Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2021 ஒக்டோபர் 12 , மு.ப. 12:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிவாரணம் தருவதாகக் கூறி, நிர்வாணமாக்கும் பேரவலம்
துண்டுவிழும் தொகையென்பது வரவுக்கு மிஞ்சிய செலவாகும். ஒவ்வொரு குடும்பத்திலும் துண்டுவிழும் தொகை, நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதைச் சமாளிப்பதற்கு பல வழிகளிலும் ‘குத்துக்கரணம்’ அடிக்க வேண்டிய நிலைமையே ஏற்பட்டுள்ளது.
பால்மா, சமையல் எரிவாயு (கேஸ்), கோதுமை மா, சீமெந்து ஆகியவற்றின் விலைகள் சடுதியாக அதிகரிக்கப்பட்டுள்ளமையால், அன்றாடம் கூலிவேலை செய்பவர்கள் மட்டுமன்றி, மாதச் சம்பளத்தில் ஜீவியம் நடத்துவோரும் திண்டாடிக்கொண்டிருக்கின்றனர்.
மேலே கூறப்பட்டுள்ள பொருட்களில் சீமெந்தைத் தவிர, ஏனைய பொருட்களின் விலை அதிகரிப்பால், மூவேளை உணவையும் வீட்டுக்கு வெளியே சாப்பிடுவோரின் நாளொன்றுக்கான செலவு பன்மடங்கில் அதிகரித்துள்ளது.
அதேபோல, பொருட்களின் தரமும் குறைந்துகொண்டே செல்கின்றது. ஒருவேளை உணவாக பால் தேநீரைப் பருகி, பசியாற்றிக்கொண்டவர்கள், வெறும் வயிற்றில் வரண்டு கிடக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலைமையே ஏற்பட்டுள்ளது. அவ்வாறு இருக்கும் ஒருவரால், சாதாரண வேலைக்குக் கூட செல்லமுடியாத நிலைமையே ஏற்படும்.
முடக்கத்திலிருந்து வெளியே வந்துவிட்டோம். தொற்றுநோயால் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சிலர் வேலையை இழந்துள்ளனர். இன்னும் சிலரின் கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டுள்ளன. அன்றாட வருமானத்துக்கே 24 மணிநேரமும் உழைக்கவேண்டியிருக்கிறது. இந்நிலையில், அதிகரிக்கப்பட்ட விலைகளால் ஏற்பட்டிருக்கும் இந்தப் புதிய சவாலில் இருந்து தப்பிக்க வழிதேட வேண்டும்.
மக்களைப் பட்டிணியில் துவள விட்டுவிட்டு, ஆட்சியில் குளிர்காயலாம் என நினைப்பதே முட்டாள்தனம். தீர்மானங்களை அமைச்சரவை எடுக்கவில்லை; வர்த்தகர்களே எடுக்கின்றனர். அதற்குக் கடிவாளம் போடுவதற்கு, அரசாங்கத்திடம் எவ்விதமான மாற்று வழிகளும் இல்லையென்பதையே விலை அதிகரிப்புகள் உணர்ந்தி நிற்கின்றன.
ஒரேயடியாகச் சுமத்தப்பட்டுள்ள சுமையைத் தாங்கிக்கொள்ள முடியாமல் பலரும் தடுமாறுகின்றனர். வாடகைக்கு குடியிருப்போரின் நிலைமையை நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை. கேஸ் விலை அதிகரிப்பை அடுத்து, மாற்றீடாக விறகு அடுப்பைப் பயன்படுத்தலாம். அது, கிராமங்கள், தோட்டங்களில் சாத்தியப்படும். பெரும் நகரங்கள், அதனோடு இணைந்த பிரதேசங்களில் சாத்தியப்படாது. தேர்தல் காலங்களில் வாய்கிழிய நிவாரணங்கள் அள்ளிவீசியவர்கள், ஆட்சிப்பீடமேறியதன் பின்னர், மக்களை நிர்வாணமாக்கும் பேரவலத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றனர். அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை அதிகரிப்பதன் ஊடாகவே, பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியும் என்றால், அத்தீர்மானத்தை எடுப்பதற்கு அரசாங்கமும் அமைச்சரவையும் தேவையே இல்லை.
பொருள்களின் விலைகள் தலைக்குமேல் அதிகரித்துவிட்டால், சாதாரண குடும்பமொன்றின் தலைவன், செலவுகளைக் கட்டுப்படுத்துவான்; அல்லது, வீணான செலவுகளை தவிர்த்துக்கொள்வான். கால்நடையாகவே வீட்டுக்குச் சென்றுவிடுவான். அது, அந்த குடும்பத்தலைவனால் செலவுகளைக் குறைப்பதற்காக எடுக்கக்கூடிய ஆகக்கூடிய தீர்மானங்களில் ஒன்றாகும்.
அதேபோன்றதொரு தீர்மானத்தையே இந்த அரசாங்கமும் எடுக்கிறது. நிலைமை கட்டுக்கடங்காது சென்றுவிடுமாயின், தங்கள் மானத்தைக் காப்பாற்றிக்கொள்வதற்காக, அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்துவிடுவர் என்பது மட்டுமே உண்மையாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
4 hours ago
5 hours ago