Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Editorial / 2021 ஜனவரி 08 , மு.ப. 09:21 - 0 - 151
சந்தேகத்தை விதைத்துவிட்ட ‘தற்கொலைத்தாரி’
ஓர் இயக்கம், ஓர் அமைப்பு கட்டுகோப்பாக இயங்க, செயற்றிறன்மிக்க ‘தலைமைத்துவம்’ பிரதான கதாபாத்திரமாகும். தலைமைத்துவத்தின் இலக்கு, தூரநோக்கு, செயற்பாடுகள் தெட்டத்தெளிவாக இருந்தால்மட்டுமே, எதிலும் வெற்றிகொள்ளமுடியும் என்பதைக் கடந்தகாலச் சம்பவங்கள் உணர்த்தி நிற்கின்றன.
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதலுக்குப் பின்னர், புலிகளின் தலைவர் பிரபாகரனும் போற்றுதலுக்கு உரியவரானார். ஜனாதிபதி மைத்திரிபாலவும் பிரபாகரனைப் போற்றிப் புகழ்ந்தார். எனினும், இறுதி யுத்தத்தில் நந்திக்கடாலில் பிரபாகரனின் சடலத்தைக் கண்டதன் பின்னர்தான் பலரும் இறுதி பெருமூச்சுவிட்டனர்.
புலிகளின் இரண்டாம் நிலைகளிலிருந்த செயற்பாட்டுத் தலைவர்கள், கருத்து முரண்பாடுகளால் அவ்வியக்கத்திலிருந்து பிரிந்ததன் பின்னரே, கட்டுக்கோப்பை இழந்த இயக்கம், தொடர் தோல்விகளைச் சந்தித்து, யுத்தரீதியில் இறுதியில் தோல்விகண்டது என்பதெல்லாம் யுத்தகள ஆய்வுகளிலிருந்து புலனானது. ஆனால், தலைவர் பிரபாகரன் இறுதியில்தான் இறந்தார் என்பது மட்டும் உறுதியானது.
முப்படைகளையும் கொண்டு, உலகையே ஆட்டிப்படைத்த, மிகப்பயங்கரமான இயக்கமென வர்ணிக்கப்பட்ட, பல நாடுகளிலும் தடைவிதிக்கப்பட்ட, தற்கொலைக் குண்டுதாரிகளை அறிமுகப்படுத்திய புலிகள் இயக்கம், பொருளாதார ரீதியில் கடும் இழப்புகளை ஏற்படுத்துவதாக இருந்தால் மட்டுமே தற்கொலைத்தாரிகளை அதுவும் மிகமுக்கியமான தருணங்களில், பயன்படுத்தியுள்ளது. தாக்குதல்களில் ‘மனிதாபிமான’ இழப்பு, பூச்சியமாக இருந்ததில்லை என்பது உண்மையே.
ஆனால், உயிர்த்த ஞாயிறன்றும், அதற்குப் பின்னரான சம்பவங்களின் போதும் பல தற்கொலைத்தாரிகள் பலியாகினர். தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பைச் சேர்ந்தோர் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஆயுதங்கள் மீட்கப்படுகின்றன. பாதுகாப்புகள் பல்லடுக்குகளில் பலப்படுத்தப்பட்டுள்ளன.
ஓர் இயக்கத்தின் தற்கொலைத்தாரியை, அவ்வியக்கத்தைச் சேர்ந்த மிகமுக்கியமானவர்களைத் தவிர, வேறு எவராலும் அச்சொட்டாக அடையாளம் காட்டமுடியாது. ஆனால், தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் சஹ்ரான், தற்கொலைத்தாக்குதல் நடத்தியுள்ளார் எனச் செய்திகள் வெளியாகின.
இவ்விடத்தில்தான், “ஓர் இயக்கத்தின் தலைவர் முதலில் தற்கொலைத்தாக்குதல் நடத்தியிருக்க வாய்ப்பில்லை” என அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியிருப்பதை மிக ஆழமாக, கவனமாக, தூரநோக்கத்துடன் பார்க்கவேண்டும். அதாவது, முதன்முதலின் தலைவரே களமிறங்கி மரணித்துவிட்டால், அவ்வியக்கம் சின்னாபின்னமாகிவிடும் என்பதுதான் யதார்த்தமாகும்.
ஆகையால், தற்கொலைத்தாக்குதல் நடத்திய இயக்கத்தின் தலைவரே மரணித்துவிட்டார் என வாய்ச்சவடாலாக இருந்துவிடாமல், சமூக வலைத்தளங்களின் ஊடாக, போலியான பிரசாரங்களை மேற்கொண்டும் ஒருவர் மற்றொருவரைக் குறைகண்டும் இருக்காமல், தேசியப் பாதுகாப்பு தொடர்பில் சகலரும் கரிசனை காட்டினால் மட்டுமே, அச்சமின்றி நிம்மதிப் பெருமூச்சை விட்டு வாழமுடியும். (02.05.2019)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
9 hours ago
9 hours ago