தேசியப் பாதுகாப்பு என்பது ஒரு நாட்டின் இரகசியங்களையும் அதன் குடிமக்களையும் விரோதக் குழுக்களின் தாக்குதல்கள் போன்ற அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாப்பதாகும்.
ஐக்கிய நாடுகள் சபையின் தேசியப் பாதுகாப்பு அணுகுமுறையின்படி, தேசியப் பாதுகாப்பு என்பது மனித உரிமைகள் மற்றும் சர்வதேச சட்டத்தின் பாதுகாப்பு, மற்றும் வெளி மற்றும் உள் அச்சுறுத்தல்களில் இருந்து அரசின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் நல்வாழ்வைப் பாதுகாப்பதாகும்.
இதையெல்லாம் கருத்தில் கொண்டால், கனேமுல்ல சஞ்சீவவின் கொலை நாட்டின் தேசியப் பாதுகாப்பில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களில் கொலையாளிகள், திட்டமிட்டவர்கள் மற்றும் பிற சந்தேக நபர்களும் அடங்குவர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் கொலைகள் அனைத்தும் தனிப்பட்ட தகராறுகள், போதைப்பொருள் அல்லது பிற காரணங்களால் ஏற்படுகின்றன, மேலும் இந்த சம்பவங்கள் நாட்டின் தேசியப் பாதுகாப்பை எந்த அளவுக்குப் பாதிக்கிறது என்பதே கேள்வியாகும்.
திடீரென குற்றங்கள் அதிகரித்ததற்குப் பின்னால் ஏதேனும் ஒழுங்கமைக்கப்பட்ட அரசியல் நோக்கம் உள்ளதா? என்ற சந்தேகத்தைப் பாதுகாப்புப் படையினர் எழுப்பியுள்ளனர். இந்த விவகாரம் குறித்து ஏற்கனவே விசாரணை நடைபெற்று வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது
குற்றங்கள் இரண்டு வகைப்படும். ஒன்று, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம். மற்றொன்று, தனி நபர்களிடையே தனிப்பட்ட மட்டத்தில் செய்யப்படும் குற்றங்கள்.
தனி நபர்களுக்கிடையேயான குற்றங்களைத் தடுக்க, ஒவ்வொரு நபருக்கும் பின்னால் ஒரு பொலிஸ் அதிகாரியை நிறுத்துவது சாத்தியமில்லை. ஒட்டுமொத்தமாக ஒரு நாகரிக, ஒழுக்கமான சமூகத்தை உருவாக்குவதன் மூலம் இந்தக் குற்றங்களை ஒழிக்க முடியும். சமூகத்தில் மதிப்புகளையும் நல்ல குணங்களையும் வளர்ப்பதன் மூலம். இந்தப் பணியை நிறைவேற்றவே பாடசாலைகளும் மதத் தலங்கள் உள்ளன.
இருப்பினும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களின் நிலைமை முற்றிலும் வேறுபட்டது. அவற்றின் இருப்பு ஒரு சமூகத்தின் வீழ்ச்சியின் அறிகுறி மட்டுமல்ல, சமூகத்தில் அச்சத்தையும் ஏற்படுத்துகிறது. விழிப்புடன் இருப்பது, விசாரணை செய்தல், சோதனை செய்தல், குற்றவாளிகளைக் கைது செய்தல் மற்றும் அவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்துதல் ஆகியவற்றின் மூலம் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை அடக்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
இலங்கையில் 51 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களையும் அவற்றுடன் தொடர்புடைய 1,600 பேரையும் காவல்துறை ஏற்கனவே அடையாளம் கண்டுள்ளதாகப் பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள் இருப்பதாக பொலிஸாரே அறிவித்திருப்பது சற்று அவமானகரமானது
குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முப்படைகளின் தலைவர்களுடன் சமீபத்தில் ஒரு சிறப்புக் கலந்துரையாடலை நடத்தினார். இது ஒரு புத்திசாலித்தனமான முடிவு. ஆனால், சட்டத்திற்குள் தனி நபர்களை சிறையில் அடைப்பதன் மூலம் குற்றங்களை அடக்க முடியாது. அதற்காக, குற்றத்துடன் பின்னிப்பிணைந்த பிற காரணிகள் மற்றும் தனிநபர்களும் அதிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும். அரசாங்கத்தால் மட்டுமே அதைச் செய்ய முடியும் என்பதை வலியுறுத்துகின்றோம்.