2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

இரண்டு உயிர்களைத் தின்ற மீனும் மாடுகளுக்கான அம்மையும்

Editorial   / 2023 ஜூன் 13 , பி.ப. 01:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரண்டு உயிர்களைத் தின்ற மீனும் மாடுகளுக்கான அம்மை நோயும்

ஏதோவொரு வகையில் சம்பாதித்துக்கொள்ள வேண்டும் என்ற வெறியோடு, இராப்பகலாக உழைப்போரும், குறுக்கு வழியில் சம்பாதித்து திடீரென முன்னேறுவோரும், சட்டவிரோதமான வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு, பணத்தை சம்பாதித்துக்கொள்வோரும் இருக்கத்தான் செய்கின்றனர்.

இதற்கிடையே, விலைகள் குறைவடையும் போது குறைத்தும், அதிகரிக்கும் போது அதிகரித்தும், ஒரு நியாயமான முறையில், பொருட்களை விற்பனை செய்வோரும் உள்ளனர். அவ்வாறானவர்களுக்கு மத்தியில் காலாவதியான திகதியை நீட்டித்து, புதிய பொருளாகக் காண்பித்தும், கலப்படம் செய்தும் விற்பனை செய்கின்றவர்களும் உள்ளனர்.

வர்த்தகர்கள் தங்களுடைய வர்த்தகத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லவேண்டுமாயின், நுகர்வோரை ஏமாற்றக்கூடாது. ‘மழைக்கு முளைக்கும் காளான்களைப் போல’, வர்த்தகத்தில் ஈடுபடுவோர், நுகர்வோரை இலகுவாக ஏமாற்றிவிடுவர். தாங்கள் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்பதை புரிந்துகொண்ட நுகர்வோர், ஏமாற்றப்பட்ட கடையின் பக்கமே தலையைவைத்து படுக்கமாட்டார்.

காலாவதியான பொருட்களை உட்கொண்ட பலருக்கு ஒவ்வாமை ஏற்பட்டு பாதிக்கப்படுகின்றனர். சிலர் மரணித்தும் உள்ளனர். மட்டக்களப்பு, மாங்காட்டில் நஞ்சு மீனை சாப்பிட்ட மகளும், தாயும் உயிரழந்துள்ளனர்; மற்றுமொருவர் இன்னும் சிகிச்சைப்பெற்று வருகின்றார்.

இதில், மீனவர்கள் மீது குற்றஞ்சாட்டமுடியாது. ஏனெனில், மீன் வர்த்தகத்தை முடித்துக்கொண்டு தங்களால் விட்டுச் செல்லப்பட்ட நஞ்சு மீனை இந்தக் குடும்பத்தினர் எடுத்துவந்தே சமைத்து உண்டுள்ளனர்.

தற்போதைய சூழ்நிலையில் பல குடும்பங்களுக்கு சாப்பாட்டுக்கு பெரும் கஷ்டம் ஏற்பட்டுள்ளது. இலவசமாகக் கிடைக்கும் உணவுகளையும் பொருட்களையும் பலரும் விரும்புகின்றனர். அதற்காக, கழித்து ஒதுக்கப்பட்ட, குப்பைகளில் வீசப்பட்ட பொருட்களை, பழுதடைந்த பகுதியை வெட்டி அகற்றிவிட்டு குவியலாக விற்கும் பொருட்களை கொண்டுவந்து சமைப்பதை விட்டுவிடவும்.

ஒருவேளை பட்டினியில் கிடந்து, பல ஆண்டுகளுக்கும் உயிர்வாழலாம். ஆனால், காலாவதியான உடலுக்கு ஒவ்வாத சமையல் பொருட்களை சமைத்து உண்டு, நோய்களைத் தொற்றிக்கொண்டு சதா காலமும் நோயாளியாக மாறிவிடக்கூடாது.

எமது நாட்டைப் பொறுத்தவரையில், மாடுகளுக்கு ஒரு வகையான அம்மை நோய் பரவியுள்ளது. வடமேல் மாகாணத்தில் வளர்க்கப்படும் மாடுகளுக்கு இனங்காணப்பட்ட அந்த நோய், கிழக்கு, மத்திய ஆகிய மாகாணங்களில் வளர்க்கப்படும் மாடுகளுக்கும் பரவி, மேல் மாகாணத்துக்கும் பரவியுள்ளது.

இயற்கையாக மரணிக்கும், இறைச்சிக்கு எடுத்துக்கொள்ளப்படும் விலங்குகளை வெட்டி, இறைச்சிக் கடைகளுக்கு விற்பனை செய்யப்படும் சம்பவங்கள் தொடர்பிலான செய்திகளை பலரும் கேள்விப்பட்டிருக்கலாம். மாட்டிறைச்சியிலும் அதே நடைமுறையை சிலர் பின்பற்றலாம்.  ஆகையால், மாட்டிறைச்சியை உணவாக எடுத்துக்கொள்வோர் விழிப்பாக இருக்கவேண்டும்.

மேலே குறிப்பிட்ட மாகாணங்களுக்கு இடையில், மாட்டிறைச்சியை கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும், மாகாணங்களுக்கு இடையில் கடத்துவதற்கும் முயலக்கூடும் என்பதை நினைவில் கொள்வது அவசியமாகும்.

நாம், ஏற்கெனவே வலியுறுத்தியதைப் போல், இந்த அம்மை நோயை குணப்படுத்துவதற்கான அதிரடி நடவடிக்கையை விடயதானத்துக்குப் பொறுப்பானவர்கள் எடுக்கவேண்டும். இல்லையேல், பண்ணையாளர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும்.  13.06.2023

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X