2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

பாதாள உலகத்தை உண்மையிலேயே அடக்க முடியாதா?

R.Tharaniya   / 2025 ஏப்ரல் 24 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

நமது நாட்டில் பாதாள உலகம் சிறிது காலம் அமைதியாக இருந்தபோதிலும், அன்றாட இடம்பெறும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களை பார்க்குமிடத்து, மீண்டும் மிகவேகமாக தலைதூக்கியுள்ளதை அவதானிக்க முடிக்கின்றது.

ஒவ்வொரு நாளும், நாட்டின் எங்காவது ஓரிடத்தில் துப்பாக்கிச் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கின்றது.பல்வேறு பகுதிகளில் துப்பாக்கிகள் கைப்பற்றப்படுகின்றன.

எனினும், ஒவ்வொரு நாளும் கொலைகளும் இடம்பெறுகின்றன. சிலர் பலியாகி விடுகின்றனர். இன்னும் சிலர் படுகாயங்களுடன் உயிருக்குப் போராடி வருகின்றனர். ஒருசிலர் புத்தி சாதுரியத்தால் தப்பித்துக்கொள்கின்றனர். அந்தளவுக்கு பாதல உலகம் ஆடத்தொடங்கி விட்டது.

பாதாள உலகம் என்பது தனிமையில் வளரும் ஒரு குழு அல்ல. அரசியல் மோசடி செய்பவர்களும், பாதாள உலகத்தின் வளர்ச்சிக்கு உணவளிக்கும் சில பொலிஸ் அதிகாரிகளும் இந்த நிலைமைக்குக் காரணமானவர்கள் என்பது, பாராளுமன்றத்தில் கடந்த காலங்களில் சிலர் ஆற்றிய உரைகளின் சாரம்சத்தில் இருந்து புலனாகிறது.

நம் நாட்டில் சட்டவிரோதத் துப்பாக்கிக் கடைகளின் உரிமையாளர்கள் பாதாள உலகத்தைச் சேர்ந்தவர்கள். எனவே, நாட்டில் எங்கும் ஒரு கொலை நடந்தால், அதில் பாதாள உலகம் சம்பந்தப்பட்ட பல வழக்குகள் உள்ளன. வழக்குகளுக்கு அழைத்துவரப்படுபவர்கள், நீதிமன்ற அறைக்குள் வைத்தும் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஒட்டுமொத்தமாக, நமது நாட்டில் நிகழும் குற்ற அலையையும், பாதாள உலக நடவடிக்கைகளையும் தடுக்கும் பொறுப்பிலிருந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தப்பிக்க முடியாது. பாதுகாப்புப் படையினர், குறிப்பாக, பாதாள உலகத்தை அழிப்பதை நோக்கமாகக் கொண்ட திட்டங்களையும்  செயல்படுத்தத் தயங்கக்கூடாது.

பாதாள உலக நபர்களால் மறைத்து வைக்கப்பட்ட துப்பாக்கிகளைக் காட்ட அவர்களை அழைத்துச் செல்வதில் எந்தத் தவறும் இல்லை. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், பாதாள உலகம் ஆக்ரோஷமாக மாறினால், தகுந்த நடவடிக்கை எடுப்பது பாதுகாப்புப் படைகளின் பொறுப்பாகும்.

சட்டவிரோதத் துப்பாக்கிகள் மற்றும் பிற சமூக விரோத செயல்களிலிருந்து கிடைக்கும் லாபத்தில் பாதாள உலகம் செழித்து வளர்கிறது. போதைப்பொருள் கடத்தல் மற்றும் விநியோக வலையமைப்பின் பின்னணியில் உள்ள மூளையாகப் பாதாள உலகம் உள்ளது.

நாட்டில் போதைப்பொருள் கடத்தலை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு நடவடிக்கையை ஒரே நேரத்தில் தொடங்குவதும், அதே நேரத்தில் பாதாள உலகத்தைத் தோற்கடிப்பதும் மிகவும் பொருத்தமானதாக இருக்கும்.

போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் விற்பனையிலிருந்து கிடைக்கும் பில்லியன் கணக்கான டாலர்களால், பாதாள உலகம் தூண்டப்படுகிறது, அதை 
வழிநடத்தும் சக்திகள் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்கின்றன. பாதாள உலகத்திற்கும் போதைப்பொருள் வர்த்தகத்திற்கும் இடையிலான இந்த நெருங்கிய தொடர்பை அழிக்காமல் ஒரு சிறந்த நாட்டை நாம் எதிர்பார்க்க 
முடியாது.

பாதாள உலகத்தை அடக்க வேண்டும் என்று நாங்கள் மட்டுமல்ல, பல தரப்பினரும் சிறிது காலமாக குரல் எழுப்பி வரும் விஷயம். சத்தம் இன்னும் நிற்கவில்லை. இந்தப் பாதாள உலகத்தை உண்மையிலேயே அடக்க முடியாதா? அதைச் செய்ய முடியும் என்பது எங்கள் நம்பிக்கையாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .