2024 நவம்பர் 21, வியாழக்கிழமை

கருத்துக்கணிப்புகளின் முடிவுகள் உண்மையானவையா?

Editorial   / 2024 பெப்ரவரி 28 , பி.ப. 02:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

வழமையாக தேர்தல் நெருங்கும் காலப்பகுதியில், கள நிலவரங்களை மேலும் சூடுபிடிக்கச்
செய்வதற்காகவும், மக்கள் மத்தியில் ஒரு வித பேசு பொருளை ஏற்படுத்தச் செய்யும் வகையிலும் கருத்துக் கணிப்புகள் முன்னெடுக்கப்படுவது வழமை.

இவ்வாறு முன்னெடுக்கப்படும் கருத்துக்கணிப்புகளின் பிரகாரம் குறித்த போட்டியாளர் குறிப்பிட்ட சதவீத வாக்குகளுடன் முன்னிலையிலும், குறித்த இதர போட்டியாளர்
குறிப்பிட்ட சதவீத வாக்குகளையும் பெற்றிருப்பதாக ஊடகங்கள் செய்திகளை
வெளியிடுவது வழமை.

இவ்வாறான கருத்துக்கணிப்புகள் உண்மையில் எதற்காக முன்னெடுக்கப்படுகின்றன? ஏன் இதற்கான தேவை நிலவுகின்றது? இவை மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றவா எனப் பார்த்தால், உண்மையில் இவ்வாறான கருத்துக் கணிப்புகள் பெரும்பாலும் சுயாதீனமான தரப்புகளால் முன்னெடுக்கப்படுவதாகக் கூறப்பட்டாலும், அவற்றின் பின்னால் அரசியல் கட்சியின் ஆதிக்கம் பெரும்பாலும் இருக்கும்.

மக்கள் மத்தியில் தாம் ஆதரவளிக்கும் வேட்பாளருக்குக் காணப்படும் செல்வாக்கை மேலும் அதிகரிக்கச் செய்யும் நோக்கில் இவ்வாறான கருத்துக் கணிப்பு பெறுபேறுகளை வெளியிடுவது வழமை.

இவ்வாறான நடத்தை இலங்கையில் மாத்திரமன்றி, சர்வதேச ரீதியிலும் பல காலங்களாகத் தொடர்கின்றன.

இந்த கருத்துக் கணிப்புகளால் உண்மையில் பொதுமக்களின் தெரிவில் பெருமளவில் மாற்றம் ஏற்படுத்தப்படுவதில்லை. ஏனெனில், தாம் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் அவர்கள் பெரும்பாலும் தீர்மானத்துடனே இருப்பார்கள்.

இந்நிலையில், இவ்வாறான கருத்துக்கணிப்புகளின் முடிவுகள் வெளியாகி, அவற்றால் அவர்களின் தீர்மானங்களில் மாற்றத்தைத் தோற்றுவிக்காது.

ஆனாலும், வாக்கைப் பயன்படுத்தக்கூடாது அல்லது வாக்களிக்கச் செல்லக்கூடாது எனும்
சிந்தனையில் இருப்பவர்களை வாக்களிப்பு நிலையத்துக்குச் செல்வதற்குத் தூண்டும் ஒரு அம்சமாக இந்த கருத்துக் கணிப்பு முடிவுகள் அமைந்திருக்கும். ஏனெனில், இறுதி முடிவில் தமது வாக்கும் தாக்கம் செலுத்தும் எனும் ஒரு மனப்பான்மை அந்த வாக்காளரிடம் ஏற்படும்.

இதனால் தேர்தல் வாக்களிப்பு தினத்தன்று, வாக்களிப்பு நிலையத்துக்குச் சென்று தமது வாக்கை இடும் தேசிய கடமையை நிறைவேற்றும் மனநிலையைப் பெறுவார். இதன் காரணமாக இந்த கருத்துக் கணிப்பு ஒரு விதத்தில் முக்கியத்துவம் பெறுகின்றது.

இந்த கருத்துக்கணிப்புகளின் இறுதி முடிவுகள் உண்மையைப் பிரதிபலிக்காது என்பதற்கான கடந்த கால சிறந்த உதாரணங்களாக, 2016 ஆம் ஆண்டில் அமெரிக்கத் தேர்தல் முடிவுகள், இரு தசாப்த காலப்பகுதிக்கு முன்னர் இந்தியாவின் லோக் சபா தேர்தல் முடிவுகள், ஐக்கிய இராச்சியத்தின் பிரெக்சிட் தீர்மான முடிவுகள் போன்றன அமைந்துள்ளன.

இவ்வாறிருக்க இலங்கையில்தேர்தல்கள் நெருங்கி வருவதால், எதிர்வரும் காலங்களில் இது போன்ற கருத்துக் கணிப்புகள் பல இடம்பெறும். அவற்றை முன்னெடுப்பவர்கள் யார்? அவர்களின் பின்புலம் என்ன? போன்ற கேள்விகளைக் கேட்டு, பதில் தேடினால் அந்த கருத்துக் கணிப்புகளின் முடிவுகள் எந்தளவுக்குச் சரியானவை என்பதை ஊகித்துக் கொள்ள முடியும். சரி, இலங்கையில் எப்போது, எந்தத் தேர்தல் நடக்கும் விரைவில் தெரியவரும்.

28.02.2024


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X