2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

நான்காவது தூணை பலப்படுத்துவது அவசியம்

Editorial   / 2023 மே 07 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனநாயகத்தின் நான்காவது தூணை பலப்படுத்துவது அவசியம்

தனக்கு மேலிருக்கும் நிறைவேற்று, சட்டவாக்கம் மற்றும் நீதித்துறை ஆகிய மூன்று தூண்களின் செயற்பாடுகளையும் கழுகுக் கண்கொண்டு பார்த்து, மக்களுக்கு அறிவித்து, அரசாங்கத்தின் தவறான செயற்பாடுகளை விமர்சித்து, நேரடியான உறவுப்பாலமாய் இருப்பதுதான் ஊடகமாகும். இதைத்தான் ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்பர்.

உலகநாடுகளின் வரலாற்று நிகழ்வுகளைப் பொறுத்தவரையில், ஊடக சுதந்திரம் கேள்விக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. யுத்தம் இடம்பெறும் நாடுகளிலும், அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் வலுக்கும் நாடுகளிலும் ஊடகச் சுதந்திரத்தை எதிர்ப்பார்ப்பது கடினமாகும்.

அரசியல் நெருக்கடி தொடருமாயின் அங்கு ஊடக சுதந்திரம் பாதிக்கப்படும் என்பது மட்டுமே உண்மை.

உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு, பத்திரிகை மற்றும் ஊடகத்தின் பயன்பாடு என்பது அளவிடற்கரியது. உலக மக்களை இணைக்கின்ற மிகப் பெரிய பாலமாக பத்திரிகை மற்றும் ஊடகம் விளங்குகின்றன என்பது   தனிச்சிறப்பு. இந்நிலையில், உலக பத்திரிகை சுதந்திர தினம், மே மூன்றாம் திகதி திகதி அனுஷ்டிக்கப்படுகின்றது. 

கொலம்பியப் பத்திரிகையாளர் கிலெர்மோ கானோ இசாசா, 1986   டிசெம்பர் 17 இல் அவரது அலுவலகம் முன்பாக வைத்துப் படுகொலை செய்யப்பட்டார்.  அவரின் கொலையின் பின்னரே பத்திரிகை சுதந்திரம் தொடர்பான பேச்சு, உலகம் முழுவதும் வலுப்பெற்றது. 

 உலக பத்திரிகையாளர்களின் தொடர் முன்னெடுப்புகள் காரணமாக, 1993இல் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் ஏற்று கொள்ளப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், ஒவ்வோர் ஆண்டும் மே மாதம் மூன்றாம் திகதி பத்திரிகை சுதந்திர நாள் முன்னெடுக்கப்படுகிறது.

நமது நாட்டைப் பொறுத்தவரையில், யுத்த காலத்திலும் அதற்கு முன்னரும் பின்னரும் பல ஊடகவியலாளர்கள் கடத்தி கொல்லப்பட்டனர்; தாக்கப்பட்டனர்; காணாமலாக்கப்பட்டனர். அவர்களுக்கு எவ்விதமான நீதியும் இன்னும் கிடைக்கவில்லை.

எனினும், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ், ஊடகவியலாளர்களை விசாரணைக்கு அழைப்பது, இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருகின்றது.

இந்நிலையில், ஊடகத்துறையின் பிரதானிகள், பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்கள் ஆகியோரை கொழும்பில் மே மூன்றாம் திகதி சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான குழுவினர், அரசாங்கம் தயாரிக்கும் ஒலிபரப்பு அதிகார சபைச் சட்டமூலம், ஊடகங்களை கட்டுப்படுத்தவே தயாராகின்றது. ஊடக சுதந்திரத்துக்கான மரண அடியை எதிர்ப்பது பற்றி, தம்மிடத்தில் பொதுவான கருத்து உள்ளது என்றனர்.

 பயங்கரவாத தடைச் சட்டத்துக்குப் பதிலாக, புதிய பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை உருவாக்குவதன் மூலம், 220 இலட்சம் மக்களையும் பயங்கரவாதிகளாகப் புரிந்துகொள்ளும் ஜனநாயக விரோத ஆணையை எதிர்ப்பது பற்றிய, பொதுவான புரிதலும் எங்களுக்கு உள்ளது என்றனர்.

ஒவ்வோர் அரசாங்கமும்  ஊடக சுதந்திரத்தை மீறும் வகையில் சட்டங்களை தயாரிக்கும். ஆகையால், ஜனநாயகத்தின் நான்காவது தூணை பலப்படுத்தி, பாதுகாப்பது அவசியமாகும்.

அத்துடன், நமது நாட்டில் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதியை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென வலியுறுத்துகின்றோம்.

05.04.2023


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X