கரைகளையும் கண்காணிக்கும் இருதரப்பினரதும் பாரிய பொறுப்பாகும். (19.04.2021)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
3 hours ago
5 hours ago
7 hours ago