2025 ஏப்ரல் 05, சனிக்கிழமை

குட்டித் தேர்தல் பிரசாரத்தில் சூடுபிடிக்கும் பிரிட்டனின் தடை

R.Tharaniya   / 2025 மார்ச் 26 , மு.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் போது, மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு  பொறுப்புக்கூற வேண்டியவர்களாகத் தெரிவித்து  நால்வருக்கு எதிராக பிரிட்டன், திங்கட்கிழமை (24) தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. 

 முன்னாள் பாதுகாப்புப் படைகளின் பிரதானியும் முன்னாள் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா, முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஒவ் த ஃப்லீட் வசந்த கரன்னாகொட, முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரிய, மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதிகளில் ஒருவரான கருணா அம்மான் என்றழைக்கப்படுகின்ற விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோருக்கே தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இந்த நால்வரும் ஐக்கிய இராச்சியத்திற்கான பயணங்களை மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், ஐக்கிய இராச்சியத்திற்குள் சொத்துக்களை சேகரித்து வைப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.  இந்த தடைக்கு எதிரான கருத்துகள் முன்வைக்கத் தொடங்கப்பட்டு விட்டன. மே. 6ஆம் திகதியன்று இடம்பெறும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரச்சாரங்களின் இந்த பிரிட்டனின் தடை சூடுபிடிக்கும். 

நாட்டை காக்கும் வீரர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ, “இது பயங்கரவாதத்தின் சார்பாக செயல்படும் பல்வேறு குழுக்களின் அழுத்தத்தின் விளைவாகும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் செப்டெம்பர் மாதம் நடைபெறவல்ல 60ஆவது கூட்டத்தொடரில் இலங்கையில் நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தலை மையப்படுத்திய புதிய பிரேரணையைப் பிரித்தானியத் தலைமையிலான அனுசரணை நாடுகளால் கொண்டுவரப்படவுள்ளதாகப் பிரித்தானிய வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் இந்தோ பசிபிக் பிராந்திய பணிப்பாளர் பென் ​மெல்லர் தெரிவித்திருந்த நிலையிலேயே இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
இதனிடையே, ஐ.நா. மனித உரிமை பேரவையில் இருந்து இலங்கை விலக வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தியுள்ளார்.

எனினும், ஐ.நாவில் தாம் முகங்கொடுக்கவேண்டிய விடயங்களுக்கான தயாரிப்புகளை, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்துவருவதாக அறியமுடிகின்றது.எவ்வாறெனினும், உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் பிரித்தானியாவின் தடை, ஐ.நா விவகாரம், பெரும் தாக்கத்தை செலுத்தாது என்றாலும், தேர்தல் பிரசார மேடைகளில் தொனிப்பொருளாக அமையும். இனவாதம் கக்கப்படும் என்பதில் ஐயமில்லை. ஏனெனில், நாட்டை காத்த வீரர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது என பிள்ளையார் சுழி போடப்பட்டுவிட்டது. 

பிரித்தானியாவின் தடையால், மேலே குறிப்பிட்ட நால்வரும் பிரித்தானியாவுக்கு செல்லமுடியாது அவ்வளவுதான். ஆனால், தங்களுடைய இனத்துக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதியையும், நிவாரணத்தையும் தேடிக்கொண்டிருக்கும் தமிழ்மக்கள், ஐ.நாவின் பிரேரணையின் ஊடாகவேணும் நீதிக்கிடைக்கும் என நம்பிக்கொண்டிருக்கின்றனர் என்பதே உண்மையாகும். 

2025.03.26


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X