Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை
A.Kanagaraj / 2020 ஒக்டோபர் 31 , மு.ப. 10:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
தவறிழைக்கும் தலைமைகளை மேய்ந்த ‘சில்வண்டு’கள்
தன்னுடைய அணியை, கட்டுக்கோப்புக்குள் வைத்துக்கொள்ள முடியாத தலைவனின் தலைமைத்துவ பண்புகளைக் கேள்விக்கு உட்படுத்தப்படுவது இயல்பு. அரசியலில், ‘தலைமைத்துவம்’ சற்று வித்தியாசமானதாகவே இருக்கும்.
சர்வாதிகாரியாகவும் இல்லாமல், ஆகக்கூடுதலான விட்டுக்கொடுப்பும் இல்லாமல், சகலரையும் அரவணைத்து, காய்களை நகர்த்தும் தலைவனே, அரசியல் சாணக்கியன். இல்லையேல், கட்சியே சுக்குநூறாகி விடும்.
அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் எதிரணியிலிருக்கும் மூவினங்களையும் சேர்ந்த எண்மரின் ஆதரவுடன் மூன்றிலிரண்டு பெரும்பான்மையில் நிறைவேற்றப்பட்டது. அதுவே, அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியது.
ஹக்கீம், ரிஷாட்டின் அணிகளைச் சேர்ந்த அறுவரும் இராதாகிருஷ்ணனின் அணியில் அரவிந்தகுமாரும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதித் செயலாளர் டயனா கமகேவுமே, 20க்கு உறுதுணையாய் நின்றனர்.
இதில் வேடிக்கை என்னவெனில், ஐக்கிய மக்கள் சக்தியின் பங்காளிகளான ஹக்கீம், ரிஷாட் இருவரும் அதிலிருந்து விலக்கப்பட்டனர். கட்சி உறுப்பினர்கள் குற்றமிழைத்துவிட்டனர் என்பதற்காக, கட்சிகளின் தலைமைத்துவங்களைத் தண்டிப்பது, எவ்வகையில் நியாயம்.
பங்காளிகளின் தலைமைகளைத்தான் தண்டிக்க வேண்டுமெனில், இராதாகிருஷ்ணனை ஏன் தண்டிக்கவில்லை? சஜித் பிரேமதாஸ, தன்னைத்தானே ஏன் தண்டித்துக்கொள்வில்லை. இங்குதான், சிங்கள-பௌத்த மேலாதிக்கத்தின் துரும்புச்சீட்டுக்குள், பங்காளிகள் விழுந்துவிட்டனர்.
முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பிரிவினைவாதிகளெனத் தென்னிலங்கை சித்திரிக்கும் நிலையில், முஸ்லிம்களின் ஆதரவுடனேயே, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அரசாங்கம் இயங்கிக்கொண்டிருக்கிறது என்ற பிரசாரத்தை முன்னெடுப்பதற்காக, சஜித் பிரேமதாஸ இவ்வாறு செய்திருக்கக்கூடும்.
‘கழற்றிவிடும் அரசியல்’ என்பது புதிதல்ல. ஆகையால், ஆதரவளித்த மூவினங்களைச் சேர்ந்த எட்டு எம்.பிக்களையும் அரசாங்கத்துக்குள் உள்ளீர்க்காது, வெளியிலிருந்து ஆதரவைப் பெற்றுக்கொண்டு, அவ்வாறானவர்களைக் கைகழுவிவிடவும் கூடும். ஏனெனில். ‘அரசியல் இருப்பு’ மிகமுக்கியம்.
நிறைவேற்றதிகாரம் கொண்ட முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்தன கூட, கட்சி உறுப்பினர்களை இறுகப்பிடித்து வைத்துக்கொள்வதற்காக, தனது கட்சியைச் சேர்ந்தவர்களிடம், திகதி குறிக்கப்படாத இராஜினாமாக் கடிதத்தைப் பெற்றிருந்தார்.
ஆனால், கூட்டணிக்குள் அரசியல் பங்காளிகள் இருக்கிறமையால், அவ்வாறானதொரு சர்வாதிகாரமான போக்கு, எமது அரசியலில் ஒருபோதும் சாத்தியப்படாது. ஆனாலும், பங்காளிகளின் தலைவர்கள், மாற்று முறைமையைக் கையாண்டால், ‘அரசியல் தலைமைத்துவம்’ என்பதற்கு, இன்னுமின்னும் அர்த்தம் கற்பிப்பதாய் அமையும்.
சில்வண்டுகள், 17 வருடகாலம் வாழ்ந்தாலும், ஏழு நாள்களுக்கு மட்டுமே, பூமிக்கு வெளியில் தலையைக் காண்பித்து வாழ்கின்றன. அதேபோலவே, தலைமைத்துவங்களின் அதீத நம்பிக்கை, அரசியல் தவறுகளால், உறுப்பினர்கள்கூட ஏறி மிதித்துவிட்டுச் செல்லும் நிலைமை ஏற்படலாம்.
அற்பசொற்ப ஆசைகளுக்காகப் பலரும் கைகளை உயர்த்தி ஆதரவளிக்கலாம்; எதிர்க்கலாம். இவர்களுக்கெல்லாம் புள்ளடியிடுவோரே பதிலளிக்கவேண்டும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
2 hours ago