Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 18, வெள்ளிக்கிழமை
Editorial / 2020 நவம்பர் 18 , பி.ப. 12:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
துயர் பகிர்தலில் தவறில்லை எனில், கசப்பது ஏன்?
ஒவ்வொருவரினதும் சுயவிருப்பதையும் பலவந்தத்தையும் வேறுபடுத்திப் பார்த்தோமெனில், தெட்டத்தெளிவு ஏற்பட்டுவிடும். ‘நினைவுகூரல்’ வடக்கு, கிழக்கில் இடம்பெறுகிறது. தென்னிலங்கையில் ‘நினைவுகூரச் செய்யப்படுகிறது’. இவ்விரு வசனங்களும் வௌிப்படுத்தும் அர்த்தங்கள் வேறுவேறானவை ஆகும்.
2009க்கு முற்பட்ட காலங்களில், நவம்பர் செய்தியை உலகமே எதிர்பார்த்திருந்தது. தென்னிலங்கையும் ஏதோவொரு செய்திக்காக, காத்திருந்தது. அச்செய்தியை அடிப்படையாக வைத்தே, அடுத்தகட்ட நகர்வுகளுக்கான காய்கள் நகர்த்தப்பட்டன. அதுதான் கடந்தகால வரலாறு.
இவற்றுக்கெல்லாம் இடையில், நவம்பர் மாதங்களில் தீபாவளியும் கார்த்திகை தீபமும் வந்துவிடும். கார்த்திகை தீபத்திருநாள், நவம்பர் 26ஆம் திகதியன்று வந்துவிட்டதால், கோவில்களில் பூஜைவழிபாடுகள் செய்யக்கூடாதெனக் கடந்த காலத்தில் கட்டளையும் பிறப்பிக்கப்பட்டது. இதற்கிடையில், வந்துசென்ற தீபாவளிக்கான வாழ்த்துகளை வாசித்தால், இவர்களின் ஆட்சியாவெனச் சிந்திக்கவும் தோன்றுகிறது. ‘அஞ்ஞான இருளகற்றி அறிவொளி பரப்பும்’ என, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் ‘அருட்தீபம் துணை நின்றால் வாழ்வு சுபீட்சமாகும்’ எனப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் தீபாவளிக்கு வாழ்த்துரைத்து உள்ளனர்.
ஆனால், துயிலும் இல்லங்களில் மீளாத்துயிலில் இருக்கும் தத்தமது உறவுகளுக்கு, விளக்கேறி நினைவுகூர்வதற்கான முன்னேற்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்கப்படுகின்றன. விளக்கேற்றி நினைவு கூர்ந்துவிட்டால், துயிலும் இல்லங்களில் இருப்போர், துப்பாக்கிகளைத் தூக்கி, இராணுவத்துக்கு எதிராகப் போராடிவிடுவர்களா?
ஆனால், இலங்கை அரசாங்கம் கூறுவதைப்போல, யுத்தத்தில் எதிரிகள் மட்டுமே மரணிக்கவில்லை. சாதாரண மக்களும் செத்து மடிந்துள்ளனர். அவர்களையேனும் நினைவுகூர்வதற்கு அனுமதிக்கவேண்டும். தடைகளைப் போட்டு, வெறுப்பைச் சம்பாதித்துக் கொள்ளாது, கட்டுப்பாடுகளுடன் அனுமதியளித்துவிட்டு மௌனம் காக்கலாம். எதைச்செய்தாலும் ஊடகங்களுக்கு அது தீனிபோட்டுவிடும்.
நினைவுகூரலுக்கான முன்னேற்பாடாக, துயிலும் இல்லங்கள் துப்புரவுச் செய்யப்படும் போதெல்லாம், ஏதோவொரு வகையில் இடையூறுகள் செய்யப்படுகின்றன. இது அரசாங்கங்களுக்கு இடையில் வேறுபடுவதுதான் புரியாத புதிராக இருக்கிறது.
யாழ்ப்பாணம், கிளிநொச்சியில் நேற்றும்கூட இடையூறுகள் விளைவிக்கப்பட்டுள்ளன; புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அச்சுறுத்தும் வகையில் புலனாய்வாளர்களும் நடந்துகொண்டுள்ளனர். இவையெல்லாம் ‘நல்லிணக்கம்’ என்பதை உதட்டோடு நிறுத்திவிடும். ஆட்சி மாற்றத்தின் பின்னர், துயிலும் இல்லங்கள் துப்புரவு செய்வதுகூட, பயங்கரமாகவே பார்க்கப்படுகின்றது. ஆனால், இரண்டு ஆட்சிகளின் போதெல்லாம் ஒரேகூரையின் கீழேதான் ‘புலனாய்வு’ இருக்கிறது.
மரணித்த தங்களுடைய உறவினர்களை, ஒவ்வொருவரும் வருடாவருடம் நினைவுகூர்வர், யுத்தத்தில் உயிரிழந்த படையிருக்கான தேசிய நினைவுகூரல், மே 19ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது. இலங்கையில் மரணித்த இந்திய இராணுவத்தினரும் மறக்கப்படுவதில்லை. கார்த்திகை வீரர்களும் நினைவு கூரப்படுகின்றனர். நினைவுகூரலை அரசியலாக்கி, அதனூடாகக் குளிர்காய்வதற்கு இடமளிக்காது இருந்தால், ஓரளவுக்கேனும் மனங்களில் மாற்றம் வருமென்பதே எமது நப்பாசையாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago