2025 ஏப்ரல் 05, சனிக்கிழமை

குட்டி தேர்தலில் உங்கள் தெரிவு சரியானதாக இருக்க வேண்டும்

R.Tharaniya   / 2025 மார்ச் 05 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க, ஜனாதிபதி தேர்தலில் வென்றதன் பின்னர் நடத்திய பாராளுமன்றத் தேர்தலில், ஆளும் தேசிய மக்கள் சக்தி மூன்றிலிரண்டு பெரும்பான்மை வாக்குப் பலத்தால் வெற்றியீட்டி 159 உறுப்பினர்களை தனதாக்கிக் கொண்டது.
அதற்கு பின்னர் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான திருத்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது. இந்நிலையில்,  உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தேர்தல்கள் ஆணைக்குழு  
கோரியுள்ளது. 2025 மார்ச் 17 முதல் 2025 மார்ச் 20 வரை வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.
இந்தத் தேர்தலில், தேசிய மக்கள் சக்தி, எந்த ஒரு கட்சியுடனும் கூட்டுச் 
சேராது என்பது உறுதியாகும். 
ஏனைய கட்சிகள், தனியாகவும், கூட்டணி அமைத்தும் 
போட்டியிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. பாராளுமன்றத் தேர்தலில் பழைய கட்சிகள்  துடைத்தெறியப்பட்டுள்ளன என்பதால், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் களமிறங்குவது தொடர்பில், கட்சிகளுக்கு இடையில் கடுமையான பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்துள்ளன.
சிறுபான்மை கட்சிகளான தமிழ், முஸ்லிம் கட்சிகள், ஏதோவொரு வகையில், சில சபைகளுக்காக, பெரும்பான்மை கட்சிகளுடன் தொங்கியே பயணிக்க வேண்டும். தங்களுக்கு வெற்றி கிடைக்கும் என உறுதியாக நம்பும் சபைகளுக்காகத் தனித்து போட்டியிடக் கூடும்.
வேட்பு மனுக்களை மார்ச் 20ஆம் திகதி நண்பகல் 12 மணிக்கு முன்னர் தாக்கல் செய்ய வேண்டும். கட்டுப்பணம் ஏற்கும் நடவடிக்கை முதல் நாளான மார்ச் 19ஆம் திகதி நண்பகல் 12 மணிக்கு நிறைவடையும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளமையால், வியூகம் அமைக்கும் பரந்த கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படும்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டத்தின் பிரகாரம், எதிர்வரும்
 ஜூலை மாதம் 02ஆம் திகதிக்கு 
முன்னர் சகல சபைகளுக்கான நியமனங்களையும் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதால், 
 மே மாதம் முதல் வாரத்தில் உள்ளூராட்சித் தேர்தல்கள் நடத்தப்பட வாய்ப்புகள் அதிகமாகும். அதற்கான 
உத்தியோகபூர்வ அறிவிப்புகளைத் தேர்தல்கள் ஆணைக்குழு இன்னும் இரண்டொரு நாட்களுக்குள் விடுக்கும்.
2025ஆம் ஆண்டு, 336 உள்ளூராட்சி மன்றங்களுக்கு மட்டுமே தேர்தல் நடைபெறும். கல்முனை மாநகர சபை, தெஹியத்த கண்டிய பிரதேச சபை, மன்னார் பிரதேச சபை, பூநகரி 
பிரதேச சபை ஆகிய தொடர்பில் நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளமையால், தீர்ப்பு பின்னரே அவை தொடர்பில் இறுதித் தீர்மானம் எட்டப்படும். எல்பிட்டிய பிரதேச ​சபைத் தேர்தல் நடந்து முடிந்து விட்டது உங்களுக்குத் தெரியும்.
மேலே குறிப்பிட்ட ஐந்து சபைகளையும் தவிர்த்து 28 மாநகர சபைகள், 36 நகர சபைகள் மற்றும் 272 பிரதேச சபைகளுக்குத் தேர்தல் நடைபெறும். இந்த தேர்தல்களில், உங்களுக்கு நன்கு தெரிந்த, அந்தந்த பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே போட்டியிடுவார்கள். 
ஆகையால், வாக்காளர்களாகிய உங்களுடைய தெரிவு மிகச் ​சிறந்ததாக இருந்தால் மட்டுமே, பிரதேசங்களுக்குச் சேவைகள் கிடைக்கும் என்பதே 
எமது அவதானிப்பு.  

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X