Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை
Editorial / 2021 நவம்பர் 21 , பி.ப. 01:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
புண்ணாகியிருக்கும் மனங்களை கீறிக்கீறி பார்க்கக்கூடாது
ஒரு சமூகத்தின் மீதான சந்தேகப் பார்வை களையப்படாதவிடத்து, அச்சமூகத்தை சதாகாலமும் எதிரியாகவே பார்க்கவேண்டிய நிலைமை ஏற்படும். இது, பல்லினங்கள் வாழும் ஒரு நாட்டில், வேண்டாத வெறுப்புகளையும் இனங்களுக்கு இடையிலான விரிசல்களையும் ஏற்படுத்தும்.
புண்பட்ட மனங்களை, யுத்தகாலம் யுத்தத்துக்குப் பின்னரான காலமென இரண்டாக வகைப்படுத்தி பார்க்கலாம், யுத்தகாலத்தில் நாடளாவிய ரீதியில் பேரச்சம் ஏற்பட்டிருந்தது. வீட்டிலிருந்து வெளியேறிய ஒருவர், வீட்டுக்குத் திரும்புவதே சந்தேகமாக இருந்தது.
யுத்தம் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னர், தென்னிலங்கையைப் பொறுத்தவரையில் அவ்வாறான அச்ச நிலைமையொன்று, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் இடம்பெறும் வரையிலும் இருக்கவில்லை; பின்னர் களையப்பட்டுள்ளது.
ஆனால், தென்னிலங்கைக்கு வெளியே, குறிப்பாக வடக்கு, கிழக்கு பிரதேசங்களில், இந்த அச்சம் இன்னுமின்னுமே இருக்கிறது. அல்லது வேண்டுமென்றே அச்சத்துக்கு உள்ளாக்கப்படுவதை நினைக்கையில் வேதனையளிக்கிறது.
தமது உரிமைகளை வென்றெடுப்பதற்காக, அரசாங்கத்துக்கு எதிராக ஆயுதம் ஏந்திய ஒரேயொரு குழு, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மட்டுமேயாகுமென நினைக்கக்கூடாது. தென்னிலங்கையைப் பொறுத்தமட்டில், ஜே.வி.பி யுகமும் இருந்தது.
அவ்வமைப்பில் அங்கம் வகித்தவர்கள் ஆயுதங்களைக் கைவிட்டு, ஜனநாயக நீரோட்டத்தில் இணைத்து, மக்கள் பிரதிநிதிகளாகவும் இருக்கிறனர். அவ்வமைப்பில் உயிர்நீத்தவர்கள் ‘கார்த்திகை வீரர்கள்’ என நினைவுகூரப்படுகின்றனர். அதற்கு எவ்விதமான கட்டுப்பாடுகளையோ, இடையூறுகளையோ அரசாங்கம் ஏற்படுத்துவதில்லை.
ஆனால், தங்களுடைய குடும்ப உறுப்பினர்களை நினைவுகூர்வதற்கான மாதத்தில் மட்டும், வடக்கு, கிழக்கைச் சேர்ந்த மக்கள் சொல்லொண்ணாத் துன்பங்களை அனுபவிக்க வேண்டியவர்களாக இன்னுமே இருக்கின்றனர்.
பயங்கரவாதிகளை நினைகூர்வதன் ஊடாக, அவ்வமைப்பின் சிந்தனை மீண்டும் விதைக்கப்படுகின்றது என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. ஆனால், உறவினர்களை நினைவுகூர்வதற்கு வேண்டுமென்றே தடைகளை ஏற்படுத்துவதை ஏற்றுக்கொள்ளமுடியாது.
நல்லநேரம், கார்த்திகை விளக்கீடு நேற்று (18) குறிப்பிடப்பட்டிருந்தது. அதனால், தமிழர்கள் அதனை அனுஷ்டிக்கக்கூடியதாய் இருந்தது. இதுவே, மாவீரர் வாரத்துக்குள் வந்திருக்குமாயின், ஒட்டுமொத்த தமிழர்களும் கார்த்திகை விளக்கீட்டில் விளக்குகள் ஏற்றமுடியாத நெருக்கடியான நிலைமைக்கு முகங்கொடுத்திருக்கக்கூடும். அவ்வாறான நெருக்கடிகளை கடந்தகாலங்களில் கண்ணுற்றோம்.
யுத்தத்துக்குப் பின்னர், வடக்கு, கிழக்கைக் சேர்ந்த மக்கள், ஒவ்வொரு கார்த்திகை மாதங்களிலும் கண்காணிக்கப்படுகின்றனர். வீடு,வீடாகச் செல்கின்ற படையினரும் புலனாய்வுத் துறையினரும் தரவுகளைத் திரட்டிவருகின்றனர். இது புண்பட்டிருக்கும் மனங்களை வேண்டுமென்றே கீறும் செயற்பாடாகும்.
காயங்கள் ஆறாமல், புண்பட்டிக்கும் நிலையில், அம்மனங்களை மீண்டும், மீண்டும் வேண்டுமென்றே கீறிபார்க்கும் செயல்கள் கைவிடப்படவேண்டும். இல்லையேல், இனங்களுக்கு இடையிலான விரிசல்கள் இன்னுமின்னும் அகலமாய்விடும். அத்துடன், புண்களை ஆற்றுவதற்கான மருந்துகள் கிடைக்காமலேபோய்விடும். (20.11.2021)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago