2024 டிசெம்பர் 21, சனிக்கிழமை

கொடிகள் இல்லாத நாடுகள் பட்டினியால் சாக வேண்டும்

Janu   / 2024 ஒக்டோபர் 06 , பி.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய கிழக்கு நாகளில் மட்டுமன்றி, சர்வதேசத்திலும் ஒருவகையான பதற்றமான நிலைமையே காணப்படுகின்றது. அந்தளவுக்கு யுத்த மேகம், கருக்கட்டிக்கொண்டிருக்கின்றது. உக்ரேனுக்கு எதிராக ரஷ்யா தாக்குதல்களை ஆரம்பித்த பின்னர், அந்த அச்சம் மூண்டது. இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதல்களை அடுத்து தற்போது அந்த அச்ச நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.

இஸ்ரேல் மீதான ஏவுகணை தாக்குதலை ஈரான். செவ்வாய்க்கிழமை (01) நள்ளிரவில் தொடங்கியது. இதில், ஈரான் உண்மையான சேதத்தை செய்ய விரும்பியது, இஸ்ரேலின் பதில், கடந்த முறை போல் கட்டுப்படுத்தப்படாமல் இருக்கலாம் என சர்வதேச செய்திகள் தலைப்பிட்டுள்ளன.

பாலஸ்தீனத்தின் காசா, லெபனான் மீதான தாக்குதல்கள், ஹிஸ்புல்லா தலைவர்கள் படுகொலை உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே இந்த தாக்குதல்கள் ஈரானால் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அச்செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.

 பேலிஸ்டிக் ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதை ஈரான் உறுதிப்படுத்தியுள்ளது. இஸ்ரேல் பதில் தாக்குதலில் ஈடுபட்டால் மேலும் தாக்குதல் தொடுப்போம் என்று ஈரான் மிரட்டல் விடுத்துள்ளது. இது ஈரான் புரட்சிகர காவல் படையின் முதல் தாக்குதல் என்று ஈரான் பாராளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவு கமிட்டி தலைவர் இப்ராகிம் அஸிஸி தெரிவித்துள்ளார்.

"இஸ்ரேலின் ராணுவ மையங்கள் மற்றும் தளவாடங்களே எங்கள் இலக்காக இருந்தன. கணிப்புகள் ஒருவேளை தவறானால் பொதுமக்களும் கூட பாதிப்புகளை சந்திக்கும் நிலையும் வரலாம். இஸ்ரேல் மீண்டும் தவறிழைத்தால் அடுத்தக்கட்டமாக இரண்டாவதாக நடத்தப்படும் தாக்குதல் பேரழிவை ஏற்படுத்துவதாக இருக்கும்" என்று அவர் கூறியிருந்தார்.

இதனிடையே, ஈரானில் வாழும் இலங்கை பிரஜைகளுக்கு எவ்விதமான பாதிப்புகளும் இல்லையென, வெளிநாட்டலுவல்கள் அமைச்சுஅறிவித்துள்ளது. எனினும், ஈரானுக்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்குமாறு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்தியர்களுக்கு அறிவித்துள்ளது. இதேபோல, ஏனைய நாடுகளும் தங்களுடைய பிரஜைகளுக்கு அறிவுறுத்தல்களை விடுத்திருக்கலாம்.

எதிர்பார்க்கப்பட்ட படியே இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், இஸ்ரேல் இனி என்ன செய்யப் போகிறது? மத்திய கிழக்கில் நிலை கொண்டுள்ள அமெரிக்க ராணுவம் என்ன செய்கிறது? மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அதிகரிக்கும் பதற்றம் உலகளாவிய அளவில், குறிப்பாக கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் என்ன? உள்ளிட்ட விடயங்கள் கேள்வியை ஏற்படுத்தியுள்ளன.

இதற்கிடையே, ஈரானின் இந்த தாக்குதல்களை அடுத்து கச்சா எண்ணெயின் விலையும் திடீரென அதிகரித்துள்ளது. இது, எரிபொருட்களை கொள்வனவு செய்யும் நாடுகளின் மீது பொருளாதார ரீதியில் கடுமையான தாக்கத்தை செலுத்தும், அந்தந்த நாடுகளில் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும். சாதாரண மக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகுவார்கள். ஒருசில நாடுகள் மீண்டும் கடன்கேட்டு கையேந்த வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமை ஏற்படும்.

பொதுவாக கருதுவதாயின் ஹிஸ்புல்லாஹ் போரிலிருந்து விலக வேண்டும். இல்லையெனில் இஸ்ரேல் லெபனானை தரைமட்டமாக்கும், ஈரானின் ஒரு பகுதியையும் தரைமட்டமாக்கும். உலகப்போர் ஏற்படும் அபாயம் எப்போதும் உண்டு. அப்படி நடந்தால் நம்மைப் போன்ற கொடிகள் இல்லாத நாடுகள் பட்டினியால் சாக வேண்டியிருக்கும் என்பதே எமது அவதானிப்பாகும்.

2024.10.04


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .