2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை

இனவாதத்தை தூண்டி அரசியல் சூடு காய முற்படக்கூடாது

Janu   / 2024 டிசெம்பர் 05 , பி.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்த நாட்டில் இனவாத அரசியலுக்கு இடமளிக்கப் போவதில்லை. அவ்வாறு வந்தால் சட்டம் முழுமையாக அமல்படுத்தப்படும் என்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அறிவித்துள்ளது.  தெற்கிலும் வடக்கிலும் உள்ள மக்கள் அரசாங்கத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்ற தயாராகவே புதிய அரசாங்கம் இருக்கிறது என்றும் அறிவித்துள்ளது.  

இந்நாட்டு அரசியலின் முக்கிய அம்சம் என வர்ணிக்கக்கூடிய இனவாத அரசியலில் ஈடுபட்டவர்களுக்கும் அதன் மூலம் அதிகாரத்தைப் பெற முயல்பவர்களுக்கும் ஏற்பட்ட கதி கடந்த பொதுத் தேர்தலின் பின்னர் காணக்கூடிய உண்மையாகும்.

இவர்களது இனவாத மதவாத அரசியலும் நாட்டின் வீழ்ச்சிக்கு ஒரு காரணமாக அமைந்தது என்பதை சொல்லத் தேவையில்லை. இனவாதம் வேண்டாம் என்று கடந்த காலங்களில் சுட்டிக் காட்டினாலும், மீண்டும் மீண்டும் அதே போன்று நடந்தது. எனினும், அதற்கு எதிராக எவ்வாறு ​புதிய அரசாங்கம்   செயல்பட வேண்டும் என்பதை நினைவூட்டவோ, காட்டவோ தேவையில்லை என நினைக்கின்றோம். ஏனெனில், கடந்த ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல் பிரசாரங்களில் போது, இனவாதத்தை, தேசிய மக்கள் சக்தி கையிலெடுக்கவே இல்லை என்பதை உறுதியாக கூற முடியும்.

ஜனாதிபதித் தேர்தல் பிரச்சார மேடைகளில் ஒன்றில் உரையாற்றிய தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரும் புதிய ஜனாதிபதியுமான அனுரகுமார திசாநாயக்க,“ நான் தோற்றாலும் பரவாயில்லை, இனவாதம் பேசமாட்டேன்” என்றார்.

இந்த புதிய அரசாங்கத்தை வழிநடத்த வேண்டியது எதிர்க்கட்சிகளின் முக்கிய பங்காகும். எதிர்க்கட்சிகளின் பங்கு அரசாங்கத்தின் அனைத்தையும் எதிர்ப்பது அல்ல, ஒரு நாடாக நம்மை உயர்த்துவதற்கான அரசாங்கத்தின் நல்ல செயல்களுக்கு ஆதரவளிப்பதாகும். எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் எதிர்கால அரசாங்கத்தை அமைக்கும் நோக்கில் செயற்படுகின்றனர், அவர்களின் பாத்திரங்களை நன்கு உணர்ந்து செயல்பட்டால் ஒரு நாடாக நாம் மகிழ்ச்சி அடைய கூடியதாக இருக்கும்

கடந்த அரசாங்கங்களின் முன்னாள் தலைவர்களின் செயற்பாட்டின் பெறுபேறுகளை இன்று அவர்கள் பெற்றுள்ளனர். அரசியலில் மட்டுமல்ல, வாழ்க்கைத் தத்துவத்திலும் இது ஒரு பொதுவான கோட்பாடு. புதிய பாராளுமன்ற உறுப்பினர்களும் இதனைப் புரிந்து கொண்டு கையாள்வதில் கவனம் செலுத்துவது அனைவருக்கும் நல்லது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (03) உரையாற்றிய ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ, ” இனவாதத்தை ஒடுக்குவதற்கு தற்போது உள்ள சட்ட ஏற்பாடுகள் போதுமானதாக இல்லை என்றால் புதிய சட்டங்கள் கொண்டுவந்தேனும் அதை செய்துமுடிப்போம்” என்றார்.

“அரசியல் நோக்கங்களுக்காக  இனவாதத்தை தூண்டுவதற்கு சில தரப்புகள் முற்படுகின்றன. இனவாதத்தை தூண்டி நாட்டை நாசமாக்க முற்படுகின்றனர். இனவாதத்துக்கு இடமளிக்கப்படமாட்டாது என்று தெரிவித்துள்ளார் ​அவை வரவேற்கத்தக்கது.

நாடு பொருளாதார ரீதியில் கடும் பள்ளத்தில் விழுந்துள்ளது. ஒவ்வொரு குடும்பங்களும் அடுத்த நொடி பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கின்றன. பொருட்களின் விலைகளில், சேவைகளின் கட்டணங்களில் பாரிய மாற்றங்கள் இல்லை. ஆகையால், பொருளாதார பிரச்சினைகளை தீர்க்க கைகோர்க்க வேண்டும். இனவாதத்தை தூண்டி அரசியல் சூடு காய முற்படக்கூடாது.

05.12.2024


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .