Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை
Editorial / 2022 ஜனவரி 18 , மு.ப. 01:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேர்தல் ஒத்திவைப்பு: ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை இழப்பு
ஜனநாயக்கத்தின் மீது அதீத நம்பிக்கையை கொண்டிருக்கும் எந்தவோர் அரசாங்கமும் தேர்தல்களை ஒத்திவைக்காது. பதவிக்காலம் நிறைவடைந்ததன் பின்னர், உரிய திகதியில் தேர்தலை நடத்தும். இன்னும் சில அரசாங்கங்கள், தாங்களே வெற்றியீட்டுவோம் என உறுதியானால் மட்டுமே தேர்தல்களுக்கு திகதி குறிப்பர்.
பாராளுமன்றம், மாகாண சபை ஆகிய தேர்தல்களில் இவ்வாறு காய்களை நகர்த்தி, வெற்றிவாகை சூடிக்கொண்டு, அடுத்தடுத்த படிகளுக்குச் செல்வர். இதில், மக்களுடன் நேரடியான தொடர்புகளைக் கொண்டிருக்கும் உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சியைப் பிடித்துக்கொள்வதிலேயே பெரும் அக்கறையுடன் இருப்பர்.
எனினும், 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி 18 ஆம் திகதியன்று நியமிக்கப்பட்ட தற்போதைய உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம், இவ்வாண்டு பெப்ரவரி மாதம் 18ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது. எனினும், விசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக, அப்பதவிக்காலம் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது.
ஜனநாயகத்தின் மீது அதீத நம்பிக்கையை கொண்டிருக்கும் இவ்வரசாங்கம், தேர்தலை ஏன் ஒத்திவைத்தது என்பது தொடர்பில் மக்களிடத்தில் கடும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தேர்தலுக்குச் செல்வதற்கு இவ்வரசாங்கம் ஏன் அஞ்சுகின்றது என்பது தொடர்பில் மக்களிடத்தில் கேள்விகள் எழும்பியுள்ளன.
அதனால்தான் என்னவோ, தேர்தலுக்கான நாட்காட்டியை தயாரிக்கவேண்டுமென தேர்தல்கள் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடும் அமைப்புகள் அரசாங்கத்தை வலியுறுத்திக்கொண்டிருக்கின்றன. தேர்தல் நாட்காட்டியொன்று தயாரிக்கப்படுமாயின், ஜனநாயகத்தின் மீதும் மக்களின் மீதும் ஆட்சியிலிருக்கும் அரசாங்கம் கட்டாயம் கவனம் செலுத்திக்கொண்டே இருக்கும்.
தங்களுக்கு உகந்த காலத்தில் தேர்தலை நடத்துவதற்காக, காத்திருக்கவேண்டிய தேவை இருக்காது. அதேபோல, தவறான பாதையில் பயணிக்கும் ஆட்சிக்கு, தேர்தலின் மூலம் மக்கள் தக்க பதிலையும் வழங்குவர்.
மக்களிடத்தில் தங்களுக்கு இருக்கும் செல்வாக்கை, உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் ஊடாகவே அரசியல்கட்சி ஒன்று உரசிப்பார்க்க முடியும். அதில் கிடைக்கும் பெறுபேறுகளின் அடிப்படையில், மிகவேகமாக பாராளுமன்றம், மாகாண சபை ஆகிய தேர்தல்களில் காலடி எடுத்துவைக்கலாம் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.
இந்நிலையில்தான், கொரோனா வைரஸ் தொற்றைத் தடுத்தல், பெரும் முடக்க நிலைமையில் இருந்து நாடு மீண்டும் வழமை நிலைமைக்குத் திரும்பியிருக்கும் இன்றைய சூழ்நிலையில் அன்றாட கடமைகளை முடக்காமல் இருத்தல், பாடசாலைகள் உள்ளிட்ட ஏனைய கல்வி நடவடிக்கைகளை உரிய முறையில், இடையூறுகள் இன்றி நடத்திச் செல்லுதல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒரு வருடத்துக்குப் பிற்போடப்பட்டுள்ளது என அரசாங்கம் விளக்கம் கொடுத்துள்ளது.
இந்த விளக்கத்தில் ஓரளவுக்கு உண்மை இருக்கிறது என்றாலும், மக்களின் வாக்குரிமையை பயன்படுத்தி, ஜனநாயக உரிமையை நிலைநாட்டுவதற்கு, உரிய நேரத்தில் சந்தர்ப்பமளிக்க வேண்டும். அதனூடாகவே நாட்டில் ஜனநாயகம் கட்டிக்காக்கப்படுகின்றது என்பதை உறுதிப்படுத்தமுடியும்.
நேரடியான மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதன் ஊடாக, ஜனநாயக்கத்தின் மீதான நம்பிக்கை இழக்கப்பட்டுள்ளது என்பதை புரிந்துகொள்ளவேண்டும். (18.01.2022)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago